சிவாலய ஓட்டம் என்பது ஹரனும் சிவனும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்த ஒரு சிவபக்தனைக் கொண்டு விஷ்ணு நடத்திய விளையாடல். சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் நிகழ்வே சிவாலய ஓட்டம்.
சிவாலய ஓட்டம் இந்தியாவின், தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 12 சிவாலயங்களில். மகா சிவராத்திரி அன்று நடைபெறும் திருவிழாவைக் குறிப்பதாகும். இது ஆண்டு தோறும் நடைபெறும். இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் செல்லும் கோவில்கள்
1.திருமலை சூலப்பாணிதேவர்
2.திக்குறிச்சி மஹாதேவர்
3.திற்பரப்பு வீரபத்திரேஷ்வரர்
4.திருநந்திக்கரை நந்தீஷ்வரர்
5.பொன்மனை தீம்பிலான்குடிஷ்வரர்
6.பந்நிப்பாகம் கிராதமூர்த்திஷ்வரர்
7.கல்குளம் நீலகண்டர்
8.மேலாங்கோடு காலகாலர்
9.திருவிடைக்கோடு சடையப்பர்
10.திருவிதாங்கோடு பரசுபாணிஷ்வரர்
11.திற்பன்றிகோடு பக்தவசலேஷ்வரர்
12.திருநட்டாலம் சங்கரநாராயணர்
சிவாலய ஓட்டம் ஆரம்பித்த வரலாறு
புருடா மிருகம் என்ற ஒரு சிவ பக்தன் இருந்தான். அவன் பாதி மனித உருவம், மீதி புலி உருவமாக அமைந்த ஒரு பிறவி அவன் அசைக்க முடியாத சிவ பக்தனாக இருந்தான். அது மட்டும் இன்றி விஷ்ணு என்ற நாமத்தைக் கேட்டால் கூட அதனை சகிக்க முடியாத அளவு விஷ்ணுவின் மீது நம்பிக்கையின்றி துவேஷத்துடன் இருந்தான். சிவனும் தானும் ஒன்று தான் என்பதை அவனுக்கு உணர்த்த விரும்பினார் கிருஷ்ணர் வடிவில் இருந்த விஷ்ணு. அந்த சமயத்தில் குருக்ஷேத்திர யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. போர் வெற்றிக்காக பாண்டவர் பட்சத்தில் ஒரு யாகம் நடத்த வேண்டி ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அந்த யாகம் முழுமை அடைய புருடா மிருகத்தின் பால் தேவைப்பட்டது.
ஆகவே, அவனை சந்தித்து அவனது உதவியைக் கோரி வருமாறு கிருஷ்ணர் பீமனை அனுப்பி வைத்தார். அவ்வாறு அனுப்பும் போது கிருஷ்ணர் பீமனிடம் 12 ருத்ராட்சங்களைத் அளித்து, தன்னுடைய கோவிந்தா, கோபாலா என்ற நாமங்களை உச்சரித்தவாறே புருடா மிருகத்தை சந்திக்குமாறு சொன்னார். ‘‘என் பெயரைக் கேட்க விரும்பாத புருடா மிருகம், உன் மீது பாய ஆரம்பிப்பான். நீ உடனே ஒரு ருத்ராட்சத்தை அந்த இடத்தில் போட்டுவிடு.அது ஒரு சிவலிங்கமாக மாறிவிடும். அதனைக் காணும் புருடா மிருகம், அந்த லிங்கத்துக்கு உரிய வழிபாட்டினை செய்த பிறகுதான் மறுவேலை பார்ப்பான். 2 வது சிவாலயம் திக்குறிச்சி. அங்கு ருத்ராட்சத்தை போட்டுவிட்டு அங்கிருந்து நீ ஓடிவிடு. பிறகு அவன் உன்னை துரத்துவான். அடுத்த இடத்தில் இன்னொரு ருத்திராட்சத்தைப் போடு.
இதுவும் லிங்கமாக மாறும். புருடா மிருகமும் பூஜை செய்யத் தொடங்கி விடுவான். இப்படி பன்னிரண்டு இடங்களுக்கு ஓடி, ஓடி அவனை அலைக்கழித்தால் பன்னிரண்டாவது ருத்திராட்சம் விழும் இடத்தில் நான், பரமேஸ்வரனுடன் உங்கள் இருவருக்கும் காட்சி தருவேன்’’ என்று விளக்கி, பீமன் நடந்துகொள்ள வேண்டிய முறையைச் சொன்னார். பீமனும் அவ்வாறே செய்தான். அப்படி முதல் ருத்திராட்சம் விழுந்த இடம்தான் திருமலை.அங்கு தோன்றிய லிங்கம் சூலப்பாணி தேவர். இரண்டாம் ருத்திராட்சம் விழுந்த இடம் திக்குறிச்சி அங்கு தோன்றிய லிங்கம் மஹாதேவர் மூன்றாவதாக ருத்திராட்சம் விழுந்த இடம் திற்பரப்பு அங்கு தோன்றிய லிங்கம் வீரபத்திரேஷ்வரர். நான்காம் ருத்திராட்சம் விழுந்த இடம் திருநந்திக்கரை அங்கு தோன்றிய லிங்கம் நந்தீஷ்வரர் ஐந்தாவதாக ருத்திராட்சம் விழுந்த இடம் பொன்மனை அங்கு தோன்றிய லிங்கம் தீம்பிலான்குடிஷ்வரர். ஆறாவதாக விழுந்த இடம் பந்நிப்பாகம் அங்கு தோன்றிய லிங்கம் கிராதமூர்த்திஷ்வரர். ஏழாவது கல்குளம்-நீலகண்டர்
எட்டாவது மேலாங்கோடு-காலகாலர்.ஒன்பதாவது திருவிடைக்கோடு-சடையப்பர். பத்தாவது திருவிதாங்கோடு-பரசுபாணிஷ்வரர்
பதினொன்றாவது திற்பன்றிகோடு பக்தவசலேஷ்வரர் பன்னிரண்டாவது விழுந்த இடம் நட்டாலம். நட்டாலத்தில் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து, சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று புருடா மிருகத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கே உணர்த்தினார். யாகத்திற்கு தேவையான பால் தனது மடியில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தான். புருஷா மிருகத்தின் உதவியும் குருக்ஷேத்திர யுத்தத்திற்குக் கிடைத்தது.
ஒவ்வொரு மகாசிவராத்திரி அன்றும் ஒரு குழுவினர் பீமனுடைய பிரதிநிதியாக ஓடி, ஓடிச் சென்று அந்த பன்னிரண்டு சிவாலயங்களையும் தொழுகிறார்கள். இந்த வழிபாட்டின் தனிச் சிறப்பு. அதாவது 24 மணி நேரத்தில், சுமார் 110 கி.மீ. தொலைவுக்குட்பட்ட பன்னிரண்டு சிவாலயப் பெருமான்களை தரிசிப்பது. இந்தக் கோயில்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் தரிசிக்க வேண்டிய காலம் கருதியே ஓட்டம்! இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கு பெறுபவர்கள் மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை 4 மணி அளவில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து செல்வார்கள். முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில், ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கிவிட்டு ஓட ஆரம்பிப்பர். பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள். நிறைவாக மும்மூர்த்திகளும் அருளும் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டு ஓட்டத்தை முடிப்பார்கள். .

Leave a Reply