AstroVed Menu
AstroVed
search
search

ஸ்ரீ காளஹஸ்தி ஆலய வரலாறு

dateApril 12, 2023

பக்தி இருந்தால் முக்தி கிட்டும் என்பதைக் கூறும் வாயுஸ்தல வரலாறு

ஸ்ரீகாளஹஸ்தி கோயில் ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீகாளஹஸ்தி கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது விஜயநகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயரால் 1516 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.. இக்கோயில் தென்னாட்டின் கைலாசம் என்றும் காசி என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ காளஹஸ்தி ஐம்பூதங்களில் ஒன்றான வாயு  ஸ்தலம் ஆகும்.  அங்குள்ள காற்றில் தெய்வீக மற்றும் துடிப்பான ஆற்றல் மிகுதியாக உள்ளது. வசீகரிக்கும் கட்டிடக்கலை மற்றும் அழகுடன் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தி கோயில் எல்லாவற்றிலிருந்தும் தனித்து நிற்கிறது. இந்த கோவிலின் கட்டிடக்கலை குறிப்பிடத்தக்கது, இந்த கோவிலில் சிக்கலான செதுக்கப்பட்ட உட்புறங்களுடன் மிகவும் அலங்கரிக்கப்பட்ட கோபுரங்கள் உள்ளன. இந்த கோவில் தென்னிந்திய கோவில் கட்டிடக்கலையை படிக்கும் மற்றும் ஆராயும் மக்களுக்கு ஒரு பொக்கிஷம் போன்றது.

பாதாள விநாயகர் சந்நிதி:

இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே, பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது; அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் - ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தி. இன்றும் இக்கோவிலில் பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது. இந்த விநாயகரைத் தரிசிக்க பக்தர்கள் 20 அடி ஆழத்திற்கு செல்ல வேண்டியதாக உள்ளது.

காளஹஸ்தி பெயர் விளக்கம்:

ஸ்ரீகாளஹஸ்தி கோயிலின் பெயர் புகழ்பெற்ற புராண இதிகாசத்திலிருந்து பெறப்பட்டது. சிலந்தி (ஸ்ரீ), பாம்பு (காலா), யானை (ஹஸ்தி) ஆகியவை மோட்சம் பெறுவதற்காக இந்த ஊரில் உள்ள சிவபெருமானை வழிபட்டு வந்ததாக புராணம் கூறுகிறது. ஸ்ரீ(சீ) - காளம் - அத்தி = சிலந்தி - பாம்பு - யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்.

கிருத யுகத்தில் சிவபெருமானை வழிபடுவதற்காக கோவில் சன்னிதியின் சுவற்றில் ஒரு சிலந்தி வலையைப் பின்னுகிறது. இவ்வாறு வலையைப் பின்னி சிவபெருமானை வெளிப்புற சேதத்திலிருந்து சிவனை பாதுக்ப்பதாக எண்ணியது. இவ்வாறு செய்கையில் அதனை சோதிக்க எண்ணி சிவபெருமான் விளக்கைப் பயன்படுத்தி அந்த சிலந்தி எரியுமாறு செய்தார். அதனைக் கண்ட சிலந்தி விளக்கை விழுங்குவதாக எண்ணி அதில் எரிந்து போனது. சிவபெருமான் அந்த சிலந்திக்கு முக்தி அருளினார்.

திரேதா யுகத்தில் பாம்பு தினமும் சிவன் சந்நிதிக்கு வந்து தனது ரத்தினங்களால் பூஜை செய்து வந்தது.

அடுத்து வந்த துவாபர யுகத்தில் யானை ஒன்று தினமும் நீரும் வில்வ இலையும் கொண்டு சிவனை வழிபட்டது. அவ்வாறு வழிபடுகையில் சிவன் மீது இருந்த இரத்தினங்களை அது தள்ளிவிடுவது வழக்கமாக இருந்தது. இதனால் கோபமுற்ற பாம்பு யானையின் தும்பிக்கையினுள் புகுந்து கொண்டது. யானை தனது தும்பிக்கையை சிவ பெருமானின் மீது அடிக்க யானை பாம்பு இரண்டும் இறந்து போனது. சிவபெருமான் அந்த பாம்பிற்கும் யானைக்கும் முக்தி அளித்தார்.    

கண்ணப்பநாயனார் கதை:

இக்கோவிலில் திண்ணனார் சிலையும் காண இயலும். 'திருமஞ்சனக் கோபுரம் ' எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால், நேரே பொன்முகலி ஆறு தெரியும்; ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. இவ்வழியேதான் திண்ணனார் (கண்ணப்பர்) பொன்முகலி நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

அர்ஜுனன் சிவபெருமானின் அருளைப் பெறுவதற்காக தின்னனாராகப் பிறந்தார். ஒரு நாள் அவர் அந்தக் கோவிலின் வழியே வந்தார். அவர் சிவ பக்தராக இருந்தார். என்றாலும் பூஜை செய்யும் முறையோ நியமமோ  அவருக்கு தெரியாது என்றாலும். அவர் தான், தினமும் வேட்டையாடும் மாமிசத்தை இறைவனுக்கு படைத்தது வந்தார். ஒரு கையில் வேட்டைப் பொருளும் மறு கையில் மாமிசமும் இருந்ததால் தனது வாயில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வந்து பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டார். அந்தணர் ஒருவரால் இந்தக் கோவில் பராமரிக்கப்பட்டு வந்தது.  அவர் தினமும் நீண்ட தூரம் பயணம் செய்து கோவிலுக்கு வந்து பூஜை செய்வது வழக்கம். அவ்வாறு பூஜை செய்யும் போது ஒரு நாள் லிங்கத்திற்கு அருகில் மாமிசம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை ஏதோ விலங்குதான் செய்திருக்கும் என்று எண்ணி கோயிலை சுத்தம் செய்து தன் பூஜைகளை முடித்துவிட்டுச் சென்றார்.. தினமும் இதே நிலை தொடர கோயிலில் இருந்த மாமிசத்தையும், லிங்கத்தின் மீது இருந்த எச்சிலையும் கண்டு தாங்கமுடியாத அருவருப்படைந்தார். அந்தணர்.

இதை எந்தவொரு விலங்காலும் செய்திருக்க முடியாது, இதைச் செய்தது ஒரு மனிதனாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைத்தார். ஒவ்வொரு முறை அவர் வரும் போதும், லிங்கம் அதே "அசுத்தமான" நிலையில் இருப்பதைக் கண்டு வெகுண்டார். ஒருநாள் கண்களில் கண்ணீர் மல்க சிவனிடம் வந்து, இப்படிப்பட்ட அசிங்கம் உனக்கு நிகழ்வதை நீ எப்படி அனுமதிக்கலாம்?" என்று கேட்டார். அப்போது சிவன் இது அசிங்கம் அல்ல. இது எனக்கு ஒரு பக்தன் அளிக்கும் அர்ப்பணிப்பு. நான் அவன் பக்திக்குக் கட்டுப்பட்டு அவன் அர்ப்பணிக்கும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன். அவன் பக்தியின் ஆழத்தை நீ பார்க்க விரும்பினால், அருகில் எங்காவது ஒளிந்துகொண்டு கவனித்துப்பார். அவன் சீக்கிரமே இங்கு வருவான்."என்றார். அந்தணர் ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார். அப்போது திண்ணன் மாமிசத்துடனும் வாயில் தண்ணீருடனும் வந்தான். எப்போதும் போல் சிவன் தன் அர்ப்பணிப்பை ஏற்காததைக் கண்டு குழம்பிப்போனான். தான் என்ன தவறு செய்தோம் என்று யோசித்துக்கொண்டே லிங்கத்தை உற்று கவனித்தபோது, லிங்கத்தின் வலது கண்ணிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டான்.

அதை குணமாக்க பச்சிலைகளை வைத்துப் பார்த்தான், குணமாகவில்லை, இரத்தம் இன்னும் அதிகமாகத்தான் வந்தது. இறுதியில் தன்னுடைய கண்ணை அர்ப்பணிக்க முடிவுசெய்தான். தன் கத்திகளில் ஒன்றை எடுத்து, தன் கண்ணைப் பெயர்த்தெடுத்து லிங்கத்தின் ரத்தம் வடியும் கண்ணில் பொருத்தினான். இரத்தம் வடிவது நின்றதைக் கண்டு திண்ணன் நிம்மதியடைந்தான். ஆனால் இப்போது லிங்கத்தின் இடது கண்ணிலிருந்து இரத்தம் வடிவதை கவனித்தான். தன் இன்னொரு கண்ணை எடுத்திட கத்தியைக் கண்ணில் வைத்தான், ஆனால் இரண்டு கண்களும் இல்லாமல் எங்கு பொருத்துவது என்று தெரியாமல் போகுமென்பதை உணர்ந்தான். அதனால் லிங்கத்தின் இரத்தம் வடியும் கண் மீது ஒரு காலை வைத்து மற்றொரு கண்ணையும் பெயர்த்தெடுத்தான். திண்ணனுடைய பரிபூரண பக்தியைக் கண்டு அவன் முன்னால் சிவபெருமான் தோன்றினார், அப்போது அவனுக்குப் பார்வை திரும்பி சாஷ்டாங்கமாக சிவனின் காலடியில் விழுந்தான். சிவனுக்காக தன் கண்ணையே அர்ப்பணித்த சிவபக்தர் அல்லது நாயனார் ஆகியதால், அன்று முதல் அவர் கண்ணப்ப நாயனார் என்ற பெயரைப் பெற்றார்.

வாயு ஸ்தல சிறப்பு :

இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது வாயு(காற்று) தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும், நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும், மேற்புறத்தில் - உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம்.

ஆலயத்தின் சிறப்பு:

ஸ்ரீகாளஹஸ்தி கோயில் அழகிய திராவிட கட்டிடக்கலையை பெருமைப்படுத்துகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதால், இந்த பிரமாண்டமான கோவில் பார்வையாளர்கள் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. சிலர் இது ஒரு ஒற்றைக்கல் அமைப்பு என்று நம்புகிறார்கள், அதாவது இது ஒரு பெரிய கல்லால் ஆனது.

சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் போது ஸ்ரீகாளஹஸ்தி கோயிலைத் தவிர,மற்ற அனைத்து கோயில்களும் மூடப்படும். ராகு-கேது பூஜை இங்கு செய்யப்படும் ஒரு குறிப்பிடத்தக்க பூஜையாகும், மேலும் ஸ்ரீகாளஹஸ்தி கோயில் அதற்குப் புகழ் பெற்றது. இந்த பூஜையை செய்தால், ராகு மற்றும் கேதுவின் ஜோதிட பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இத் தலத்தில் பரிகாரம் செய்வதன் மூலம் நிவர்த்தி காண இயலும்.

இந்து புராணத்தின் படி, பிரம்மா எல்லா யுகங்களிலும் இந்த இடத்தில் காளஹதீஸ்வரரை வழிபட்டார் என்று அரிய முடிகிறது. மகாபாரதத்தின் போது  அர்ஜுனன் இங்கு அமர்ந்திருக்கும் கடவுளை வழிபட்டதாக நம்பப்படுகிறது. நக்கீரர் மற்றும் நால்வர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோரின் படைப்புகளும் திருமுறைப் படைப்புகளையும் பற்றி இந்தக் கோயிலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கோயில் தேவாரத்தில் போற்றப்பட்டு  பாடல்  பெற்ற ஸ்தலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சைவ நியதியில் குறிப்பிடப்பட்டுள்ள இருநூற்று எழுபத்தைந்து கோவில்களில் இதுவும் ஒன்று.

ஸ்ரீ காளஹஸ்தி கோவிலைப் பற்றி நாம் தெரிந்து கொண்டால் பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பது விளங்கும். பக்தனுக்கு பக்தி ஒன்றே தகுதி. பக்தியுடன் ஒருவன் செய்யும் எந்தவொரு பூஜையும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை விளக்கும் ஸ்தலமாக ஸ்ரீ காலஹஸ்தி அமைந்துள்ளது.


banner

Leave a Reply