கோவிலுக்கு செல்ல வேண்டியதன் அவசியம் என்ன
நாம் அனைவரும் வீட்டில் பூஜையறை வைத்திருப்போம். அதில் சாமி படங்களை வைத்து பூஜை செய்கிறோம். தினமும் விளக்கு ஏற்றுகிறோம். காலை மாலை என இரண்டு வேளையும் சாமியை வணங்குகிறோம். அவ்வாறு இருக்கையில் நாம் கோவிலுக்கு போக வேண்டுமமா? நாம் கோவில் போக வேண்டியது அவசியமா? அது மட்டும் அன்று கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று கூறுகிறோம். எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் கடவுள். அவ்வாறு இருக்கையில் இறைவனைக் காணவும் அவனை வணங்கவும் கோவிலுக்கு போகத் தான் வேண்டுமா? என்பதைப் பற்றித் தான் இந்தப் பதிவில் காணப் போகிறோம்.
நமது முன்னோர்கள் ஏன் ஆலய வழிபாட்டைக் கொண்டு வந்தார்கள். சூரிய ஒளி எங்கும் பரவி இருக்கும். என்றாலும் அதன் ஆற்றல் ஆலயங்களில் அபரிமிதமாக இருக்கும். பசுவின் உடல் எங்கும் ரத்தம் இருந்தாலும் அது தனது கன்றுக்கு மடியில் இருந்து தான் பால் தரும். அது போல இறைவன் எங்கும் நிறைந்து இருந்தாலும்.கோவிலில் நமக்கு வேண்டிய இறை ஆற்றல் அதிகம் கிடைக்கும். நமது முன்னோர்கள் அவ்வாறு தான் கோவிலை அமைத்து இருக்கிறார்கள்.

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில் தான் ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கும். எனவே கோவிலில் ஒரு அபரிமிதமான காந்த சக்தியும் நேர்மறை ஆற்றலும் அதிகம் நிறைந்து இருக்கும்.எங்கு அதிகமான காந்த சக்தி இருக்கிறதோ அங்கு தான் கர்ப்பகிரம் எனப்படும் மூலஸ்தானம் இருக்கும். அதற்கு கீழே நிறைய செப்புத் தகடுகள் பொறித்து வைத்திருப்பார்கள். இது காந்த சக்தியை வெளிபடுத்தும்.
கோவிலை நாம் இடமிருந்து வலமாக சுற்றுவோம். ஆற்றலின் சுற்றுப் பாதை இடமிருந்து வலம். எனவே கோவிலில் இருக்கும் ஆற்றலை நாம் எளிதாகப் பெற இடமிருந்து வலம் சுற்றுகிறோம்.
கோவிலுக்கு சட்டை அணியாமல் வரச் சொல்வதற்கு அந்த காந்த சக்தி மார்புக் கூட்டில் நேரடியாகப் பாயும் என்பதை கருதித் தான். பெண்கள் தாலி அணிவதும் குங்குமத்தை தாலியில் வைப்பதற்கும் இது தான் காரணம். தங்கத்தில் காந்தக் கதிர்கள் பட்டு அது பெண்களின் உடலில் பாயும்.
நமது உடம்பில் இருக்கும் நரம்புகள் அனைத்தும் நமது பாதத்தில் தான் முடிவடைகின்றன்ர. கோவிலில் கருங்கற்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அதன் மீது நமது காலை வைக்கும் போது நாம் நமது காலை அழுத்துவதன் மூலம் அது அக்குபங்க்சர் போல செயல்பட்டு நமது உடல் உபாதைகளை சரிபடுத்தும்.
கோவிலில் அளிக்கப்படும் துளசி தீர்த்தம் மருத்துவ குணம் மிகுந்தது. அதில் பச்சை கற்பூரம் கலந்து இருப்பார்கள். மேலும் அதனை செப்பு பாத்திரத்தில் வைத்து இருப்பார்கள். இதில் பல மருத்துவ குணம் அடங்கியுள்ளது. அது வாய் துர்நாற்றம் பல் சுத்தம் ஆகியவற்றுக்கு உகந்தது.
இவ்வாறு இன்னும் பல மகிமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் தான் ஆலயம் செல்வது சாலவும் நன்று என்று கூறியிருக்கிறார்கள். அது மட்டுமா – ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கூற்றும் ஆலயத்தின் மகிமையை நமக்கு உணர்த்தும்.










