Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
Search

முக்தி தரும் 7 தலங்கள் | 7 Mukthi Sthalam

November 22, 2021 | Total Views : 2,103
Zoom In Zoom Out Print

முக்தி தரும் தலங்கள் 

மனித வாழ்விற்கு வேதம் கூறும் நான்கு தருமங்கள் – அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு ஆகும். அனைத்தையும் அனுபவித்து இன்புற்று, சலித்து சளைத்து இறுதியில் நாம் வேண்டுவது முக்தி என்னும் வீடுபேறு  ஆகும். இந்தப் பூமியில் பிறந்து வாழ்வதை பிறவிச் சாக்காடு, எனவும் சம்சார சாகரம் கடந்து இறை நிலை காண வேண்டும் என்பதும் சான்றோர் மற்றும் ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் நம் பிறப்பின் இறுதி நிலையான முக்தி வேண்டி நாம் வழிபடுவதற்கு சில ஆலயங்கள் உள்ளன. இவை முக்தி என்னும் வீடுபேறு அளிக்கும் தலங்கள் ஆகும். அவற்றைப் பற்றிக் காண்போம் வாருங்கள்.

1.திருவாரூர்-பிறக்க முக்தி தருவது
2.சிதம்பரம் -தரிசிக்க முக்தி தருவது
3.திருவண்ணாமலை -நினைக்க முக்தி தருவது
4.அவினாசி - கேட்க முக்தி தருவது
5.திருவாலவாய் – சொல்ல முக்தி தருவது
6.காஞ்சீபுரம் -வாழ முக்தி தருவது 
7.காசி -இறக்க முக்தி தருவது

முக்தி தரும் தலங்கள் மற்றும் பரிகாரங்களை உடனே பெற எங்கள் ஜோதிடர்களை அணுகுங்கள்  

 

திருவாரூர் – பிறக்க முக்தி அளிக்கும் தலம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் பெரிய கோவில் என்றும் அழைக்கப் படுவது உண்டு. பஞ்ச பூதத் தலங்களில் இது பூமியைக் குறிக்கும் தலம் ஆகும். சப்தவிடத் தலங்களுள் மூலாதாரத் தலம் ஆகும்.  பிறந்தால் முக்தி தரக் கூடிய தலம் என்ற பெருமை கொண்டது இத்தலம். இந்த மண்ணில் ஒரு ஜீவன் பிறந்து விட்டால் நிச்சயம் அந்த ஜீவன் முக்தி அடையும் என்னும் நம்பிக்கை உண்டு. 

இந்தப் பூமியில் மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொரும் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களை,  நாம் பிறக்கும் இடம் மற்றும் நேரத்தில் காணப்படும் நவக்கிரக நிலைகள் தான் நிர்ணயிக்கின்றன.  நாம் முற் பிறவியில் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப நமது தற்கால பிறவி நிகழ்கின்றது. நமது அன்றாட செயல்களை நமது கர்ம வினைகளுக்கு  ஏற்ப நவகிரகங்கள் நிகழ்வுகளாக அமையக் காரணமாகிறது.  

இத் தலத்தில் நவகிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இருந்து சிவனை வழிபடுவது போல அமைந்துள்ளது என்பது இக் கோவிலின் சிறப்பம்சம். மேலும் இங்கு நவகிரகங்களால்  ஏற்படும் தோஷங்கள் எதுவம் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அது  சூரியனைக் கண்ட பனி போல மறையும்.  
காஞ்சீபுரம் – வாழ முக்தி தரும் தலம்

"நகரேஷு காஞ்சி" என்று போற்றப்பட்ட திருத்தலம் காஞ்சீபுரம். கோயில்கள் நிறைந்த நகரம் என்ற சிறப்புடைய காஞ்சீபுரம் முக்தி தரும் தலங்களாக கருதப்படும்  நகரங்களில் ஒன்றாகும். பஞ்சபூத தலங்களில் பூமித்தலமாக விளங்குவது காஞ்சீபுரம். இங்கு பிருத்வி லிங்கமாக சிவபெருமான் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். மனம். சொல். வாக்கு என அனைத்திலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தலம். ஒருவர் தன்னால் முடிந்தவற்றை மட்டும் என்ன வேண்டும். எண்ணியபடி சொல்ல வேண்டும். சொன்னபடி நடக்க வேண்டும். இதற்கு உதாரணமாக ஒரு கதையைக் கூறலாம்.   சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தடியில் "உன்னைப் பிரியேன்" என்று சத்தியம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். சிவபெருமானை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டு பின் திருவாரூர் செல்வதற்காக சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து திருவொற்றியூரில் இருந்து சத்தியத்தை மீறி புறப்பட்டார்.  சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்றார். காஞ்சீபுரம் தலத்தில் பதிகம் பாடி சுந்தரமூர்த்தி நாயனார் இடக்கண் பார்வையை பெற்றார்.

தல வரலாறு: 

ஒருமுறை பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடிவிட்டார். இதன் காரணமாக எல்லா உலகங்களும் இருளில் மூழ்கின. உடனே சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து இருள் அகற்றினார். அம்பிகை விளையாட்டாக கண்களை மூடினாலும் அதனால் எல்லா ஜீவராசிகளுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்காக பூவுலகிற்குச் சென்று பிராயச்சித்தமாக தன்னை நோக்கி தவம் இயற்றுமாறு அம்பிகையைப் பணித்தார். அம்பிகையும் இந்த பூவலகிற்கு வந்து புனித தலமான இந்த காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கிப் பூஜித்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி அம்பிகை லிங்கத்தை தழுவி கட்டிக்கொண்டார். அவ்வாறு உமையம்மை தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார். இவ்வாறு இறைவி இறைவனை வழிபட்ட இந்த வரலாறு திருக் குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்திலும், காஞ்சிப் புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இறைவனுக்குத் தழுவக் குழைந்த நாதர் என்றும் பெயர். எனவே இத் திருத்தலம் வாழ முக்தி தரும் தலம் ஆகும். 

சிதம்பரம் – தரிசிக்க முக்தி அளிக்கும் தலம் 

மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து கோசங்களைக்  கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை நுரையிரல் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது.

ஆடல் கடவுள் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார்.  உடுக்கை ஏந்தி இருக்கும் வலக் கை,  இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிக்கும் விதமாக உள்ளது.  நெருப்பை ஏந்தி இருக்கும் இடக் கை என்னால் அழிக்க இயலும் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது.  அபய முத்திரை தாங்கிய வலது புற கீழ் கை பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது.  காலைக் காட்டும்  இடது புற கீழ் கை, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது. எனவே இத் திருத்தலம் தரிசிக்க முக்தி அளிக்கும் தலம் ஆகும். 

திருவண்ணாமலை – நினைக்க முக்தி அளிக்கும் தலம்

இந்தப் பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் பிரபஞ்சம் இயங்குகின்றது. பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற இந்த ஐந்து பஞ்ச பூதங்களுக்கும் தலம் அமைத்து நம்முன்னோர் வழிபட்டு ஆனந்த பரவசம் எய்தினர். திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம்.  சிவ பெருமானின் பஞ்ச பூதத் தலங்களுள் அக்னித் தலமாகும்.  அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது.

பிரம்மாவிற்கும் திருமாலுக்கும்  தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் எழ, இடையில் நெருப்புப் பிழம்பாக சிவன் தோன்ற ' நம்மில் யார் இதன் அடியையும் முடியையும் கண்டறிபவரே, நம்மில் பெரியவர் ' என உரைத்தனர். அதன் அடியைக் காண, திருமால் வராக (பன்றி) வடிவெடுத்து நிலத்தினைக் குடைந்து சென்று பல ஆண்டுகள் பயணம் செய்தும் அடியைக் காண இயலாமல் திருமால் திரும்ப, அன்ன வடிவமெடுத்து முடியைக் காணச்சென்ற பிரம்மர், வானிலிருந்து கீழே வரும் தாழம்பூவிடம் இது யாதென வினவ அதற்கு இது சிவபெருமானெனவும், நான் சிவனாரின் தலையிலிருந்து பல ஆண்டுகளாக விழுந்துக் கொண்டிருக்கிறேன் என உரைத்த தாழம்பூவிடம் நீ திருமாலிடம், நான் இந்த நெருப்புப் பிழம்பாக நின்ற சிவனின் முடியைக் கண்டுவிட்டேன் எனக் கூறும்படி கேட்டார் பிரம்மர். திருமால் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். பொய் உரைத்த பிரம்மனுக்கு ஆலய வழிபாடு இல்லை என்றும், துணை நின்ற தாழம்பூ சிவ வழிபாட்டிற்கு பயன்படாது என்றும் சிவன் சாபமளித்தார். இருவரும் மன்னிப்பு கோரினர். பிறகு சாப நிவர்த்தியும் அளித்தார். 

சிவபெருமான் சிவலிங்கத்தின் அடிப்பாகத்தில் பிரம்மர், நடுவில்  திருமால், மேல்பாகத்தில் சிவனும் நின்று சிவலிங்கமாகத் தோன்றினர். தன்னை நோக்கித் தவமியற்றிய பார்வதியைத் தன்னுடைய இடபது பாகத்திலமர்த்தி அர்த்தநாரீஸ்வரராய்  காட்சி அளித்தார். இத்தகைய சிறப்பு மிக்க இத் திருத்தலம் நினைக்க  முக்தி அளிக்கும் தலம் ஆகும். 

அவினாசி – கேட்க முக்தி அளிக்கும் தலம்

முக்தி எனப்படும் வீடுபேறு அளிக்கும் தலங்களாக விளங்கும் தலங்களுள் ஒன்று அவினாசி. அவினாசி லிங்கேஸ்வரர் ஆலயம் கேட்க முக்தி அளிக்கும் தலம். அதாவது நமக்கு வேண்டும் வரத்தை இறைவனிடம் கேட்க இறைவன் வரம் அளிக்கும் தலம் ஆகும். அவ்வாறு இறைவனிடம் சுந்தரர் கேட்டு மாண்ட ஒரு சிறுவன் மீண்ட தலம் இது. அவிநாசி என்ற வார்த்தையின் பொருள் அழியாத ஒன்று ஆகும். ‘விநாசம்’ என்றால் அழியக்கூடியது. அவிநாசம் என்பது அதன் எதிர்மறைச் சொல் ஆகும். தேவாரத் திருத்தலங்களுள் அவினாசி அப்பர் கோவிலும் அடங்கும். சுந்தரர் தேவாரப் பாடலை பாடியது இத்தலத்தில்தான். 

தல வரலாறு 

ஒரு சமயம் இந்த திருக்கோவில் குளக்கரையில் சில அந்தண சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு சிறுவனை குளத்தில் இருந்த முதலை விழுங்கிவிட்டது. இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் கழிந்தது. அந்த சமயத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் அந்த ஊருக்கு வருகை தந்தார். இறைவனின் பாடல்களை பாடிக்கொண்டு அங்குள்ள அக்ரகாரம் உள்ளே நுழைந்தார். வேத மந்திரங்கள் முழங்க ஒரு வீட்டில் பூணூல் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வீட்டிற்கு எதிர் வீட்டினர் வருத்தத்துடனும் அழுது கொண்டும் இருந்ததை சுந்தரர் கண்டார். மூன்று வருடங்களுக்கு முன்பு தன் மகனை அந்த முதலைக்கு இறையாக கொடுத்த பெற்றோர்களின் அழுகை சத்தம் தான் அது என்பதைக் கண்டு கொண்டார். . தன் மகன் உயிரோடு இருந்திருந்தால் தங்கள் வீட்டிலும் பூணூல் சடங்கு நடந்திருக்கும் என்று எண்ணி அவர்கள் அழுது கொண்டிருந்தனர். இவர்களின் வேதனையை அறிந்த சுந்தரர், அங்கிருந்து நேராக அவிநாசியப்பர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடி அந்த குழந்தையை உயிரோடு மீட்டுத்தர வேண்டும் என்று, அந்த சிவனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டார். சுந்தரரின் வேண்டுதலுக்கு செவி கொடுத்த இறைவன், அந்த முதலைக்கு ‘ஐந்து வயது உடைய சிறுவன் மூன்று ஆண்டுகள் கழித்து எட்டு வயதில் எப்படி இருப்பானோ அந்த தோற்றத்திலேய அந்தப் பாலகன் முதலை வாயில் இருந்து வெளியில் வர வேண்டும்’ என்று கட்டளையிட்டார். அவிநாசியப்பரின் கட்டளைப்படி அந்த முதலையும் அந்த பாலகனை வெளியே விட்டு விட்டது. அந்த பாலகனை முதலை வாயிலிருந்து மீட்டுத் தந்தது இந்த கோவில். எமன் வாயில் சென்றவனை கூட இந்த தலம் மீட்டுத்தரும் என்பது இதன் பொருள். எனவே இத் திருத்தலம் நாம் கேட்க முக்தி அளிக்கும் தலம் ஆகும்

திருவாலவாய் – சொல்ல முக்தி அளிக்கும் தலம்

முக்தி எனப்படும் வீடுபேறு அளிக்கும் தலங்களாக விளங்கும் தலங்களுள் ஒன்று திருவாலவாய். திரு ஆலவாய் சொல்ல முக்தி அளிக்கும் தலம் ஆகும். இந்தத் தலம் தமிழ்நாட்டின் மதுரை மாநகரில், தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் உடனுறை சிவபெருமான் கோயில் ஆகும். மூலவர் பெயர் சொக்கநாதர். அம்பாள் பெயர் மீனாட்சி. இங்குள்ள சிவபெருமான் மூர்த்தி அளவில் பெரியவர். தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில் என்பது இதன் சிறப்பு . இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது. 

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே!

எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகம் பாடல் பெற்ற தலம் இது. இந்தப் பாடல் திருஞான சம்பந்தர் அருளியது.  பாண்டிய மன்னனாக விளங்கிய  கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான். 

இந்த தலம் திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம் என்பதால் சிவபெருமானை நினைத்து சொல்லப்படும், ஓதப்படும். பாடப்படும் பதிகங்கள் நம் மனதை தூய்மையாக்கி, உடலை தூய்மையாக்கி உலக பந்தங்களில் இருந்து நம்மை விடுவிகின்றது. தென் திருவாலவாய் சுவாமியை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கப்பெறுவதாக தொன் நம்பிக்கை. தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்தக் கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால் மரணத்துன்பம் நீங்குகிறது. எனவே இத் திருத்தலம் சொல்ல முக்தி அளிக்கும் தலம் ஆகும். 

வாரணாசி – இறக்க முக்தி அளிக்கும் தலம் 

வாரணாசி என்னும் இத் திருத்தலம் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரமாக கருதப்படுகிறது. இது உத்திரப் பிரதேசத்தில் உள்ளது. இத் தலத்திற்கு காசி,  மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உண்டு. வருணா – ஆசி ஆகிய இரு நதிகளின் சங்கமத் தலமாக இது விளங்குவதால் வாரணாசி எனப் பெயர் பெற்றது. 

காசி என்றால் ஒளி என்று பொருள்.  இது வாழும் போது மட்டுமின்றி இறந்த பின்னும் பிறவா நிலை என்னும் ஒளியைக் காட்டும் நகரமாக அமைந்துள்ளது இதன் சிறப்பு. காசியில் இறந்தவர்கள் சுவர்க்கம் செல்வார்கள் என்பது நம்பிக்கை. இங்கே இறக்கும் பறவைகள், மிருகங்கள், மற்றும் சகல ஜீவ ராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராம நாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவமும் சிவபெருமான் ஓதுவதாக ஐதீகம். இத் தலத்தை கால பைரவர் காத்து நிற்கிறார். எனவே இத் தலம் இறக்க முக்தி அளிக்கும் தலம் ஆகும். 

banner

Leave a Reply

Submit Comment