ஆடிக்கிருத்திகை விரதமுறை மற்றும் பலன்கள்

ஆடிக்கிருத்திகை என்பது ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் பண்டிகையாகும். சிவனின் நெற்றிக்கண்ணில் ஆறு குழந்தைகளாகத் தோன்றிய முருகப்பெருமானை வளர்த்தவர்கள் ஆறு கார்த்திகை பெண்கள். இவர்கள் முருகனை இளம் பிராயத்தில் இருந்தே வளர்த்து வந்தவர்கள். பார்வதி அன்னை இந்த ஆறு குழந்தைகளையும் ஒரு சேர அனைத்து ஒரு குழந்தையாக ஆறு முகத்துடனும் பன்னிரண்டு கரங்களுடனும் மாற்றி கந்தன் எனப் பெயர் சூட்டுகிறாள். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் வகையில் கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானை வணங்குபவர்கள் எல்லா நலன்களும் பெறுவார்கள் என்று வரம் அளிக்கிறார். எனவே முருகப் பெருமானுக்கு உரிய விசேஷ நாட்களில் ஒன்று கிருத்திகை நாள். எல்லா மாதத்திலும் கிருத்திகை நட்சத்திரம் வரும் என்றாலும் ஆடிக் கிருத்திகை முருகனுக்கு விசேஷமானது. எனவே அன்றைய தினம் விரதம் இருந்து முருகனை வழிபடுவது சிறப்பு. வருடத்தில் வரும் மூன்று கிருத்திகைகள் அதாவது ஆடி கிருத்திகை, கார்த்திகை மாத கிருத்திகை மற்றும் தை மாத கிருத்திகை இந்த மூன்று கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்தது. இந்த மூன்று கிர்த்திகைகளில் முருகப் பெருமானை வணங்குவதன் மூலம் முக்கோடி கிருத்திகைகளை வணங்கிய பலன் கிட்டும்.
ஆடிக் கிருத்திகை விரத முறை:
ஆடிக் கிருத்திகை அன்று காலையில் எழுந்து நீராடி முருகப் பெருமான் ஆலயம் சென்று முருகனை வழிபடலாம். அன்று அனைத்து முருகர் ஆலயங்களிலும் விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள் அர்ச்சனை நடைபெறும். அதில் பங்கு கொள்ளலாம். காவடி எடுத்தும் வழிபடலாம். இயலாதவர்கள் வீட்டிலேயே முருகப் பெருமானை வணங்கி வழிபடலாம். முருகப் பெருமான் திருவுருவப் படம் அல்லது விக்கிரகம் முன்பு மனை வைத்து அதன் மீது மாக்கோலமிட்டு விளகேற்ற வேண்டும். முருகனுக்கு மலர் சார்த்தி தூப தீபம் காட்டி நிவேதனம் செய்ய வேண்டும். உங்கள் பிரார்த்தனை அல்லது வேண்டுகோளை முருகனிடம் வேண்டி வழிபடலாம். அன்று முழுவதும் உண்ணா நோன்பு இருக்க வேண்டும். முழு உபவாசம் இருப்பது நல்லது. இயலாதவர்கள் பால் பழம் உண்ணலாம். ஒரு சிலருக்கு உபவாசம் இருக்க இயலாத நிலை இருக்கும். அவர்கள் எளிமையான உணவை எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஒரு சிலர் இல்லத்தில் உப்பு சேர்க்காமல் உண்ணும் வழக்கம் இருக்கும். அதையும் செய்யலாம். அன்று வேல் வழிபாடு நல்லது. மாலையில் முருகனுக்கு ஆறு நெய் விளக்கு ஏற்ற வேண்டும். முருகர் தமிழ்க் கடவுள் எனவே முருகப் பெருமானுக்கு விருப்பமான தமிழால் அர்ச்சனை செய்து தமிழ்ப் பாடல்களைப் பாடியோ அல்லது கேட்டோ அல்லது பாராயணம் செய்தோ வழிபடலாம். முருகனுக்கு உரிய கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் கலிவெண்பா, கந்த குரு கவசம், திருப்புகழ் என பாடல்களை பாராயணம் செய்யலாம். பிரார்த்தனையை சமர்பிக்கலாம்.
ஆடிக் கிருத்திகை விரத பலன்கள்:
ஆடிக் கிருத்திகை விரதம் இருப்பதன் மூலம் முன் ஜென்ம வினைகள் யாவும் தீரும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வாழ்வில் அனைத்து நலன்களும் கிட்டும். குறிப்பாக மனை மற்றும் நிலம் சார்ந்த பிரச்சினைகள் தீரும். நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும். தலைமைப் பதவி கிட்டும். வியாபாரத்தில் செல்வ செழிப்பு கிட்டும்.பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கடன் தொல்லைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.
