திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்”. ஆயிரம் பொய்களைச் சொல்லியாவது ஒரு திருமணம் நடத்து” என்பன திருமணம் குறித்த பழமொழிகள் ஆகும். வாழையடி வாழையென வம்சம் தழைக்க வைக்க நாம் ஏற்படுத்திக் கொள்ளும் பந்தமே திருமண பந்தம் ஆகும். நமது கர்ம வினைகள் யாவற்றையும், நாம் பிறந்த போது இருக்கும் கோள்கள் மற்றும் அவைகளின் நிலையினைக் கொண்டு நம்மால் அறிய இயலும். நமது வாழ்க்கை நிலைக்கு இக் கோள்களின் நிலையே அடிப்படையாக அமைகின்றது. எனவே திருமணம் என்று வரும் போது ஆண் பெண் என இருவரது ஜாதகங்களிலும் உள்ள முக்கியமான சில அம்சங்கள் பொருந்தி வருகின்றதா என பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
இருவரின் லக்னாதிபதியும் பலம் பொருந்தி உள்ளனரா என கணிக்க வேண்டும். தசா புத்தி, தசா சந்தி, போன்றவற்றை காண வேண்டும். இருவரின் ஆயுள் நிலையைக் காணவேண்டும். மாங்கலய பலம் காண வேண்டும். சஷ்டாஷ்டகம் காண வேண்டும். ஜாதகத்தில் தோஷங்கள் உள்ளதா எனக் காண வேண்டும். களத்திரகாரகர் எனப்படும் சுக்கிரனின் நிலையை ஆராய வேண்டும். குறிப்பாக, ஜாதகக்கட்டத்தில், 2, 5, 7, 8, 9 ஆகிய ஐந்து இடங்களையும் மிக முக்கியமாக கவனிக்கவேண்டும். 2 ஆம் இடம் தனம், குடும்பம், வாக்குஸ்தானத்ததைக் குறிக்கும். 5 ஆம் இடம் பூர்வ புண்ணியஸ்தானமாகி குழந்தை பாக்கியம் மற்றும் சந்ததி விருத்தியைக் குறிக்கும். 7 ஆம் இடம் கணவன் மனைவி அந்நியோன்யத்துக்கும், 8 ஆம் இடம் ஆயுள் பாவத்துக்கும், மாங்கல்ய சுகத்தையும் குறிக்கும். 9 ஆம் இடம் பாக்கியத்தைக் குறிக்கும். இது போன்ற மேலும் சில முக்கியமான அம்சங்களை கணித்து திருமணத்திற்குரிய பத்து பொருத்தங்கள் உள்ளனவா என்று காண வேண்டும்.
ஜாதகத்தின் 1௦ பொருத்தங்கள் (10 Thirumana Porutham)
பண்டைய காலங்களில் வாழ்ந்த முனிவர்கள், ஜாதகங்களின் பொருத்தம் மூலம் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் இடையே பொருந்தக்கூடிய தன்மை மற்றும் அனுகூல தன்மை ஆகியவற்றை மதிப்பிடுவதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடித்துள்ளனர். இருபதுக்கும் மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும் 1௦ பொருத்தங்கள் பார்ப்பது இந்நாட்களில் வழக்கத்திலுள்ளது. முக்கிய 1௦ பொருத்தங்களான இவைகள் தச மகா பொருத்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆண் மற்றும் பெண்ணின் நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து இந்தப் பொருத்தங்கள் கணிக்கப்படுகின்றது.
விவாகப் பொருத்தங்கள்
விவாகப் பொருத்தத்திற்கு தேவையான 1௦ பொருத்தங்கள் (10 Thirumana Porutham):
- நட்சத்திரப் பொருத்தம் அல்லது தினப் பொருத்தம்
- ராசிப் பொருத்தம்
- கணப் பொருத்தம்
- யோனிப் பொருத்தம்
- ரஜ்ஜுப் பொருத்தம்
- ராசி அதிபதி பொருத்தம்
- மாஹேந்திரப் பொருத்தம்
- ஸ்திரீ தீர்கப் பொருத்தம்
- வசியப் பொருத்தம்
- வேதைப் பொருத்தம்
மேலே சொன்ன 1௦ பொருத்தங்களில் தின, ராசி, கண, யோனி, ரஜ்ஜு மற்றும் மாஹேந்திரப் பொருத்தம் என்னும் 6 பொருத்தங்கள் மிகவும் முக்கியமானது. அதிலும் ரஜ்ஜு மிக முக்கியமான ஒன்றாகும். அதனை அடுத்து வருவது மாஹேந்திரம் மற்றும் தினப் பொருத்தம் ஆகும்.
பொருத்தங்களின் விரிவான விளக்கம்
இப்பொழுது பொருத்தங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் சற்று விரிவாகக் காண்போம்.
தினப் பொருத்தம் :
நட்சத்திர அல்லது தின பொருத்தம் என்பது தம்பதியரின் ஆயுள் ஆரோக்கியத்தை குறிக்கின்றது. வாழ்க்கையின் சிறந்த தருணங்களை வாழ நல்ல ஆரோக்கியமும் செல்வமும் இருப்பது அவசியம்.
ராசிப் பொருத்தம்
இது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் ராசி பொருத்தத்தை குறிக்கின்றது. இரண்டு ராசியும் பொருந்தி இருந்தால் இருவரிடையே இணக்கத்தன்மை சிறப்பாக இருக்கும். மேலும் இந்தப் பொருத்தம் வம்ச விருத்தியை குறிக்கின்றது.
கணப் பொருத்தம்
இது கணவன் மனைவி இருவரின் மனப் பொருத்ததைக் குறிக்கும். கணம் மூன்று வகைப்படும். தேவகனம் – நல்ல மற்றும் அன்பு நிறைந்த குணம் ; மனுஷ கணம் – நல்ல மற்றும் தீய குணம் ; ராக்ஷஸ கணம் – முரட்டுத்தனமான கடின குணம்