AstroVed Menu
AstroVed
search
search

அழகன் முருகனின் ஆயுதங்கள்

dateFebruary 26, 2023

முருகனுக்கு அழகன் என்ற பெயர் உண்டு. சிவ பெருமானின் மூன்றாவது கண்ணில் இருந்து ஆறு  நெருப்புப் பொறிகள் தோன்றி  அவை குழந்தைகளாக மாறி கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டனர். ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரு சேர அனைத்த போது  ஆறுமுகங்களுடன் ஓரு குழந்தையாக மாறியது என நாம் புராணங்கள் வாயிலாக அறிகிறோம்.

முருகன் போர்க் கடவுள் என வர்ணிக்கப்படுகிறார். சூரனை  வதம் செய்து சூரசம்ஹாரி என்ற பெயர் பெற்றார். எங்கெல்லாம் தீமைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் முருகன் தனது ஆயதங்களைக் கொண்டு அந்த தீவினைகளை அறுத்து எறிவதாக ஐதீகம்.

முருகப்பெருமானின் வலது புறமுள்ள கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வஜ்ஜிரம் அங்குசம். அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும் இடது புறமுள்ள கரங்களில் வரம் அளிக்குக் கை, தாமரை, மணி, மழு,  தண்டாயுதம், வில்  போன்ற ஆயுதங்களும் காணப்படும்.

காக்கும் கடவுளுக்கு ஆயுதம் எதற்கு? இறைவன் கையில் ஆயுதத்தை வைத்ததின் மர்மமும், சூட்சுமமும் என்ன ? மனிதனுக்கு ஒரு பாதுகாப்பு.  ஆயுதங்கள் செய்யம் வேலையை இறைவனது அருள் செய்யும். மனிதனை நெருங்கும் ஆபத்துக்களை இந்த ஆயதங்கள் வேரறுத்துவிடும் என்பதை உணர்த்தவே. இறைவன் கையில் ஆயுதம் இருப்பது, அறியாமையில் இருக்கின்ற மனிதனுக்கு ‘ உன்னை இறைவன் பாதுகாப்பார். இறைவன் பராக்ரமசாலி, பலசாலி. உலகிலுள்ள சக்திகளுக்கெல்லாம் சக்தி என்பதை புரிந்துகொள்ளவே இறைவனுக்கு பலவிதமான கரங்களும், சிரங்களும் அவற்றில் ஆயுதங்களும் கொடுக்கப்பட்டன.

அழகன் முருகனின் ஆயுதங்கள்

  • வேலாயுதம்
  • சேவற்கொடி
  • அங்குசம்
  • வஜ்ரம்
  • வில்
  • அம்பு
  • பாசம்
  • கத்தி
  • கேடயம்
  • வாள்
  • சூலம்
  • தண்டம்
  • உளி
  • தோமரம்

 

வேலாயுதம்

முருகன் என்றாலே நமக்கு முதலில் நினைவில் வருவது வேல். சூரபத்மன் என்னும் அரக்கனை அழிக்க தேவி சக்தி தனது வலிமை முழுவதையும் திரட்டி வேலை உருவாக்கி முருகனுக்கு கொடுத்து அரக்கனை அழிக்கப் பணித்தாள் என்று புராணங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். முருகனின் வேலாயுதம் சக்திவேல் என்றும் அழைக்கப்படும். வேலுண்டு வினையில்லை என்ற வாசகம் வேலின் மகத்துவத்தை நமக்கு உணர்த்தும். வேல் என்றால் வெற்றி என்று பொருள். எனவே வேலாயுதம் வெற்றியை அளிக்கும் ஆயுதம். மும்மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) அகற்றி ஞானத்தை கொடுக்கும் வேல் குமரனின் வேலாயுதம் என்று போற்றுவார்கள் ஞானிகள்.

சேவற்கொடி

புராணக் கதையின் படி மாமரமாய் இருந்த சூரபத்மனை முருகன் தன் வேல் கொண்டு இரண்டாக அறுத்தான். இரண்டாய் பிளந்த சூரபத்மனின் உடல் பாகம் மயிலாகவும், சேவற்கொடியாகவும் மாறியது. சேவற்கொடியை குக்குடம் என்று கூறுவார்கள். குற்றமற்றவர் உளத்தில் உறைவோனே! குக்குடக் கொடி தரித்த பெருமாளே! என்று அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். அறியாமை என்னும் இருளை போக்கும் ஆயுதம் சேவற்கொடி. விடியற்காலையில்  ஓங்கார மந்திரத்தை ஒலி வடிவில் உணர்த்துவது.  

அங்குசம்

அங்குசம் யானையை அடக்கப் பயன்படுத்தப்படுவது. வலிமை மிக்க யானையை எவ்வாறு ஒரு அங்குசம் கட்டுப்படுத்துகிறதோ அது போல முருகனின் கையில் இருக்கும் அங்குசம் நமது ஐம்புலத்தை அடக்கி நல்வழியில் நம்மை நடத்திச் செல்லும். அது மட்டும் அன்றி நமது சித்தமலமாகிய அகங்காரம் என்னும் ஆணவமலத்தை நீக்கி, நல்வழிகாட்டி இறுதியில் முக்தி அடையச் செய்யக்கூடிய சர்வ வல்லமை படைத்ததாகக் கருதப்படுவதாகும். திருமுருகாற்றுப் படையில் முருகப்பிரானது கரங்களில் ஒன்றில் “அங்குசம் கடாவ ஒருகை” என்று நக்கீரர் குறிப்பிடுவார்.

வஜ்ரம்  

முருகப் பெருமானுக்குரிய முக்கிய படைக்கலமான வஜ்ரம் ஆயிரம் நுனிகளை உடையது. உறுதியான பொருள் எதுவாயினும் அதனை உடைக்கும் வல்லமை உடையது. நாமும் நமது மனதை வஜ்ரம் போல கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற எண்ணங்களை உடைத்து தகர்த்து எறிய வேண்டும் என்பதை உணர்த்தும் ஆயுதம். முருகனின் அருளால் நமது சித்த மலங்கள் யாவும் அகன்று நல் வாழ்வு கிட்டும். முக்தி கிட்டும். .

வில், அம்பு   

வில் என்பது பண்டைக்கால ஆயுதங்களில் ஒன்றாகும். இது அம்புகளை  எய்வதற்குப் பயன்படுகின்றது. அம்பு எய்வதற்கான ஆற்றலைப்  பெறுவது, வில்லின் மீள்தகவுத் தன்மையில் தங்கியுள்ளது.  வள்ளியை அடைய முருகன் எடுத்த வேடன் கோலத்தில் வில்லும் அம்பும் உண்டு. வில்லின் வளையும் நாணின் உறுதியும் இழுத்து விடுபவன் பலமும் அந்த அளவிற்கு அம்பின் வேகமும் அது தைக்கும் வன்மையும் அதிகரிக்கும். மனம் என்னும் வில்லில் எண்ணம் என்னும் நாணை உறுதியாக வைத்து செயல் என்னும் அம்பை சரியாக எய்தினால் நாம் நமது இலக்கை அடைய முடியும்.  

பாசம்

இந்திரனையும் வென்று இறுமாப்புடன் திரிந்த க்ரௌஞ்ச மலையின் செருக்கை சக்தி வேலால் தகர்த்தவரே! பாசம் முதலிய திவ்ய பாணங்களை தரித்து பாரினைக் காத்திட பரிதிபோல் உலா வருபவரே! வள்ளி நாயகரே! எனக்கு உதவும் உமது கரத்தினால் ஆறுதல் அளியுங்கள்!என்பது ஸ்ரீ சுப்பிரமணியர் கராவலம்ப பாடலின் ஓரு பகுதி. முருகன் தனது பக்தர்களை பாசக் கயிற்றால் இழுத்து தன் அங்குசத்தால் அடக்கி முக்தியை அளிக்கிறார்.

கத்தி

முருகனின் படைக்கலங்களுள் கத்தியும் ஒன்று.  தீட்டத் தீட்ட கூர்மையாகும் கத்தி போல முருகனின் மீது பக்தி கொண்டு மனம் என்னும் கத்தியை தீட்டத் தீட்ட கூர்மையான மெய்ஞான அறிவை நாம் பெற முடியும். பகவரை குத்தப் பயன்படுவது கத்தி. நம்முள் இருக்கும்  மும்மலங்கள் மற்றும் தீய குணங்களாகிய கோபம் பொறாமை பேராசை போன்ற எதிரிகளை நல்ல எண்ணங்கள் என்னும் கத்தி மூலம் கிழித்து அகற்ற வேண்டும்.

கேடயம்

கத்தியின் வெட்டையும் குத்தையும் தடுக்கப் பயன்படுத்தும் ஆயுதம் கேடயம் ஆகும். முருகனின் அருள் என்னும் பாதுகாப்புக் கேடயம் நம்மை எதிர்மறைகளில் இருந்து காக்கும். ஏவல், பில்லி, சூனியம், திருஷ்டி தோஷம் போன்ற தீவினைகள் யாவும் முருகனின் அருள் என்னும் கேடயத்தால் நம்மை அணுகாது காக்கப்படும்.

வாள்

வாள்  என்பது நீளமான கத்தி ஆகும். இதனை  கட்டுவாங்கம் என்றும் கூறுவார்கள். இது போர்க்களத்தில் பகைவர்களை வெட்டப் பயன்படுத்தபடும். கூர் முனை கொண்ட வாள் எதிரியை பதம் பார்க்கும்.தீய செயல்களை நாம் செய்தால் தீவினைகள் என்னும் வாள் நம்மை பதம் பார்த்துவிடும். 

கோடாரி

மரம் பிளக்கப் பயன்படும் கருவி போலப் பகைவரின் உடலைப் பிளக்க இது பயன்படும். இது இரும்பால் ஆகியது. வாய் கூர்மையாகவும் பின்புறம் கனமாகவும்  இருக்கும். காம்பில் செருகப்பெற்று இருக்கும். 'பரசு' என்பதும் இதைப்போன்றே இருக்கும். ஆனால், வாய் சற்று வளைந்து கூரியதாக இருக்கும். இதுவும் காம்பில்
செருகப்பெற்றிருக்கும். காங்கேய சுப்பிரமண்யர் என்ற வடிவில் 'பரசு' ஆயுதம் உள்ளதாகக் காட்டப்படுகிறது.

சூலம்

மூன்று நுனிகளைக் கொண்ட ஆயுதம். முருகப் பெருமானின் தந்தையாம் சிவன்  மற்றும் சக்தியின் கையில் இருக்கும் ஆயுதம்.

"சூலம் பிடித்து எம பாசம் சுழற்றித் தொடர்ந்துவரும்
காலன் தனக்கு ஒருகாலும் அஞ்சேன்; கடல் மீது எழுந்த
ஆலம் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே நமக்கு ஒரு மெய்த்துணையே."

முருகனின் வேலாயுதமே சூலாயுதமாய் இருக்க பக்தர்களுக்கு ஒரு போதும் அச்சம் இல்லை.

தண்டம்

நீளமான கைத்தடி, மரத்தாலானது. ‘கந்து’ என்ற சொல்லுக்கு ‘தண்டாயுதம் கொண்டவன்’ என்ற பொருளுண்டு. கந்தசுவாமி வடிவத்தில் பழநியில் தண்டம் ஏந்திக் காட்சியளிக்கிறார். பாசத்திலிருந்து, பந்தத்திலிருந்து, உலக மாயையிலிருந்து மனிதன் எவ்வாறு விடுபடுவது ? இவற்றையெல்லாம் அறுக்கின்ற ஆயுதம்தான் தண்டாயுதம்.

உளி (டங்கம்)

மரத்தைச் செதுக்கப்பயன்படும் கருவி. முருகப்பெருமான் மரமாக மாறிய சூரபத்மனை  செதுக்கி மயிலும், சேவலுமாக மாற்றினான் அல்லவா? குமார தந்திரத்தில் குறிப்பிடப் பெறும் ‘சரவணபவன்’ என்ற வடிவத்தில் பன்னிரு கரங்களில் ஒன்றில் “உளி”யை வைத்துள்ளார்

தோமரம் (உலக்கை)

இந்த ஆயுதம் பகைவர்களைச் சாடப் பயன்படுவது. குமார தந்திரத்தில் குறிப்பிடப்பெறும் ‘தாரகாரி’ என்று வடிவத்தில் உலக்கையை ஒரு கரத்தில் பிடித்துள்ளார். (சூரபத்மனின் இளைய தம்பி தாரகாசுரனை வதைத்தவன் ஆதலால் முருகப் பெருமானுக்கு ‘தாரகாரி’ என்று பெயர்)


banner

Leave a Reply