Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாத சிறப்புகள்

October 16, 2020 | Total Views : 1,717
Zoom In Zoom Out Print

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு. தெய்வீக அம்சங்கள் நிறைந்த மாதமாகவும், காக்கும் கடவுள் பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மாதமாகவும் அமைந்திருக்கிறது. மாதம் முழுவதுமே புண்ணியம் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. அனைத்து பெருமாள் கோயில்களிலும் திருவிழாக்கள் களை கட்டும். குறிப்பாக திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருட சேவை வெகு விமரிசையாக நடைபெறும்.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமன்று, இந்த மாதத்தில்  அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதம் என தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது சிறப்பு.

புதன் கிரகத்துக்குரிய மாதம்

ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்துக்குரியதாக புரட்டாசி மாதம் பார்க்கப்படுகின்றது.  ஏனெனில் புதன் பகவானின் அதிதேவதையாக மகா விஷ்ணு உள்ளார். அதனால் புரட்டாசி மாத விரதமும், வழிபாடும் பகவான் மகா விஷ்ணுவின் அருளைப் பெற்றுத் தரும். சனி பகவானும், புதனும் நட்பு கிரகங்கள் என்பதால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்தது.

purattasi masam viratham

புரட்டாசி மாத விரதம்

அனைத்து சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வணங்குவது நல்லது. அப்படி விரதத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள் இந்த புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்து, முடிந்த அளவிற்கு அன்னதானம் வழங்கினால் பெருமாளின் அருளாசிகளைப் பெறலாம்.

சனிக்கிழமை விரதத்தின் முக்கியத்துவம்

சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது சிறப்பென்றாலும், அதிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது கூடுதல் சிறப்பு.

பெருமாளுக்கு நாடெங்கும் கோயில்கள் இருந்தாலும் திருப்பதியில் அமைந்துள்ள வெங்கடாசலபதி திருக்கோயில் இந்தியளவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. திருமலையில் பீமன் என்கிற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெருமாளின் தீவிர பக்தன். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டான் பீமன்.

ஆனால் பரம ஏழையான பீமன் விரதத்தை மேற்கொள்ள கோயிலுக்கு செல்லக்கூடிய வசதியில்லாமல் இருந்தான். அப்படியே கோயிலுக்கு சென்றாலும் பூஜை செய்யத் தெரியாது. பீமன் தனது தொழிலான மண்பாண்டங்களை செய்து வந்தான். கோயிலுக்குப் போகும் சூழல் இல்லாததால், பெருமாளையே இங்கு வரவழைத்துவிட்டால் என்ன என்று தோன்றியது பீமனுக்கு.

களிமண்ணால் செய்யப்பட்ட பெருமாள் சிலை

பீமனிடம் இருந்த களிமண்ணால் ஒரு பெருமாள் சிலையை செய்தான். அதற்கு பூஜை செய்ய பூக்கள் வாங்கக் கூட அவரிடம் பொருள் வசதியில்லை. அதன் காரணமாக தினமும் தன் வேலை செய்து முடித்தவுடன் மீதமாகும் களிமண்ணில் பூக்கள் செய்தான். அப்படி செய்த பூக்களை மாலையாக கோர்த்து மண் பூ மாலையாக பெருமாளுக்கு அணிவித்து பூஜித்தான்.

தொண்டைமானின் தங்கப் பூமாலை

இதற்கிடையே அந்த நாட்டை ஆண்டு வந்த அரசன் தொண்டைமானும் பெருமாளின் தீவிர பக்தன். அவர் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் திருமலையில் வீற்றிருக்கும் வெங்டசலாபதிக்கு தங்க பூமாலையை அணிவிப்பது வழக்கம். அப்படி அவர் ஒரு வாரத்தில் மாலையை அணிவித்து விட்டு மறுவாரம் வந்து பார்க்கும் போது தங்கப் பூமாலைக்கு பதிலாக களிமண்ணால் செய்யப்பட்ட பூமாலை பெருமாளின் கழுத்தில் இருந்தது. இதைக் கண்ட தொண்டைமான் அதிர்ச்சியடைந்து அங்குள்ள கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களை சந்தேகம் கொண்டு குழப்பமடைந்தார்.

பின்பு தொண்டைமானின் கனவில் தோன்றிய பெருமாள், தனது தீவிர பக்தனான குயவன் பீமனின் மாலையை தான் ஏற்றுக் கொண்டதாகவும், வறுமையில் வாடுகின்ற அவனுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அரசனுக்கு ஆணையிட்டு மறைந்தார். திருமாலின் ஆணைப்படி அரசன் தொண்டைமான் குயவன் பீமனை கௌரவித்து அனைத்து உதவிகளையும் செய்தார்.

பெருமாளுக்கு நைவேத்யம்

பெருமாள் மீது குயவன் பீமன் வைத்திருந்த பக்தியை கௌரவிக்கும் விதமாக இப்போதும் திருப்பதியில் மண் சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.

சனி பகவானின் கெடுபலன்களிலிருந்து காக்கும் பெருமாள்

புரட்டாசி மாதத்தில் வரும் திருவோணம் திதியில் திருப்பதி மலையப்பசுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட திருநாளாக பார்க்கப்படுகிறது. அதே போல் சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார். இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் சனி பகவானின் கெடு பலன்களிலிருந்து பக்தர்களை காப்பாற்றுகிறார்.

புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதங்கள்

சித்தி விநாயகர் விரதம்

இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும்.

துர்வாஷ்டமி விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.

மகாலட்சுமி விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

கேதார கௌரி விரதம்

விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும் பெண்கள் தமது இடது கையிலும் அணிந்து கொள்வர். சக்திரூபமான பார்வதிதேவி சிவனை நினைத்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்தநாரியாகவும் அர்த்த நாரீசுவரியாகவும் ஒன்றாகிய விரதமே கேதார கௌரி விரதமாகும். இவ்விரதத்தை லட்சுமி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு என்று பல பெயர்களில் தங்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி அழைப்பர்

அமுக்தாபரண விரதம்

புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும்.

ஜேஷ்டா விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று லட்சுமி தேவியின் மூத்த சகோதரியாகக் கருதப்படும்  ஜேஷ்டா தேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.

சஷ்டி - லலிதா விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருள்கிறாள் அன்னை.

கபிலா சஷ்டி விரதம்

புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும்.

மஹாளயபக்ஷம் 

புரட்டாசி அமாவாசைக்கு பதினைந்து நாட்கள் முன்பு வருவது  மஹாளயபக்ஷம் ஆகும். இந்தக் காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகும்.

banner

Leave a Reply

Submit Comment