திருக்கருக்காவூர் கோவில் : கருவைக் காத்துக் கொள்ளவும் சுகப்பிரசவம் நடக்கவும் செல்ல வேண்டிய கோவில்

பதினாறு பேறுகளில் மக்கட்பேறும் ஒன்றாகும். குழந்தைச் செல்வம் இருந்தால் தான் மனித வாழ்வு நிறைவுற்றதாக இருக்கும். இன்றைய நவீன உலகில் குழந்தைப் பேறு என்பது பல பேருக்கு அதிக முயற்சி செய்து பெற வேண்டி இருக்கிறது. பல மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு இறை அருளும் பக்க பலமாக இருக்க வேண்டியிருக்கிறது
கருவைக் காக்கும் நாயகியாம் கர்ப்ப ரட்சாம்பிகை திருக்கருக்காவூரில் இருந்து பக்தர்களின் கருவினைக் காத்து அருள் புரிகிறாள்.
குழந்தைப் பேறு வேண்டி தவமிருப்போருக்கு எல்லாம் வரப் பிரசாதமாக விளங்குவது திருக்கருக்காவூர் கர்ப்ப ரட்சாம்பிகையின் ஆசிகள் தான். திருக்கருக்காவூர் அன்னை, குழந்தை கருவில் இருக்கும் போதில் இருந்து பத்து மாதங்கள் வரை காப்பது மட்டும் இன்றி சுகப் பிரசவம் நடக்கவும் அருள் புரிகிறாள். இங்கு கோவில் கொண்டிருக்கும் இறைவன் முல்லை வன நாதர் என்ற திருநாமத்தாலும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகின்றனர்.
ஒரு முனிவரின் சாபத்தால் கரு கலைந்து விட, இங்கு ஓடிவந்து கருவினை காக்க வேண்டி நின்ற ஒரு பக்தையின் கருவைக் காத்து சுகப் பிரசவம் நடக்கவும் அன்னை அருள் புரிந்ததாக இத்தல வரலாற்றில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
குழந்தைப் பேறு வேண்டும் பெண்கள், கருவைக் காத்து ரட்சிக்க வேண்டும் பெண்கள், சுகப் பிரசவம் வேண்டும் என்று பிராரத்திக்கும் பெண்கள் இத்தலத்திற்கு வந்து படி மெழுகி இங்கு அளிக்கும் நெய் பிரசாதத்தை நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ள அவர்களது வேண்டுதல் பலிக்கும் என்பது ஐதீகம்.
தல வரலாறு :
முன்னொரு காலத்தில் நித்துருவர் என்ற ஒரு முனிவர் இருந்தார். அவருடைய துணைவியார் பெயர் வேதிகை. இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. குழந்தைப் பேறு வேண்டி இத்தம்பதியினர். இக்கோவிலின் இறைவனான முல்லைவனநாதரை வழிபட்டு வந்த போது வேதிகை கருவுற்றாள். ஒரு நாள் வேதிகையின் இல்லத்திற்கு யாசகம் கேட்டு ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்தார். வீட்டினுள் மயக்கத்தில் வேதிகை இருந்தாள். இதை அறியாத முனிவர் தான் யாசகம் கேட்டும் வெளியே வராமல் தன்னை அவமதித்ததாக கருதி, அவளுக்கு சாபமிட்டு சென்றார். அதன் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது. இதனால் மனவேதனையடைந்த வேதிகை இக்கோவிலின் தேவியான பார்வதியிடம் முறையிட, அந்த இறைவி வேதிகையின் கருவை ஒரு குடத்தில் பத்து மாதம் காலம் காப்பாற்றி “நைதுருவன்” என்ற ஆண் குழந்தையாக வேதிகையிடம் தந்தாள். தன் பக்தையின் கர்ப்பத்தை ரட்சித்ததால் அன்று முதல் இந்த ஆலயத்தின் இறைவி “கர்பரட்சம்பிகை” என அழைக்கப்படுகிறாள். இறைவனே குழந்தை கருவை அழியாமல் காத்ததால் இத்தலம் “திருக்கருகாவூர்” என பெயர் பெற்றது. -
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:
இக்கோவிலுக்கு வந்து வழிபடும் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதில்லை. மேலும் வேண்டுதல் வைக்கும் கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் சுக பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதாகவும் கூறப்படுகிறது. கருவுற்ற பெண்களுக்கு குறைப்பிரசவம், பிரசவ கால வேதனை, பேறு கால மரணம் போன்ற எதுவும் இந்த கர்ப ரட்சாம்பிகையின் அருளால் ஏற்படாமல் தடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வேண்டுதல் நிறைவேறி நல்ல விதமாக குழந்தையை பெற்ற பெண்கள் இக்கோவிலுக்கு வந்து துலாபாரத்தில் எடைக்கு எடை தானியங்கள், வெல்லம் போன்றவற்றை காணிக்கையாக அளிக்கின்றனர். இனிப்புகளை படையலாக வைத்தும் தங்களின் நன்றியை அம்மனுக்கு தெரிவிக்கின்றனர்.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம் : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை. மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோவிலின் முகவரி :
ஸ்ரீ முல்லைவன நாதர் திருக்கோவில், திருக்கருகாவூர், தஞ்சாவூர் மாவட்டம் – 614 302
தொலைபேசி எண் : 4374 273502, 4374 273473, 97891 60819
