சூரியன் உச்சம், நீச்சம் பலன் | Suriyan ucham neecham in Tamil

சூரியனின் காரகங்கள் :
சூரியனை மையமாக வைத்து மற்ற அனைத்து கிரகங்களும் சுற்றி வருகின்றன. இதனை கிரகங்களின் தலைவன் என அழைக்கின்றோம். எனவே எல்லாவற்றிலும் முதன்மையானவர்களை சூரியன் குறிக்கும். சூரியனை தந்தை காரகன் என்றும் குறிப்பிடுகிறோம்.கிரகங்களின் நாயகனாக விளங்கும் சூரியன் ஜோதிடத்தில் ஆத்ம காரகன் என்றும் தந்தை காரகன் என்றும் போற்றப்படுகிறார். எனவே சூரியன் தந்தை, தந்தை சார்ந்த குடும்பம், தந்தை வயதை ஒத்தவர்கள், போன்றவற்றிற்கு காரகம் வகிக்கிறார். மேலும் அதிகாரிகள், உயர் பதவியில் இருப்பவர்கள், நாட்டுத் தலைவர்கள், நாட்டை ஆள்பவர்கள், நமக்கு தலைவராக இருப்பவர்கள் போன்றவர்களுக்கு சூரியன் காரகம் வகிக்கிறார். பகற்பொழுது, மாலை, பாறை, காடு, சிங்கம், கோதுமை, தாமிரம், செந்தாமரை, சுவைகளில் காரம், சிவப்பு, நிறம், மாணிக்கம், சிவபெருமான், கிழக்கு திசை போன்றவைகளும் சூரியனின் காரகங்களாகும்.
நம் உடலில் கண்களுக்கும், கண் பார்வைக்கும் காரகன் சூரியன் ஆகும். எனவே உடலில் முக்கிய உறுப்புகளுக்கு காரகன் சூரியன் ஆகும். அதாவது தலை, மூளை, இருதயம் போன்ற உறுப்புகளுக்கு காரகன் சூரியன் ஆகும். அடுத்து உடலில் உள்ள முக்கிய உறுப்பு உடலில் உள்ள எலும்புகள் ஆகும். எனவே எலும்புகளுக்கு காரகனும் சூரியன் ஆகும். உடலில் உள்ள உஷ்ணத்திர்க்கும் சூரியனே காரகன் ஆகும். உடலில் உள்ள உஷ்ணத்தின் மாற்றங்களினால் தான் நோய்கள் (காய்ச்சல்,ஜலதோஷம்) அதிகளவு வருகின்றன. எனவே நோய்களை குணப்படுத்தும் மருத்துவர்களையும், மருந்துப்பொருட்களும் சூரியனின் காரகங்கள் ஆகும்.
சூரியன் உச்சமாக இருந்தால் தரும் பொதுப்பலன்:
சூரியன் மேஷ ராசியில் உச்சம் பெறுகிறார். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆகும் செவ்வாய் நெருப்பு கிரகம். சூரியனும் நெருப்பு கிரகம். எனவே மேஷ ராசியில் சூரியனின் ஆற்றல் அதிகமாக இருக்கும்.
சூரியன் ஒரு ஜாதகத்தில் உச்சமாக இருந்தால் அந்த ஜாதகருக்கு தலைமை தாங்கும் பண்பு இருக்கும். அரசாங்க உத்தியோகம் மற்றும் அரசாங்க ஆதரவு கிட்டும். தந்தையின் ஆதரவு இருக்கும். அதிகாரத் தோரணை இருக்கும். நல்ல உடல் வாகும் கம்பீரமான தோற்றமும் இருக்கும். அதிகாரப் பதவிகள் திடீர் என்று வந்து சேரும். மனோதிடத்துடன் செயல்படுவார். நிர்வாகத்திறன் சிறப்பாக இருக்கும். குறிக்கோள் கொண்டவராக இருப்பார். எதற்கும் அஞ்சாத நெஞ்சம் கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் சுயமாக சிந்தித்து செயல்படுபவராகவும் இருப்பார். தனித்தன்மையுடன் செயல்படுவார். உடல் நலத்தைப் பொறுத்தவரை ஆரோக்கியத்துடனும். நல்ல கண்பார்வையுடனும் வலுவான எலும்புகள் உடையவராகவும் இருப்பார்.
சூரியன் நீச்சமாக இருந்தால் தரும் பொதுப்பலன்:
சூரியன் துலாம் ராசியில் நீசம் பெறுகிறார். நீசம் பெறுவது என்றால் தனது வலிமையை மொத்தமாக இழப்பது. துலாம் ராசியில் சூரியன் தனது வலிமையை இழந்து விடுகிறது.
சூரியன் ஒருவரது ஜாதகத்தில் நீசமாக இருந்தால் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும். பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற அலைச்சல் இருக்கும். அரசாங்க ரீதியிலான ஆதாயங்கள் கிட்டாது. தனிமையில் இருக்க நேரிடும். சமூக அந்தஸ்து குறையும். அவமரியாதைகளை சந்திக்க நேரும். நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள். தீய நட்பால் துன்பங்களை சந்திக்க நேரும்.
உடல் நலத்தைப் பொறுத்தவரை இதய நோய், கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்படையும். எலும்புகள் வலுவற்று காணப்படும். மருத்துவ செலவுகளை மேற்கொள்ள நேரும்.
