Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

Vihari Tamil New Year 2020 The Celebration Begins | 'சம்வத்ஸர’ சுழற்சியில் இன்று பிறக்கிறது ‘சார்வரி’ தமிழ்ப் புத்தாண்டு!

April 10, 2020 | Total Views : 1,019
Zoom In Zoom Out Print

தமிழ்ப் புத்தாண்டு - அறிமுகம்

தமிழ் மாதமாகிய சித்திரை மாதப் பிறப்பு என்பது, ஆண்டு தோறும், புது வருடப் பிறப்பாகக் கருதப்படுகிறது. தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக இது, ஏப்ரல் மாதத்தின் மத்தியில் வருகிறது. இவ்வாறு, இந்த 2020 ஆம் வருடம், ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று, தமிழ்ப் புத்தாண்டு 2020 பிறக்கிறது.     
உலகின் பண்டைய கலாசாரங்கள் அனைத்தும், நாள், வாரம், மாதம், வருடம் போன்றவற்றைக் கொண்ட ‘பஞ்சாங்கம்’ எனப்படும் நாள்காட்டிகளைப் பயன்படுத்தி வந்துள்ளன. இது ‘ஆல்மனாக்’ அல்லது ‘காலண்டர்’ எனப்படும். தமிழர்களின் பழம் பெரும் கலாசாரமும் இதற்கு விதி விலக்கல்ல.
பொதுவாக, மாதங்களும், வருடங்களும் சூரியனின் போக்கை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்பட்டுள்ளன.

தமிழ்ப் பாரம்பரியமும் இந்த முறையையே பின்பற்றுகிறது. சூரியன் தனது வான்வெளிப் பயணத்தின் பொழுது 12 ராசிகளின் வழியாகச் செல்கிறார். அவர் ஒவ்வொரு ராசியிலும் தங்கியிருக்கும் காலம், ஒரு குறிப்பிட்ட மாதமாகக் கணக்கிடப்படுகிறது. இவ்வாறு, முதல் ராசியான மேஷ ராசியில் அவர் தங்கி இருக்கும் காலம், சித்திரை மாதமாகக் கருதப்படுகிறது. அவர் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளான, சித்திரை முதல் நாள், ஒரு புதிய தமிழ் வருடத்தின் துவக்கமாகவும், தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. இது சித்திரை வருடப் பிறப்பு என்றும், ஆங்கிலத்தில் தமிழ் நியூ இயர் என்றும் கூட வழங்கப்படுகிறது.  

தமிழர்கள் காலத்தைக் கணக்கிடும் முறைப்படி, வசந்த காலம் என்பது சித்திரை மாதத்திலேயே பிறக்கிறது; எனவே, இந்த மாதப் பிறப்பு புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது என்ற கருத்தும், சிலரிடையே நிலவுகிறது.    

பல்வேறு மொழி பேசும், கலாசாரத்தைப் பின்பற்றும் மக்கள் இது போன்ற புத்தாண்டுப் பிறப்பை, பலவகைப் பெயர்களில், பல்வேறு விதமாகக் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக தெலுங்கு வருடப் பிறப்பு உகாதி என்றும், மலையாள வருடப் பிறப்பு விஷூ என்றும் அழைக்கப்படுகிறது. 
இவ்வாறு புதிய தமிழ் வருடம் பிறக்கும் நாள், தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்கப்பட்டாலும், ஒவ்வொறு தமிழ் வருடத்திற்கும் ஒரு தனிப் பெயர் உள்ளது.  

   
சம்வத்ஸர சுழற்சி

ஆண்டு அல்லது வருடம் என்பது, வடமொழி எனப்படும் சமஸ்கிருதத்தில் ‘சம்வத்ஸரம்’ என்று அழைக்கப்படுகிறது. இது போன்ற, குறிப்பிட்ட 60 ஆண்டுகள் அல்லது சம்வத்ஸரங்கள், ஒரு தொகுதியாகக் கருதப்படுகின்றன. இந்த 60 ஆண்டுக் காலப் பொழுதில் இருக்கும் 60 வருடங்களுக்கும் தனித் தனிப் பெயர்கள் உள்ளன. இந்த 60 ஆண்டுத் தொகுதி அல்லது காலகட்டம், சுழன்று, சுழன்று மீண்டும், மீண்டும் வருவதாகக் கணக்கிடப்படுகிறது. இதனால், இந்த 60 வருடத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வருடமும், 60 வருடங்களுக்கு ஒருமுறை, மீண்டும் மீண்டும் திரும்பி வருகிறது. வருடங்களின் இந்த சுழற்சி என்பது, ‘சம்வத்ஸர சுழற்சி’ என்று அழைக்கப்படுகிறது.

இது சார்வரி ஆண்டு

இந்த சம்வத்ஸர சுழற்சியின் படி, இந்த ஆண்டு பிறக்கும் தமிழ் ஆண்டு சார்வரி வருடம் ஆகும். சார்வரி என்ற சொல்லுக்கு ‘ஒளி’ அல்லது ‘அந்தி வேளை ஒளி’ என்று பொருள். இந்த சார்வரி ஆண்டு, 2020 ஏப்ரல் 13 ஆம் தேதி, திங்கட்கிழமை இரவு 08.39 மணிக்குப் (இந்திய நேரம்) பிறக்கிறது. இருப்பினும், இந்த சார்வரி வருடப் பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு 2020 ஆக, அதற்கு மறுநாள், ஏப்ரல் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. 
ஜனவரி மாத மத்தியிலிருந்து ஜூலை மாத மத்தியப் பகுதி  வரையிலான காலம், சூரியனின் வடதிசைப் பயணத்தைக் குறிக்கும், புனிதமான உத்தராயணம் ஆகும். எனவே ஒவ்வொரு வருடத்தைப் போலவே, இந்தத் தமிழ்ப் புத்தாண்டும், உத்தராயண புண்ணிய காலத்தில் பிறக்கிறது.

  
தமிழ்ப் புத்தாண்டு 2020- பொதுப் பலன்கள்

மேலும், ஒவ்வொரு தமிழ் வருடத்தையும் ஒரு கிரகம், அரசனாக இருந்து ஆட்சி செய்வதாகக் கருதப்படுகிறது. அவ்வாறு, இந்த சார்வரி ஆண்டை, புதன் கிரகம் அரசாட்சி செய்கிறது என்பது நம்பிக்கை. ‘புத்தி காரகன்’ எனப் போற்றப்படும் புதன், நம் அறிவாற்றலைக் குறிப்பவர் ஆவார். இவர் நம்பிக்கை, நல்ல மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஆகியவற்றை, இந்த ஆண்டு நமக்குத் தருவார், என்று நம்பப்படுகிறது. வேத ஜோதிடத்தில் இளமையான கிரகம் என்று அழைக்கப்படும் புதன், அரச பதவியை வகிப்பது, நமக்கு உள் வளர்ச்சி, புற வளர்ச்சி என இரண்டையும் அளிக்க வல்லது. இதன் காரணமாக, ஒருபுறம் ஆன்மீக ஈடுபாடு ஏற்படக் கூடும். அதே நேரம், வணிகம் சிறக்கவும், அதிக முதலீடுகள் செய்யவும் வாய்ப்புகள் உருவாகும். 


புத்தாண்டுக் கொண்டாட்டம்

ஆண்டாண்டு காலமாக, மக்கள், தமிழ்ப் புத்தாண்டை பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். பாரம்பரியப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றியும், வழிபாடுகளை நடத்தியும், இந்த நாளை அனுசரிக்கும் அவர்கள், அதே நேரம், பல சுவைகளும் கலந்த விருந்து உண்டும், நண்பர்கள், உறவினர்களுடன் நேரத்தை இனிமையாகச் செலவிட்டும், இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.  

இளவேனிற் காலமாகிய சித்திரையையும், புத்தாண்டையும் ஒரு சேர வரவேற்கும் விதமாக, மக்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடுகிறார்கள். இந்த நாளில், மருந்து நீர் எனப்படும் விசேஷமான மூலிகை நீரில் குளிப்பது, ஒரு பாரம்பரிய வழக்கமாக உள்ளது. மஞ்சள், மிளகு, துளசி இலை, வில்வ இலை போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தத் தண்ணிரில் நீராடுவது, உடல் நலத்துக்கு நன்மை விளைவிக்கும். அத்துடன் கூட, அந்த வருடம் யாருக்காவது, ஏதாவது நட்சத்திர தோஷம் ஏற்பட்டால், இந்தக் குளியல் அந்த தோஷ விளைவுகளை நீக்கும் அல்லது குறைக்கும், என்பது நம்பிக்கை.


நீராடிய பிறகு, சிலர் புத்தாடை அணிகிறார்கள். ஒரு சிலர் சிவப்பு அல்லது சிவப்பும், வெள்ளையும் கலந்த உடை அணிகிறார்கள். தூய ஆடை அணிந்த பிறகு, கடவுளை வணங்கி இறை வழிபாடு செய்கிறார்கள். பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்களை வணங்கி அவர்களது ஆசிகளைப் பெறுகிறார்கள். பின்னர் நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்தோ, தொடர்பு கொண்டோ, அவர்களுடன் சித்திரை வருடப் பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு, தமிழ் நியூ இயர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.  

  
சுகம், துக்கம், சிரிப்பு, சோகம் என பலதரப்பட்ட அனுபவங்களும் நிறைந்தது தான் வாழ்க்கை. இதைக் குறிக்கும் வகையில், அனைத்து வகை சுவைகளும் இந்தப் புத்தாண்டு தினத்தின் சிறப்பு விருந்தில் இடம் பெறுகின்றன. இந்தக் கால கட்டத்தில் எங்கும் நிறைந்திருக்கும் மாந்தளிருடன் கூட, கசப்பு சுவையுடைய வேப்பம் பூவையும், இனிமையான வெல்லத்தையும் கலந்து, செய்யப்படும் விசேஷமான பச்சடி உணவு, இவ்வாறு புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு எனப் பல சுவைகளையும், இந்தப் புத்தாண்டு நாளில் தருகிறது. இத்துடன் கூட பல வீடுகளில், வெப்பத்தைத் தணிக்கும் நீர்மோர், இனிப்பைக் கூட்டும் பானகம் ஆகியவையும் அருந்தப்படுகின்றன.

பின்னர் பருப்பு, வடை பாயசம் இவற்றுடன் கூடிய பெரிய விருந்து ஒன்றை, இந்த நாளில், மக்கள், குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினருட உண்டு மகிழ்கிறார்கள்.  

     
இவ்வாறு நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் புதிய வருடத்தை மக்கள் துவக்குகிறார்கள். 


 

banner

Leave a Reply

Submit Comment