Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

Sri Chakram Tamil

July 10, 2020 | Total Views : 1,606
Zoom In Zoom Out Print

ஸ்ரீ சக்கரம் | Sri Chakram Tamil:

ஸ்ரீ சக்ரம் அல்லது ஸ்ரீ யந்திரம் என்பது யந்திரங்களின் ராஜா என்று கூறப்படுகின்றது. இதில் பிந்து எனப்படும் மைய புள்ளியைச் சுற்றியுள்ள ஒன்பது முக்கோணங்கள் ஒன்றையொன்று வெட்டிக் கொண்டு இருக்கின்றன. இந்த முக்கோணங்கள் அகிலத்தையும் மனித உடலையும் குறிக்கின்றன. இதில் உள்ள ஒன்பது முக்கோணங்கள் காரணமாக, ஸ்ரீ யந்திரம் நவயோனி சக்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மூன்று பரிமாணங்களில் குறிப்பிடப்படும் போது மகாமேரு என்று அழைக்கப்படுகின்றது.ஸ்ரீ சக்ரம் என்பது சிவசக்தி ஐக்கியம் என்று கூறப்படுகின்றது. ஸ்ரீ சக்ர பூஜை நவாவரண பூஜையாக வழிபடப்படுகிறது.ஸ்ரீ சக்கரம் பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிடம் வல்லுனர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

திதி நித்யா தேவிகள் யார் ?

ஸ்ரீவித்யை என்பது ஸ்ரீசக்ர நாயகியான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் முறை ஆகும். ஸ்ரீ சக்ரத்தின் பிந்து மத்ய வாசினியாக,  ஸ்ரீசக்ரத்தின் நடுவில் காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அன்னை லலிதா பரமேஸ்வரி அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றி ஒரு முக்கோணம் இருக்கிறது. அந்த முக்கோணத்தில் வீற்றிருப்பவர்களே திதி நித்யா தேவிகள். அன்னை லலிதா பரமேஸ்வரி  மஹா நித்யாவாக ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.

திதிகளும் நித்யா தேவி வழிபாடும்:

திதிகள் மொத்தம் 30. வளர்பிறை திதி 14 தேய்பிறை திதி 14, அமாவாசை மற்றும் பௌர்ணமி என திதிகள் 30 ஆகும். வளர்பிறை திதிகள் சுக்லபட்ச திதிகள் என்றும் தேய்பிறை திதிகள் கிருஷ்ணபட்ச திதிகள் என்றும்  அழைக்கப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திதியில் பிறந்திருப்போம்.அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து மந்திரம் சொல்லி வணங்கி வருவதன் மூலம் வாழ்வில் சகல வளங்களைப் பெறலாம். மேலும் திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

திதி சூன்யம் என்றால் என்ன?

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு திதி இருக்கும் நாளில் பிறந்து இருப்போம். நாம் பிறந்த போது நடப்பில் இருந்த திதியால் ஒரு சில ராசிகள் சூன்யம் அடைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. சூன்யம் என்றால் வெறுமை என்றும், ஒன்றுமே இல்லாதது என்றும் பொருள்.  இதை திதிசூன்யம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடுகிறார்கள். திதி சூன்யம் நீங்க திதி நித்யா தேவி  வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.  

பிரதமை திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம்
துவிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி -தனுசு, மீனம்
திரிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி- மகரம், சிம்மம்
சதுர்த்தி திதியில் சூன்யம் பெறும் ராசி- கும்பம், ரிஷபம்
பஞ்சமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி
சஷ்டி திதியில் சூன்யம் பெறும் ராசி- மேஷம், சிம்மம்
சப்தமி திதியில் சூன்யம் பெறும் ராசி - தனுசு, கடகம்
அஷ்டமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, 
நவமி திதியில் சூன்யம் பெறும் ராசி - சிம்மம், விருச்சிகம்
தசமி திதியில் சூன்யம் பெறும் ராசி  -சிம்மம், விருச்சிகம்
ஏகாதசி திதியில், சூன்யம் பெறும் ராசி - தனுசு, மீனம்
துவாதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம்
திரயோதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - ரிஷபம், சிம்மம்
சதுர்த்தசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி
அமாவாசை, பௌர்ணமி திதிகளுக்கு எவ்வித திதி சூன்யமும் இல்லை.

திதிகளும் அவற்றிற்குரிய நித்யா தேவிகளும் :

காமேச்வரி

சுக்லபட்ச ப்ரதமை திதிக்கும் கிருஷ்ணபட்ச அமாவாசை திதிக்கும் அதிதேவதை காமேச்வரி. பிறை சூடிய திருமுடியைக் கொண்ட இந்த அம்பிகையின் கடைக்கண் பார்வை பக்தர்கள் கேட்கும் வரங்களை வாரி வழங்கும் தன்மை கொண்டது.

“காம” என்றால் விருப்பம் என்று பொருள்.  காமேஸ்வரி என்றால் விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள். இந்த அம்பிகையின் புன்சிரிப்பும் கருணை பொழிந்திடும் கண்களும் கேட்கும் வரங்களை வாரி வழங்குகின்றது.

மந்திரம்:

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே 
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

பலன்கள்:

சுக்லபட்ச  பிரதமை மற்றும் அமாவாசை திதிகளில் அன்னை காமேச்வரியை வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செல்வ வளம் பெருகும்.  மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.

பகமாலினி

சுக்லபட்ச த்விதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதிக்கும் அதிதேவதை பகமாலினி. பகமாலினி என்றால் வேண்டும் செல்வங்களை அளிக்கும் பகவதி என்று பொருள். இக பர சௌபாக்கியங்களை அளிப்பவள்.  

மந்திரம் 

ஓம் பகமாலின்யை வித்மஹே 
ஸர்வ வஸங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

பலன்கள்:

சுக்ல பக்ஷ த்விதியை மற்றும்  கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி திதிகளில் இவளை வழிபடுதன் மூலம் சகல சௌபாக்கியங்க்ளும் பெற்று வாழ்வில் வெற்றி பெறலாம். இக பர சுகமளிக்கும் இவள் கருவில் இருக்கும் சிசுவையும் காத்து ரட்சிப்பவள். 

நித்யக்லின்னா:

சுக்லபட்ச த்ருதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ரயோதசி திதிக்கும் அதிதேவதை நித்யக்லின்னா. நித்யக்லின்னா என்றால் எப்பொழுதும் கருணை மிகுந்தவள் என்று பொருள். இவள் கருணையே வடிவாகத் திகழ்பவள். 

மந்திரம்:

ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே 
நித்ய மதத்ரவாய தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

பலன்கள்:

சுக்லபட்ச த்ருதியை, மற்றும் கிருஷ்ணபக்ஷ திரயோதசி திதிகளில் அன்னையை வழிபடுவதன் மூலம் அவளின் கருணையினால் குடும்ப வாழ்க்கை சிறப்புடன் விளங்கும்.

பேருண்டா

சுக்லபட்ச சதுர்த்தி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்வாதசி திதிக்கும் அதிதேவதை பேருண்டா. அண்டம் அனைத்திலும் நிறைந்து இருப்பவள் என்று பொருள்.  இந்த அன்னைக்கு ‘அநேக கோடி ப்ரமாண்ட ஜனனீ’ என்றும் ஓர் திருநாமம் உண்டு. 

மந்திரம்:

ஓம் பேருண்டாயை வித்மஹே 
விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

பலன்கள்:

சுக்ல பக்ஷ சதுர்த்தி மற்றும் கிருஷ்ண பக்ஷ துவாதசி திதிகளில் அன்னையை வழிபடுவதன் மூலம் ஆபத்துக்களில் இருந்து காத்துக் கொள்ளலாம். விஷ பயம் நீங்கும். 

வஹ்நி வாஸினி

சுக்லபட்ச பஞ்சமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ஏகாதசி திதிக்கும் அதிதேவதை வஹ்நி வாஸினி. வஹ்னி என்பது அக்னியைக் குறிக்கும். நமது மூலாதரத்தில் குண்டலினி வடிவாகத் திகழ்பவள்.

மந்திரம்:

ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே 
ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

பலன்கள்:

சுக்ல பக்ஷ பஞ்சமி, கிருஷ்ண பக்ஷ ஏகாதசி திதிகளில் இந்த அன்னையை வழிபடுவதன் மூலம் மூலாதார சக்தி பெருகும். நோய்கள் அணுகாது. ஆரோக்கியம் மிக்க தேகம் பெறலாம். .

மகா வஜ்ரேச்வரி

சுக்லபட்ச சஷ்டி திதிக்கும் கிருஷ்ணபட்ச தசமி திதிக்கும் அதிதேவதை மகா வஜ்ரேச்வரி. லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று வஜ்ரமணியால் ஆனதென்றும் அதற்கருகில் வஜ்ரமயமான நதியொன்று உள்ளதென்றும் அதற்கெல்லாம் அதிதேவதை வஜ்ரேஸ்வரி எனவும் துர்வாஸ மகரிஷி தன் லலிதாஸ்தவரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார்

மந்திரம்:

ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே 
வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

பலன்கள் :

சுக்ல பக்ஷ சஷ்டி மற்றும்  கிருஷ்ண பக்ஷ தசமி திதிகளில் அன்னையை வழிபடுவதன் நூலாம் துன்பங்கள் அணுகாமல் நம்மை காத்துக் கொள்ளலாம். .

சிவதூதி

சுக்லபட்ச சப்தமி திதிக்கும் கிருஷ்ணபட்ச நவமி திதிக்கும் அதிதேவதை சிவதூதி. இந்த அன்னை சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப  நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்குமுன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. எல்லாவிதமான மங்களங்களையும் அன்பர்களுக்கு அளிப்பவள்.

மந்திரம்:

ஓம் சிவதூத்யை வித்மஹே 
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

பலன்கள்:

சுக்ல பட்ச சப்தமி மற்றும் கிருஷ்ண பட்ச நவமி திதிகளில் அன்னையை வழிபடுவதன் மூலம் நமது நியாயமான விருப்பங்கள் நிறைவேறும். 

த்வரிதா

சுக்லபட்ச அஷ்டமி திதிக்கும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதிக்கும் அதிதேவதை த்வரிதா. த்வரிதா என்றால் உடனடி என்று பொருள். தன்னை அண்டி நிற்கும் பக்தர்களுக்கு வேண்டிய உடனேயே அருள் பாலிப்பதால் இந்த அன்னைக்கு த்வரிதா என்று பெயர். 

மந்திரம்:

ஓம் த்வரிதாயை வித்மஹே 
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

பலன்கள் :

சுக்ல பட்ச அஷ்டமி மற்றும் கிருஷ்ண பட்ச அஷ்டமிதிதிகளில் இந்த அன்னையை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பயம் அகலும். பூரண ஆயுள் கிட்டும்.

குலஸுந்தரி

சுக்லபட்ச நவமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சப்தமி திதிக்கும் அதிதேவதை குலஸுந்தரி. குலசுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நமது உடலின் இயக்கங்களை காத்து அருள் புரிபவள். 

மந்திரம்:

ஓம் குலஸுந்தர்யை வித்மஹே 
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

பலன்கள்:

சுக்ல பட்ச நவமி மற்றும்  கிருஷ்ண பட்ச சப்தமி திதிகளில் அன்னையை வழிபடுவதன் மூலம் செல்வ வளம் பெருகும். பரிபூரண ஞானம் கிட்டும்.  

நித்யா:

சுக்லபட்ச தசமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சஷ்டி திதிக்கும் அதிதேவதை நித்யா. நித்யா என்றால் அழிவில்லாதவள். கால நித்யா ரூபமானவள். சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். 

மந்திரம்:

ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே 
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.

பலன்கள்:

சுக்ல பட்ச தசமி மற்றும் கிருஷ்ண பட்ச சஷ்டி திதிகளில் அன்னையை வழிபடுவதன் மூலம்  அனைத்துத் தொல்லைகளும் தானே விலகும். தடைகள் மற்றும் தோஷங்கள்  நீங்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் ஆரோக்கியமும் கிட்டும். அஷ்டமா சித்திகளும் கிட்டும்.

நீலபதாகா:

சுக்லபட்ச ஏகாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச பஞ்சமி திதிக்கும் அதிதேவதை நீலபதாகா. நீல நிற வடிவான இந்த தேவியின் அருட் பார்வை வாழ்வில் மேன்மை சேர்க்கும். 

மந்திரம்:

ஓம் நீலபதாகாயை வித்மஹே 
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

பலன்கள்:

சுக்ல பட்ச ஏகாதசி மற்றும்  கிருஷ்ண பட்ச பஞ்சமி திதிகளில் இந்த அன்னையை வணங்கினால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். போட்டிகளில் வெற்றி கிட்டும். .

விஜயா

சுக்லபட்ச த்வாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதிக்கும் அதிதேவதை விஜயா. ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இத்தாய் விளங்குகிறாள்.

மந்திரம்:

ஓம் விஜயா தேவ்யை வித்மஹே  
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

பலன்கள்:

சுக்ல பட்ச துவாதசி மற்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதிகளில் இந்த அன்னையை வணங்கினால்  வழக்குகளில் வெற்றி கிட்டும். 

சர்வமங்களா

சுக்லபட்ச த்ரயோதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ருதியை திதிக்கும் அதிதேவதை ஸர்வமங்களா. இந்த தேவியின் அருட்பார்வை தன்னை வணங்குபவர்களுக்கு  சர்வமங்களங்களையும் அளித்து  அவர்களை அனவரதமும் காத்து ரட்சிக்கின்றது.

மந்திரம்:

ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே 
சந்த்ராத்மிகாயை திமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

பலன்கள்:

சுக்ல பட்ச திரயோதசி மற்றும்  கிருஷ்ண பட்ச த்ரிதியை திதிகளில் இந்த அன்னையை வணங்குவதன் மூலம் வாழ்வில் சர்வ மங்களம்  கிட்டும். பயணங்களின் போது பாதுகாப்பு கிட்டும். 

ஜ்வாலாமாலினி

சுக்லபட்ச சதுர்த்தசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்விதியை திதிக்கும் அதிதேவதை ஜ்வாலாமாலினி. ஜ்வாலா என்றால் நெருப்பில் இருந்து தோன்றும் ஜ்வாலை. ஜ்வாலா மாலினி என்றால் நெருப்பு ஜ்வாலை ரூபமாய் இருப்பவள். அக்னியை மாலையாகக் கொண்டவள். 

மந்திரம்:

ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே 
மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

பலன்கள்:

சுக்ல பட்ச சதுர்த்தசி மற்றும் கிருஷ்ண பட்ச த்விதியை திதிகளில் இந்த அன்னையை வணங்குவதன் மூலம் சூரியனைக் கண்ட பனி போல துன்பங்கள் விலகும். பகைவர்கள் அழிவர்.

சித்ரா

சுக்லபட்ச பவுர்ணமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ப்ரதமை திதிக்கும் அதிதேவதை சித்ரா. நமது அறியாமை என்னும் இருளை நீக்கி ஒளியை வழங்குபவள். 

மந்திரம்:

ஓம் விசித்ராயை வித்மஹே 
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவிப்ரசோதயாத்.

பலன்கள்:

பௌர்ணமி மற்றும் கிருஷ்ண பட்ச பிரதமை திதிகளில் இந்த அன்னையை வணங்குவதன் மூலம் அதிர்ஷ்டம் மூலம் செல்வம் பெருகும். .
 

banner

Leave a Reply

Submit Comment