Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

பங்குனி திருவிழா : கபாலீஸ்வரர் கோவிலில் மார்ச் 29ல் கொடியேற்றம்

March 19, 2020 | Total Views : 831
Zoom In Zoom Out Print

மயிலையே கயிலை;  கயிலையே மயிலை :

தமிழகத்தின் தலைநகராம் சீர்மிகு சென்னைக்கு பெருமை சேர்க்கும் வகையில்  பழமையான ஆலயங்கள் பல உண்டு. அவற்றுள் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள  சிவன் கோவில் ஒன்று ஆகும். இது கபாலீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகின்றது.   பாடல் பெற்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி)என்றும்  அம்மனின்  பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. மயிலையே கயிலை ; கயிலையே மயிலை என்று போற்றப்படும் ஸ்தலம் இதுவாகும். புராண கதைகளின் படி  இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதி மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு சந்நிதிகளும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான சந்நிதிகளையும்  இக்கோயில் வளாகத்திலே காண முடியும். இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள் திருக்குளம்  முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.

பங்குனி திருவிழா :

ஆலயம் செல்வது சாலவும் நன்று என்று கூறுவார்கள். நாம் தினந்தோறும் ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு. ஆலயம் என்றதும் நமக்கு உற்சாகம் தருவது ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள். கோவில் என்றாலே உற்சவம் தான் அதன் சிறப்பு. வருடத்திற்கு ஒரு முறை சில நாட்கள் நடைபெறும் பெருவிழாக்களை நாம் உற்சவம் என்று கூறுகிறோம். கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. விழா என்றாலே கொண்டாட்டம் தான்.  அதிலும் குறிப்பாக கோடைகாலமான பங்குனி மாத திருவிழா பார் புகழும் விழா என்று கூறினால் மிகை ஆகாது.  இந்த விழாவைக் கண்டு களிக்க சென்னை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் மக்கள்கூட்டம் வெள்ளமென  கரை புரண்டு ஓடும்.

சென்னை மாநகரின் இதயப் பகுதியாக விளங்கும்  மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும்.இந்த விழாவில் பல்வேறு சிறப்புகள் அமைந்துள்ளது. இந்த வருடம் பங்குனிப் பெரு விழா 28.03.2020 முதல் 09.04.2020 வரை நடை பெற உள்ளது. அதில் சில முக்கிய அம்ஸங்களைப் பற்றிக் காண்போம். 
இந்த வருடம் இந்த விழா கிரக தேவதை பூஜையைத் தொடர்ந்து  மார்ச் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் ஏப்ரல் 4ஆம் தேதியன்று தேரோட்டமும், தொடர்ந்து ஏப்ரல் 5ஆம் தேதியன்று அறுபத்து மூவர் திருவீதியுலா வைபவமும் நடைபெறும். பின்னர், ஏப்ரல் 7ஆம் தேதியன்று திருக்கல்யாண வைபவத்துடன் விழா இனிதே நிறைவு பெறும்.  அதைத் தொடர்ந்து விடையாற்றி பெருவிழா நடைபெறும்.

கிரக தேவதை பூஜை:

விழாவின் துவக்கமாக கிரக தேவதை பூஜை நடைபெறும். திருமயிலையின்  கிராம தேவதையாக ஸ்ரீ கோல விழி அம்மனை குறிப்பிடுவார். இந்த அம்மனை பிடாரி, ஊர்க் காளி,  பத்திரகாளியம்மன் என்றும் அழைக்கின்றனர். இவளது இயற் பெயர் பத்ரகாளி என்பதாகும். பத்ர என்றால் மங்களம் என்று பொருள் உண்டு. மங்களம் தரும் நாயகி என்பதால் இவள் பத்ரகாளி என்று அழைக்கப்படுகிறாள். இந்த அம்மனின் தனிச் சிறப்பு கோல விழிகள் தான். கருணையை அள்ளி வழங்கும் நாயகி தான் கோல விழி அம்மன்.  மயிலை கபாலீஸ்வரர் கோவிலின்  பெருவிழாவிற்குத் தொடக்கமாக முதல் மரியாதை பெறும் தலமாகத் திகழ்வது, மயிலாப்பூரில் உள்ள கோலவிழி அம்மன் என்னும் பத்ரகாளி திருக் கோவிலாகும். இந்த முதல் மரியாதைக்குக் காரணம். இது கபாலீஸ்வரர் திருக்கோவிலின் துணைக் கோவில் என்பது மட்டுமல்ல; மயிலாப்பூர் நகரின் எல்லைகளைக் காத்தருளும் காவல் தெய்வமாக இத்தல அம்மன் விளங்குகின்றாள் என்பதே முதன்மையான காரணம்.

அதிகார நந்தி:

சிவன் என்றதும் நம் மனதில் முதலில் வருவது நந்தி என்று கூறலாம்.. ரிஷபம்  என்று அழைக்கப்படும்  நந்தி அகிலத்தையே காக்கும் சிவனை சுமக்கும் அதிகாரத்தை தான் ஒருவரே பெற்றுள்ளதால் இவர் அதிகார நந்தி என்று கூறபடுகிறார். சிவனின் காவலனாக விளங்கும் நந்தியம்பெருமானும் அதிகாரம் பதவி ஆகியவற்றை கொடுப்பதில் முக்கியத்துவம் பெறுகிறார். நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்" என்பதும் " அதிகார நந்தி பார்த்தால் அழியாத பதவி நிச்சயம்" என்பதும் ஆன்றோர் வாக்கு. பங்குனிப் பெருவிழாவின் மூன்றாம் நாள் காலை நடைபெறும் அதிகார நந்தி காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று ஆகும்

அறுபத்து மூவர் விழா:

நமது காலக் கணக்கில் 60 என்பது மிக முக்கியமான எண் ஆகும். ஒரு நாள் என்பது 60  நாழிகை கொண்டது.  ஒரு மணி நேரம் என்பது 6௦ நிமிடம் கொண்டது.  1 நிமிடம் என்பது 6௦ நொடி கொண்டது. ஒரு மனிதனுக்கு 6௦ ஆண்டுகள் முடிவடைந்தால் எடுக்கப்படும் விழா மணி விழா ஆகும். அது போல 6௦ நாயன்மார்கள். அவர்களை அறிமுகம் செய்து வைத்த சுந்தர  மூர்த்தி நாயனார் மற்றும் அவரது பெற்றோரை சேர்த்து 63 பேர். இவர்கள் அனைவரும் சிவனடியார்கள்.  சிவனடியார்க்குச் செய்யும் தொண்டு சிவனுக்கே செய்த தொண்டாகக் கருதப்படும்.  இதற்கெல்லாம் அடிப்படை, இறைவனே அடியார் பெருமையை உலகுக்கு உணர்த்த தன் திருவிளையாடல்கள் புரிந்தமை புராணங்களில் காணப்படுகின்றன. அத்தகைய அடியார்களைக் கொண்டாடி வணங்கும் திருவிழாவாகவே மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயிலில் நடைபெறும் `அறுபத்துமூவர் விழா’ என்றால் மிகையல்ல.

சென்னை மாநகரின் இதயப் பகுதியாக விளங்கும்  மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் அறுபத்து மூவர் விழா  பங்குனி மாதம் நடைபெறும்.  இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

பங்குனித் திருவிழாவின் எட்டாம் நாளன்று நடைபெறும் இந்த விழாவில்  சூலம் ஏந்தியவராக சிவபெருமான் பவனி வர அவருக்கு வலப் புறம் கற்பகாம்பாள், இடப் புறம் வள்ளி, தெய்வயானை  சமேத  ஸ்ரீ சிங்காரவேலர் உடன் வருகின்றனர்.  இவர்களைத் தொடர்ந்து பல்லக்குகளில் ஒருவர் பின் ஒருவராக ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் பவனி வருவது கண் கொள்ளாக் காட்சியாக  இருக்கும்.  

திருவள்ளுவர் கோவில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும் திருவள்ளுவர் உற்சவரும் இந்தில் கலந்து கொள்வது சிறப்பு. அறுபத்து மூவர் சிந்து என்னும் நூலில் இவ்விழாவின் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

அங்கம்பூம்பாவை உயிர்பெற்று எழும் நிகழ்ச்சி 

அறுபத்து மூவர் விழாவின் முன்பு பூம்பாவை எழும் நிகழ்ச்சி நடைபெறும் அதன் பிண்ணனியில் ஒரு கதை உண்டு. சென்னை மயிலாப்பூரில் சிவநேசர் என்ற வணிகர் இருந்தார். அவர் தீவீர சிவ பகதர். அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் அங்கம்பூம்பாவை. அவளும் தந்தையைப் போலவே சிவ பக்தி மிக்கவளாக இருந்தாள். குழந்தையாக இருக்கும் போதே அவள் பக்தி மிக்கவளாக இருந்தாள். அவள் பக்தியைக் கண்டு பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.  அவள் தினமும் சிவ பூஜைக்கு பூ பறிப்பது வழக்கம். அவள் சிவ நாமத்தை ஜெபித்துக் கொண்டே பூ தொடுப்பாள். இவ்வளவு பக்தி மிக்க தனது குழந்தையை   தெய்வக் குழந்தையாக விளங்கிய திருஞான சம்பந்தருக்கு மணமுடிக்க சிவநேசர் விரும்பினார்.

ஆனால் அவர் நினைத்தற்கு மாறாக விதி செயல்பட்டது. ஏழு வயதாக இருக்கும் போது ஒரு நாள் பூம்பாவை பாம்பு தீண்டி இறந்தாள். அவளது எலும்பு மற்றும் சாம்பலை ஒரு மண் கலயத்தில் வைத்து பாதுகாத்து வந்தார் சிவநேசர்.  சம்பந்தருக்கு உரியவள் பூம்பாவை என்பதால் அவர் வரும் போது அஸ்தியை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது சிவநேசரின் எண்ணம். ஐந்தாண்டு கழித்து சிவநேசர் வந்த போது அவரிடம் அனைத்தையும் கூறினார். அவரிடம் அஸ்தியை எடுத்து வரும்படி கூறினார் சம்பந்தர்.  எலும்பையும் சாம்பலையும் என்ன செய்யப் போகிறார் சம்பந்தர்' என்று அனைவரும் ஆச்சரியமுடன் பார்த்தனர்.

மயிலை கபாலீஸ்வரர் மீது பதிகம் பாடினார் சம்பந்தர். அடுத்த விநாடியே மூடியிருந்த மண்கலயம் 'படார்' என வெடித்து, எலும்பும் சாம்பலும் இணைந்து பூம்பாவை பருவமங்கையாக வெளியே வந்தாள்.

சம்பந்தரின் பாதம் பணிந்த சிவநேசர், 'கபாலீஸ்வரா... என்னே உன் கருணை' என்று கண்ணீர் சிந்தினார். 

விடையாற்றி விழா:

பெரிய திருவிழாவை அடுத்து உற்சவமூர்த்தி ஓய்வெடுக்கும் முறையாகக் கோயிலுக்குள் நடைபெறும் உற்சவம். இந்த விழாவுடன் பங்குனி பெருவிழா இனிதே நிறைவு பெரும். 

விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் கபாலீஸ்வரர் அன்னை கற்பகாம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பகல் மற்றும் இரவு வேளைகளில் நான்கு மாடவீதிகளிலும் திருவீதியுலா வந்து காத்திருக்கும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். பக்தர்கள் மனம்  நிறைவது மட்டுமன்றி அன்னதானம் நீராகாரம் என பக்தர்கள் வயிறும் நிறையும்.  அதோடு  நாதஸ்வர நிகழ்ச்சிகளும் பக்தி சொற்பொழிவுகளும் நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் தங்களுக்குள் எந்த வித பேதமும் இல்லாமல் ஒன்றென கலந்து கொண்டாடுவதைக் காண கண் கோடி வேண்டும். இந்த விழா நாட்களில் அடியவரும் ஆண்டவரும் ஒன்றே என்று கூறும் வகையில் இந்த விழா களை கட்டும். மேலும் AstroVed.com நடக்கும் பங்குனி உத்திரம்  தெரிந்து கொள்ள இந்த லிங்க் ஐ கிளிக் பண்ணவும் 

banner

Leave a Reply

Submit Comment