தமிழிப் புத்தாண்டு சிறப்பம்சங்கள்

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது தொடங்குகிறது. தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60. ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. 60 ஆண்டுகள் முடிந்த பின் மீண்டும் சுழற்சி முறையில் இந்த பெயர்கள் வரும். இந்த ஆண்டின் பெயர் சோபகிருது. ஏப்ரல் 14,2023 அன்று தமிழ்ப் புத்தாண்டு வருகிறது.
இந்த புத்தாண்டின் சிறப்பு
இந்த புத்தாண்டின் பெயர் சோபகிருது. சோபாகிருது என்றால் 'அழகு அல்லது பொலிவு என்று பொருள். மேலும் இளமையைக் குறிக்கும் புதன் இந்த வருடம் அரசனாக பொறுப்பு ஏற்று இருப்பது சிறப்பு ஆகும். ஒவ்வொரு தமிழ் ஆண்டு பிறக்கும் போதும் ஒவ்வொரு கிரகம் ஒவ்வொரு அம்சங்களில் தலைமைப் பொறுப்பு வகிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ராஜாவாக புதனும், மந்திரியாக சுக்கிரனும், சேனாதிபதியாக குருவும், விளைச்சல் மற்றும் நீருக்கு அதிபதியாக சந்திரனும் தானியங்களுக்கு அதிபதியாக சனியும் வருகின்றனர்.
புத்தாண்டை வரவேற்கும் முறை
புத்தாண்டு நாள் என்பது வருடத்தின் புதிய ஆரம்ப நாளாக கொண்டாடப்படுகிறது. அதனை வரவேற்க மக்கள் அனைவரும் முதல் நாளே தயாராகி விடுவது வழக்கம் எந்தவொரு சுப நிகழ்ச்சிக்கும் இறைவழிபாடு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. எனவே புத்தாண்டின் முதல் நாள் இரவே பூஜை அறையை தயார் செய்து ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம், நகை, ஆடைகள் வைத்து அதன் முன் கண்ணாடி வைத்து விடுவர். புத்தாண்டு அதிகாலையில் எழுந்து கண்ணாடியில் இவற்றைக் கண்டு புத்துணர்ச்சியுடன் அந்த நாளைத் தொடங்குவது வழக்கம். அன்று வாசலில் மாக்கோலம் இட்டு வண்ணப் பொடிகளால் அலங்கரித்து செம்மண் இட்டு வாசலை அலங்கரிப்பார்கள். பூஜை அறையையும் அவ்வாறே அலங்கரிப்பது வழக்கம். புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதும் வழக்கம். இது பாரம்பரிய கலாச்சாரமாக கொண்டாடாப்படுகிறது.
புத்தாண்டு இறை வழிபாடு:
புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விடுவது வழக்கம். புத்தாடைகளை அணிந்து பூஜை அறையில் கோலமிட்டு விளக்கு ஏற்றி இறை வழிபாடு நடத்துவார்கள். இறைவனுக்கு மலர்கள் சார்த்தி தூப தீபம் காட்டி பால் பழம் மற்றும் உணவுகளை நிவேதனமாக படைப்பார்கள். கோவிலுக்கும் சென்று வழிபடுவார்கள்.
புத்தாண்டு உணவு :
அன்று தயாரிக்கும் உணவில் அறுசுவை கொண்ட உணவு அவசியம் செய்வார்கள். அதில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு கார்ப்பு என அறுசுவையும் இருக்கும். வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, இதன் தாத்பரியம் என்னவென்றால் நமது வாழ்வில் இனிப்பு கசப்பு என இரண்டும் கலந்து இருக்கும் என்பதை உணர்த்துவது ஆகும். மேலும் பாயசம் பருப்பு வடை , அப்பளம் அவியல் என்று பண்டிகைக்கான உணவை தயாரிப்பார்கள். கோடைக் காலம் என்பதால் பானகம் நீர் மோர் தயாரிப்பார்கள்.
புத்தாண்டு வாழ்த்து:
அன்றைய தினம் தமிழர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள். உணவுகளை பரிமாறிக் கொள்வார்கள். பரிசுகளையும் பரிமாறிக் கொள்வார்கள்.
