Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

Significance Of Tamil Puthandu In Tamil | | தமிழ்ப் புத்தாண்டு சிறப்புகள்

April 10, 2020 | Total Views : 1,208
Zoom In Zoom Out Print

சித்திரை வருடப் பிறப்பு சிறப்புகள்

தமிழ் மாதமாகிய சித்திரை, தமிழ் வருடத்தின் முதல் மாதமாகக் கருதப் படுகிறது. எனவே, இந்த மாதத்தின் முதல் நாள், தமிழ் வருடத்தின் முதல் நாளாகத் திகழ்கிறது. இந்த சித்திரை முதல் நாளே, தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தை முன்னிலைப் படுத்தி அமையும் வருடம் ஆதலால், தமிழ் ஆண்டுப் பிறப்பு, சித்திரை வருடப் பிறப்பு என்றும் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது 

இந்த மாதமே, வட மொழியிலும், வட மாநிலங்களில் பின்பற்றப்படும் பஞ்சாங்க முறைகளிலும் சைத்ர மாதம் என்று அழைக்கப்படுகிறது.     

நாள், வாரம், மாதம் ஆகியவற்றைக் குறிக்கும் பஞ்சாங்கம் அல்லது நாள்காட்டிகள், பொதுவாக, சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்பட்டு, வடிவமைக்கப்படுகின்றன. எனவே சூரியனை அனுசரித்துச் செல்லும் இந்த முறை, சௌரமான முறை எனப்படுகிறது. 

இந்த முறைப்படி, 12 ராசிகள் வழியாகப் பயணம் செய்யும் சூரியன், இவற்றில் ஒவ்வொரு ராசிகளுக்குள்ளும் தங்கி இருக்கும் காலமே, ஒரு தமிழ் மாதமாகக் கணக்கிடப்படுகிறது. மேஷ ராசி என்பது இந்தப் 12 ராசிகளில் முதல் ராசியாகும். ஆகவே, சூரியன் இந்த முதல் ராசியான மேஷத்தில் இருக்கும் காலம், முதல் மாதமாகிய சித்திரை எனவும், மேஷ ராசியில் பிரவேசம் செய்யும் நாள் சித்திரை வருடப் பிறப்பு எனவும், தமிழ்ப் புத்தாண்டு எனவும் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலத்தில் இது தமிழ் நியூ இயர் என்று அழைக்கப்படுகிறது.

இதே முறைப்படி, விஷூ எனப்படும் மலையாளப் புத்தாண்டு, பைசாகி என்ற பஞ்சாபிப் புத்தாண்டு, பிஹூ எனப்படும் அச்சாமியப் புத்தாண்டு போன்றவையும் கொண்டாடப்படுகின்றன. 

தமிழ்ப் புத்தாண்டு, வழக்கமாக, ஏப்ரல் மாத மத்தியில் துவங்கும். அது போலவே, இந்தத் தமிழ்ப் புத்தாண்டு 2020 உம், ஏப்ரல் 14 ஆம் தேதி, செவ்வாய்க் கிழமை அன்று பிறக்கிறது. சூரியன் மேஷ ராசியில் 13 ஆம் தேதி இரவே பிரவேசம் செய்தாலும், தமிழ் வருடப் பிறப்பு என்பது, அதற்கு அடுத்த நாளாகிய ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.      

சார்வரி வருடம்

தமிழ் வருடங்கள் 60 எனக் கணக்கிடப்பட்டுள்ளன. இவை, சுழற்சி முறையில், அதே வரிசையில், மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த 60 தமிழ் வருடங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. இவ்வாறு, இந்த ஆண்டு பிறக்கும் தமிழ் வருடம், சார்வரி என்று அழைக்கப்படுகிறது. எனவே, தமிழ்ப் புத்தாண்டு 2020 என்பது சார்வரி வருடப் பிறப்பாக அமைகிறது.

சார்வரி என்பதற்கு, ‘ஒளி’, ‘அந்தி வேளை’, ‘சந்தியா கால வெளிச்சம்’ என்று பொருள் கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த சார்வரி வருடத்தை புதன் கிரகம் ஆட்சி செய்கிறார். நமது அறிவு, பேச்சாற்றல் போன்றவற்றைக் குறிக்கும் புதன், இந்த சித்திரை வருடப் பிறப்பில், நமக்கு நம்பிக்கை, முன்னேற்றம் போன்றவற்றைத் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.               

சித்திரை    

பண்டைய காலக்கணக்கின் படி, சித்திரை, வசந்த காலமாகக் கருதப்படுகிறது. தவிர, சதுர்வர்க சிந்தாமணி என்றைய பண்டைய நூல் ஒன்று, இதற்குப் புராண முக்கியத்துவத்தையும் அளிக்கிறது. சைத்ர மாதம் எனப்படும் இந்த சித்திரை மாதத்தின் வளர்பிறை, பிரதமை நாளில் தான், படைப்புக் கடவுளான பிரும்மா, அனைத்து உலகங்களையும் படைத்தார் என்று இந்த நூல் கூறுகிறது. இது போன்ற பெருமை படைத்த இந்த மாதத் துவக்கம், புதிய ஆண்டின் தொடக்க நாளாகவே போற்றப்படுகிறது.     

புராணத் தொடர்புகள்          

விஷ்ணு பகவானின் பூர்ண அவதாரம் எனக் கருதப்படும் ராமபிரான் அவதரித்தது, சைத்ர மாதத்தில் தான், என்கிறது வால்மீகி ராமாயணம். பஞ்சாங்க வேறுபாடுகளின் காரணமாக காலகட்டம் சற்றே மாறுபட்டிருந்தாலும், இந்த மாதத்தையே நாம் சித்திரை எங்கிறோம். ‘சைத்ர மாத, சுக்ல பட்ச நவமித் திதி அன்று, புனர்வசு நட்சத்திரம் ஆட்சி செய்யும் நாளில், குருவும் சந்திரனும் கடக லக்னத்தில் உதய கதியில் இருக்க, ஐந்து கிரகங்கள் உச்சகதி பெற, கௌசலையின் மகனாக, தெய்வ அம்சங்கள் பலவுடன் ராமர் அவதரித்தார்’ என்கிறார் வால்மீகி முனிவர்.             

ராம அவதாரம் மட்டுமின்றி, மற்றொரு அவதாரமான மத்ஸ்யம் எனப்படும் மீனாக விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்ததும் இந்த சைத்ர மாத வளர்பிறை பஞ்சமியில் தான் என்று புராணம் கூறுகிறது. விஷ்ணுவின் முதல் அவதாரமாகக் கருதப்படும் இந்த மத்ஸ்ய அவதாரத்தின் மூலம், அவர், உலகத்தைப் பெரும் பிரளயத்திலிடருந்து காப்பாற்றி, உயிர்களை இங்கு மீண்டும் தோன்றச் செய்தார் எனப் பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.     

சித்திரைத் திருவிழாக்கள்  

சித்திரையும், விழாக்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல எனலாம். சித்திரை வருடப் பிறப்பை மக்கள் தங்கள் இல்லங்களில் கொண்டாடுவது போலவே, புகழ் பெற்ற ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் தெய்வங்கள் பலவும், பிரும்மாண்டமான திருவிழாக்களைக் கொண்டாட, இந்த மாதத்தையே தேர்ந்தெடுத்துள்ளனர் என்று சொல்லலாம். 

சரித்திரப் புகழும், புராணப் பெருமையும் ஒருங்கே பெற்ற மதுரை மாநகரில் நடைபெறும், பிரும்மாண்டமான வருடாந்திரத் திருவிழா, சித்திரைத் திருவிழா என்றே அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் நடைபெறும் இந்தப் பெருவிழாவில் தான், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது போன்ற தெய்வீக நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவற்றில் லட்சக்கணக்கான மக்கள் பங்கு கொண்டு, இறையருள் பெறுகிறார்கள்.   

இது போலவே, வைணவத் திருக்கோயில்கள் பலவற்றிலும் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் பெரும் உற்சவங்கள் சித்திரை மாதத்திலேயே நடைபெறுகின்றன. இவற்றில் புகழ் பெற்ற ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் திருவிழாவும் அடங்கும். 

இந்த மாதத்தில் வரும் வளர்பிறைப் பௌர்ணமி, சித்ரா பௌர்ணமி என்ற பெயரில், மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்தப் புனித நாளில் பல வழிபாடுகளும், சமய, ஆன்மீக நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.            

சித்திரை வருடப் பிறப்பு கொண்டாட்டம் 

இத்தனை சிறப்புகள் கொண்ட சித்திரை வருடப் பிறப்பை, பாரம்பரிய முறைப்படியும், பெரும் உற்சாகத்துடனும் மக்கள் கொட்டாடுகிறார்கள். சிலர் புத்தாடை அணிகிறார்கள். இறைவனையும், பெரியவர்களையும் வணங்கி ஆசி பெறுகிறார்கள். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு 2020, தமிழ் நியூ இயர் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.   

இன்பம், துன்பம் என வாழ்க்கையின் பல உணர்வுகளையும் குறிக்கும் வகையில், மாந்தளிர், வேப்பம்பூ, வெல்லம் ஆகியவற்றால் செய்யப்பட்ட, புளிப்பு, கசப்பு, இனிப்பு கலந்த விசேஷமான பச்சடி பல வீடுகளில் அன்று சமைக்கப்படுகிறது. இத்துடன் கூட, பருப்பு வடை பாயசத்துடன் கூடிய பெரும் விருந்தையும் மக்கள் உண்டு மகிழ்கிறார்கள்.    

இவ்வாறு ஆண்டு முழுவதற்குமான நம்பிக்கையைச் சுமந்து வருகிறது, சித்திரை வருடப் பிறப்பு.

 

banner

Leave a Reply

Submit Comment