Aadi Velli: 5 Goddess Power Fridays For Power, Protection & Prosperity | 10% OFF JOIN NOW
x
x
x
cart-added The item has been added to your cart.

Dakshinamurthy Stotram in Tamil - Sri Dakshinamurthy Stotram Lyrics in Tamil

May 23, 2020 | Total Views : 107
Zoom In Zoom Out Print

மௌன வ்யாக்யா ப்ரகடித பரப்ரஹ்ம தத்வம் யுவானம்
வர்ஷிஷ்டாந்தேவ ஸத்ரிஷிகணைராவ்ருதம் ப்ரஹ்மநிஷ்டை:
ஆசார்யேந்த்ரம் கரகலித சின்முத்ரமானந்த ரூபம்
ஸ்வாத்மாராமம் முதித வதனம் தக்ஷிணாமூர்த்திமீடே ||

மௌனத்தின் மூலம் பரப்பிரம்ம தத்துவத்தை விளக்கும்  நிலையில், இளமை தோற்றத்துடன், வயதில் முதிர்ந்த முனிவர்கள் மற்றும் சீடர்களால் சூழப்பட்டு தென் திசை நோக்கி அமர்ந்து தனது கரத்தில் சின்முத்திரை காண்பித்து ஆனந்த நிலையில் புன்முறுவலுடன் காட்சி அளிக்கும் தட்சிணாமூர்த்தியை நான் வணங்குகிறேன்.

விச்வம் தர்ப்பண த்ருச்யமானநகரீ துல்யம் நிஜாந்தர்கதம்
பச்யன் ஆத்மனி மாயயா பஹிரிவோத்-பூதம் யதா நித்ரயா |
ய: சாக்ஷீ குருதே ப்ரபோத ஸமயேஸ்வாத்மானமேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நமஇதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 

இந்தப் பிரபஞ்சம் என்பது கண்ணாடியில் பிரதிபலிக்கும் நகரத்தைப் போல  அதற்குள் எல்லாம் அடங்கியுள்ளது. ஆனால் மாயை காரணமாக அது வெளியே இருப்பது போல நாம் கனவு போல காண்கிறோம். ஆனால் அனைத்தும் பரம்பொருளே. ஆத்ம உணர்வு இருந்தால் தான் நமது சிந்தனை செயல் அனைத்தும் விவேகத்துடன் செயல்படும். குருவிடமிருந்து நாம் அறிவைப் பெறும்போது தான்,அறியாமையின் முக்காடு விலகி நாம் ஞானம் என்னும் ஒளி பெறுகிறோம்.

Dakshinamurthy Stotram Lyrics in tamil

பீஜஸ்யாந்தரிவாங்குரோ ஜகதிதம்ப்ராங் நிர்விகல்பம் புன:
மாயா கல்பித தேச கால கலனாவைசித்ர்ய சித்ரீக்ருதம் |
மாயாவீவ விஜ்ரும்பயத்யபிமஹாயோகீவ ய: ஸ்வேச்சயா
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நமஇதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 

ஒரு விதைக்குள் ஒளிந்து இருக்கும் மரம் போல இந்த பிரபஞ்சம்அந்தப் பரம்பொருளின் உள்ளே அடங்கியுள்ளது. அவர் செய்யும் மாயை இங்கு பல வடிவங்களில் காணப்படுகின்றது. யோகியைப் போன்ற நிலையில் புனிதமான குருவாக விளங்கும் தட்சிணாமூர்த்திக்கு என் உள்ளார்ந்த வணக்கம்

யஸ்யைவ ஸ்ஃபுரணம் ஸதாத்மகம்அஸத்கல்பார்த்தகம் பாஸதே
ஸாக்ஷாத் தத்வமஸீதி வேத வசஸாயோ போதயத்யாச்ரிதான் |
யத் ஸாக்ஷாத்கரணாத் பவேன்னபுனராவ்ருத்திர் பவாம்போநிதௌ
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நமஇதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 

தன்னுடைய ஞான ஒளியால் இந்தமாயையான பிரபஞ்சத்தை உண்மை போல காட்சி அளிக்கச் செய்பவரும்,  தத்வமசி என்ற தத்துவத்தின் மூலம்  ஆத்மாவை  உணர விரும்புபவர்களுக்கு பிரம்மத்தை கற்றுத்தருபவரும், இந்தப் பிறவிப் பிணியில் இருந்து  நம்மை நீக்குபவரும், தெய்வீக குருவாக விளங்குபவருமான தட்சிணாமூர்த்தியை நான் வணங்குகிறேன்.

நானா சித்ர கடோதர ஸ்திதமஹாதீப ப்ரபா பாஸ்வரம்
ஜ்ஞானம் யஸ்ய து சக்ஷூராதி கரணத்வாரா பஹி: ஸ்பந்ததே |
ஜானாமீதி ததேவ பாந்தமனுபாதிஏதத்ஸமஸ்தம் ஜகத்
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நமஇதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 

ஒரு குடத்தினுள் இட்ட விளக்கு அதில் காணப்படும் துளைகள் மூலம் வெளிப்படுவது போல ஞான ஒளியை வெளிப்படுத்துபவரும், அவருடைய ஞானத்தின் மூலம் நமக்கு ஞானத்தை அளிப்பவரும், தனது ஒளியால் சகலத்தையும் பிரகாசிக்கச் செய்பவருமான தட்சிணாமூர்த்தியை நான் வணங்குகிறேன்.

தேஹம் ப்ராணமபீந்த்ரியாண்யபிசலாம் புத்திம் ச சூன்யம் விது:
ஸ்த்ரீ பாலாந்த ஜடோபமாஸ்த்வஹமிதிப்ராந்த்யா ப்ருசம்வாதின: |
மாயாசக்தி விலாஸ கல்பிதமஹா வ்யாமோஹ ஸம்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நமஇதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 

சில தத்துவவாதிகள் உடலை வருத்திக் கொள்ளுதல், புலனடக்கம், மூச்சினை அடக்குதல், ஞானம் மற்றும் வெற்று அல்லது சூன்யம் என ஆத்மா அல்லது நான் என்பதை உணர்கிறார்கள். இவர்களின் புரிந்துணர்வு  பெண்கள், குழந்தைகள், பார்வையற்றோர் போன்றோரை விட குறைந்ததாகும். இந்த மாயையை அழிப்பவர் மற்றும் உண்மை நிலையை நமக்கு தெரியப்படுத்தும் தட்சிணாமூர்த்தியை நான் வணங்குகிறேன்.

ராஹூ க்ரஸ்த திவாகரேந்து ஸத்ருசோமாயா ஸமாச்சாதனாத்
ஸன்மாத்ர: கரணோபஸம்ஹரணதோயோSபூத் ஸூஷூப்த: புமான் |
ப்ராகஸ்வாப்ஸமிதி ப்ரபோத ஸமயேய: ப்ரத்யபிஜ்ஞாயதே
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நமஇதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 

கிரகணத்தின் போது ராகுவால் மறைக்கப்பட்டால் கூட சூரியனின் பிரகாசம் அதனை விட்டு விலகுவதில்லை. இதேபோல், அறிவாற்றலின் சக்தி ஆழ்ந்த தூக்கத்தின் போது அசைவற்று மட்டுமே இருக்கின்றது. மாயை காரணமாக அறியாமல் இருந்த போதிலும்  சுயமானது தூய்மையானதாக  இருக்கிறது. விழித்து எழுபவர்கள்,இதற்கு முன்  தாங்கள் உறங்கிக் (அறியாமையில்) கிடந்ததை அறிவார்கள். அதே போல ஒருவர் தன்னை உண்மையாக  உணரும் போது தனது முந்திய அறியாமையை உணரத் தான் செய்வார்கள். மாயை என்னும் திரை தன்னை விலக்கும் தட்சிணாமூர்த்தியை நான் வணங்குகிறேன்.

பால்யாதிஷ்வபி ஜாக்ரதாதிஷூ ததாஸர்வாஸ்வவஸ்தாஸ்வபி
வ்யாவ்ருத்தாஸூ அனுவர்த்தமானம்அஹமித்யந்த: ஸ்ஃபுரந்தம் ஸதா |
ஸ்வாத்மானம் ப்ரகடீ கரோதி பஜதாம்யோ முத்ரயா பத்ரயா
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நமஇதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 

இளமை, முதுமை, விழிப்பு, தூக்கம் என்ற  எந்த நிலையிலும் இருப்பு மாறாத , தனது உயர்த்திய வலது கையில் ஞான முத்திரை தாங்கி நிற்கும் தட்சிணாமூர்த்தியை நான் வணங்குகிறேன்.

விச்வம் பச்யதி கார்ய காரணதயாஸ்வஸ்வாமி ஸம்பந்தத:
சிஷ்யாசார்யதயா ததைவபித்ரு புத்ராத்யாத்மனா பேதத: |
ஸ்வப்னே ஜாக்ரதி வா ய ஏஷபுருஷோ மாயா பரிப்ராமித:
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நமஇதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 

இருமை நிலை என்னும் மாயையை நாம் உலகில் காண்கிறோம். காரணம் விளைவு என இருமை நிலைகள். முதலாளி-தொழிலாளி, ஆசிரியர்-மாணவர், தந்தை-மகன். அது போல கனவு மற்றும் விழிப்பு நிலை. இந்த மாயைத் திரையை நீக்கி தெளிவை அளிக்கும் தட்சிணாமூர்த்தியை நான் வணங்குகிறேன்.

பூரம்பாம்ஸ்யனலோSனிலோ Sம்பரமஹர்நாதோ ஹிமாம்சு: புமான்
இத்யாபாதி சராசராத்மகமிதம்யஸ்யைவ மூர்த்த்யஷ்டகம்
நான்யத் கிஞ்சன வித்யதே விம்ருசதாம்யஸ்மாத் பரஸ்மாத் விபோ:
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நமஇதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 

பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன் மற்றும் புருஷா என எட்டு சக்திகளை உருவாக்கும், மற்றும்  தனது கருணையால் மட்டுமே நுட்பமாகவும் வெளிப்படையாகவும், அனைத்தும் பிரம்மத்தில் அடக்கம் என்பதை வெளிப்படுத்தும் தட்சிணாமூர்த்தியை நான் வணங்குகிறேன்.

ஸர்வாத்மத்வமிதி ஸ்ஃபுடீக்ருதமிதம்யஸ்மாதமுஷ்மிம்ஸ்தவே
தேனாஸ்ய ச்ரவணாத் ததார்த்த மனனாத்த்யானாச்ச ஸங்கீர்த்தனாத் |
ஸர்வாத்மத்வ மஹாவிபூதி ஸஹிதம்ஸ்யாதீச்வரத்வம் ஸ்வத:
ஸித்த்யேத் தத் புனரஷ்டதா பரிணதம்சைச்வர்யமவ்யாஹதம் ||

ஆத்மாவின் அடிப்படையில் அனைத்து உயிர்களும் சமம். அனைத்து உயிர்களும் ஒரே மாதிரியான பெருமை உடையது.  எனவே இந்தப் பாடலின் பொருளுணர்ந்து, தியானித்து, பாராயணம் (பாடுவதன்) மூலம் வாழ்வில் சகல , ஐஸ்வரியம் மற்றும் அஷ்டமா சித்திகளையும் (அனிமா, லகிமா. கரிமா, ப்ராப்தி, ப்ர்ஞம், இசித்வம், வசித்வம்) பெறலாம். 
 

ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் மகிமை கூறும் பின்வரும் சுலோகங்களும் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்துடன் ஓதப்படுகின்றன.

சித்ரம் வடதரோர்மூலேவ்ருத்தா: சிஷ்யா குருர்யுவா |
குரோஸ்து மௌனம் வ்யாக்யானம்சிஷ்யாஸ்து சின்ன ஸம்சயா: ||     

ஆல மரத்தின் அடியில், இளமை ததும்பும்  குருவாக அமர்ந்து, வயதில் மூத்த சீடர்களுக்கு, மௌனத்தின் மூலம் அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து அவர்களை தெளிவு பெற வைக்கும் காட்சி விந்தையானது.

ஓம் நம: ப்ரணவார்த்தாய சுத்த ஜ்ஞானைக மூர்த்தயே |
நிர்மலாய ப்ரசாந்தாய தக்ஷிணாமூர்த்தயே நம: || 

ஓம் என்ற பிரணவத்தின் பொருளாகவும், ஞான மூர்த்தியாகவும், தூயமயாகவும் அமைதியின் ரூபமாகவும் திகழும் தட்சிணாமூர்த்திக்கு வணக்கம்.

நிதயே ஸர்வ வித்யானாம்பிஷஜே பவ ரோகிணாம் |
குரவே ஸர்வ லோகானாம்தக்ஷிணாமூர்த்தயே நம: || 

இந்தப் பிரபஞ்சத்திற்கே குருவாகவும், ஜனனம் மரணம் என்ற பிறவிக் கடலின் அலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிறவிப் பிணி தீர்க்கும் கடவுளாகவும், ஞானக் களஞ்சியமாகத் திகழும் தட்சிணாமூர்த்திக்கு வணக்கம்..

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos