நவ என்றால் ஒன்பது. நவதானியங்கள் என்பது ஒன்பது வகையான தானியங்களைக் குறிக்கும். இந்த நவ தானியங்களை நாம் உண்ணும் உணவில் பாரம்பரியமாக பயன்படுத்தி வருகிறோம்.
நவ தானியங்கள்:
கோதுமை ,நெல், துவரை, பச்சசைப்பயறு, கொண்டை கடலை, மொச்சை, எள், உளுந்து,கொள்ளு
தானியங்களும் அவற்றின் சத்துக்களும்:
தானியங்கள் மூலம் அதிக புரதச் சத்துக்கள் கிடைக்கும். கோதுமையில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோடீன் என பல சத்துக்கள் நிறைந்துள்ளன. உமியிலிருந்து தவிடு நீக்காத அரிசியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அரிசியில் புரதம் நார்ச்சத்து வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. கொண்டைக்கடலை மொச்சை கொள்ளு, கருப்பு உளுந்து, பாசிப்பயறு, துவரை ஆகியவற்றில் தாது உப்புக்கள் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து புரதம் என அனைத்துச் சத்துக்களும் நிறைந்துள்ளன. எள்ளின் விதையில் உடலுக்கு தேவையான கால்சியம் இரும்பு வைட்டமின் பி1 வைட்டமின் சி உள்ளது. ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது உடலுக்கு வன்மையும் குருதிப்பெருக்கையும் உண்டாக்கும். உடலை வெப்பமாக வைத்திருக்கவும், உடலில் சீரான ரத்தச் சுழற்சிக்கும்,புத்தி கூர்மைக்கும் வளமான தேகத்திற்கும், இனப்பெருக்க உறுப்புக்களின் ஆரோக்கியத்துக்காகவும், மன ஆரோக்கியத்துக்கும் தானியங்கள் உதவி புரிகின்றன.
தானியங்களின் பயன்பாடு:
தானியங்கள் ஒவ்வொன்றும் உடல் உறுப்பின் நலனை மட்டும் இன்றி உடலின் இரத்த ஓட்டத்தினையும் மன ஆரோக்கியத்தினையும் செம்மையாகவும் சீராகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. நாம் தானியங்களை சுண்டலாக செய்து சாப்பிடுகிறோம். மேலும் அவற்றை முளை கட்ட வைத்து புரதச் சத்தை பெருக்கி நமது உடல் ஆரோக்கியம் மேம்பட அவற்றை உண்ணுகிறோம். சில சமயங்களில் பாசிப்பயறு லட்டு போன்ற உருண்டைகளையும் செய்து உண்ணுகிறோம். இதன் மூலம் உடலுக்கு அதிக புரதச் சத்து கிடைக்கப் பெறுகிறது.
ஆன்மீக நிகழ்வுகளில் மற்றும் பிற சடங்குகளில் தானியங்களின் பயன்பாடு:
தானியங்களை உண்ணும் உணவாக மட்டும் இன்றி சில ஆன்மீக காரியங்களுக்கும் மேலும் சில சடங்குகளுக்கும் பயன்படுத்துகிறோம். இந்து சமய நம்பிக்கையுடையோர் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளுக்காக வீடுகளின் முன்பு பந்தல் அமைத்தல் போன்ற நிகழ்வுகளுக்கான சில வழிபாடுகளின் போது நவதானியத்தை வழிபாட்டுப் பொருளாக வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. ஹோமம் அல்லது யாகம் செய்யும் போதும் நவ தானியங்களை நாம் பயன்படுத்துகிறோம்.
நவ தானியங்களும் நவகிரகங்களும்:
இந்த நவதானியங்களுக்கும் நவ கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு. வாரத்தின் கிழமைகள் ஏழு. ஜோதிட ரீதியாக இந்த ஏழு நாட்களை ஏழு கிரகங்கள் ஆட்சி புரிவதாக ஐதீகம். மீதமிருக்கும் இரண்டு கிரகங்களில் கேது செவ்வாயைப் போலவும் ராகு சனியைப் போலவும் செயல்படும். ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தானியம் உகந்ததாக கருதப்படுகிறது.
கோதுமை – சூரியன்
நெல் – சந்திரன்
துவரை – செவ்வாய்
பச்சசைப்பயறு – புதன்
கொண்டை கடலை – குரு
மொச்சை- சுக்கிரன்
எள் – சனி
உளுந்து - ராகு
கொள்ளு - கேது
நவதானிய பரிகாரங்கள்
சூரியன்:
சூரியனுக்குரிய தானியம் கோதுமை. எனவே கோதுமையால் செய்த உணவுகளை ஞாயிற்றுக்கிழமையில் தானம் செய்துவர நன்மைகள் நம்மை வந்து சேரும். ஜாதகத்தில் இருக்கின்ற சூரிய கிரக தோஷங்கள் நீங்கும் கண் மற்றும் எலும்புகள் தொடர்பான நோய்கள் தீரும். குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் சூரியன் தோஷம் நிவர்த்தியாகும்.
சந்திரன்
சந்திர பகவானுக்குரிய தானியம் நெல். எனினும் நெல்லிலிருந்து பெறப்படும் அரிசி மற்றும் பொரி போன்ற உணவு வகைகளை தானம் செய்யலாம். கோவில் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு பொரி போடலாம். சந்திரனுக்கு பிடித்த தானியம் நெல் எனவே பச்சரிசியில் செய்த உணவுகளை திங்கட்கிழமையில் தானம் செய்துவர நன்மை கிடைக்கும். இதனால் உடல் மற்றும் மன நலம் மேம்படும்.
செவ்வாய்
செவ்வாய் பகவானுக்குரிய தானியம் துவரை. துவரையால் செய்த உணவுகளை பிறருக்கு கொடுப்பதால் பகை எதிர்பாரா விபத்து ஏற்படாமல் காக்கும். திருமணத்தில் ஏற்படுகின்ற தடை தாமதங்களை நீக்கும்.
புதன்
புதன் பகவானுக்குரிய தானியம் பச்சைப்பயிறு. இதை சுண்டல் செய்து தானம் தர நன்மை உண்டாகும். கல்வியாளர்கள், எழுத்துத் துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், திருமணத்தரகர்கள், பங்குச்சந்தை தரகர்கள் புதன்கிழமைகளில் பச்சைப்பயறு தானம் செய்துவர நன்மை பெறலாம். பச்சைப் பயிரை உங்கள் பூஜையறையில் வைத்து வழிபட்டு அதனை பிறருக்கு தானமாக கொடுப்பதால் வீட்டில் உள்ள குழந்தைகளின் கல்வி தடை நீங்கும் பேச்சாற்றல் சிறக்கும் வியாபாரங்களில் சிறந்த வெற்றியை கொடுக்கும்.
குரு
குரு பகவானுக்குரிய தானியம் கொண்டைக்கடலை கொண்டைகடலை மாலையை குரு பகவானுக்கு சாற்றி பிறருக்கு தானம் அளிக்கலாம். வியாழக்கிழமைகளில் தானம் வழங்கினால், நன்மை உண்டாகும். திருமணம், புத்திர சந்தானம், நல்ல வேலை, தொழில், உயர் கல்வி என அனைத்து எதிர்பார்ப்புகளையும் குரு பகவானின் ஆசிகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
சுக்கிரன்
சுக்கிர பகவானுக்குரிய தானியம் மொச்சை. வெள்ளை மொச்சைப் பயறு சுண்டல் செய்து வெள்ளிக்கிழமை தோறும் தானம் தர செல்வ வளம் பெருகும். கலைகளில் சிறந்து விளங்கலாம்.
சனி
சனி பகவானுக்குரிய தானியம் எள் ஆகும் எள் கலந்த உணவை தானம் தர சனியின் அற்புதப் பலன்கள் நம்மை வந்தடையும்.
ராகு
ராகுவின் தானியம் கருப்பு உளுந்து. கருப்பு உளுந்து பருப்பில் செய்த உணவை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தானம் தர அளப்பரிய நன்மைகள் வந்து சேரும்.
கேது
கேதுவின் தானியம் கொள்ளு கொள்ளு கலந்த உணவை தானம் தர தடைகள் அனைத்தும் நீங்கி நினைத்தது நடக்கும்.
நவராத்திரியும் நவ தானியங்களும்:
நவராத்திரி என்றதுமே அனைவரின் நினைவுக்கு வருவது நவதானிய சுண்டல்தான். நவராத்திரிக்கும் நவதானியத்துக்கும் சம்பந்தம் உண்டு. தட்சிணாயணம் காலமான புரட்டாசி மாதத்தில் சூரியனின் வெப்பம் பூமியின் மேல் வெகு குறைவாகப் பரவும். அதனால் பூமி குளிரத்தொடங்கும். இந்தக் காலம் ஒரு விதத்தில் நோய்கள் பரவும் காலம் மற்றும் உடலில் சோம்பல் அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்திருக்கும் காலமுமாகும். எனவே இதனை சீர்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. உடலுக்கு சக்தியும் உள்ளத்திற்கு உற்சாகமும் அளிக்கும் வகையில் தான் இந்த பண்டிகையும் அந்நாட்களில் செய்யப்படும் சுண்டல் போன்ற பட்சணங்ககளையும் நமது முன்னோர்கள் அமைத்து அளித்து இருக்கிறார்கள். எனவே தான் நவராத்திரி நாட்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு தானியத்தை வகுத்து ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற தானியங்களை சுண்டலாக செய்து இறைவனுக்கு படைத்து பிறருக்கும் அளிக்கும் வழக்கம் இன்றும் நம்மிடையே உள்ளது.

Leave a Reply