திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு
உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர் கி.மு 31ல் பிறந்தவர் என அறிஞர்களால் உறுதி செய்யப்பட்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. இவருடைய இயற்பெயர் மற்றும் இவருடைய காலம் முதலிய விபரங்களும் சரிவரத் தெரியவில்லை. சில செவிவழிச் செய்திகளின்படி, இவர் வள்ளுவ மரபைச் சேர்ந்தவர் என்றும், நெசவாளர் குலத்தில் தோன்றியவர் என்றும். சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வசித்து வந்தவர் என்றும் தெரிய வருகிறது; அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். இவருடைய துணைவியார் வாசுகி அம்மையார். கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர்.
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்:
இவருக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. அவை நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர் பொய்யில்புலவர் தெய்வபுதல்வர், செந்நாப்போதானார் தேவர் நாயனார் தெய்வப்புலவர் ஆகும்.
திருக்குறள்:
திருக்குறள் வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் பற்றி நமக்குக் கூறுவதால் அது பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. அவற்றுள் சில முப்பல்நூல், உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து, பொய்யாமொழி, தெய்வநூல்,தமிழ்மறை, ஈரடி நூல், உத்தர வேதம் திருவள்ளுவம் குறளமுது ஆகும். இன்றும் “உலக பொதுமறை” என்று அனைத்து மக்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு நூலினை நமது தமிழ் இனத்தினை சேர்ந்த ஒருவர் எழுதியுள்ளார் என்பது தமிழர்களாகிய நமக்கு மிகப்பெரும் பெருமை என்றே கூறலாம்.அறம் பொருள் இன்பம் என்பன பற்றி கூறியவர் இந்த மூன்று கட்டங்களையும் தாண்டிச் செல்பவன் தானாகவே வீடு பேறு அடைவான் என்று அவர் கூறாமல் விளங்கவைத்துள்ளார். மக்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதனை தனது 133 அதிகாரரங்கள் மூலம் அதிகாரம் ஒன்றிற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 குறளை தெளிவாக பல நூறு வருடங்களுக்கு முன்னரே இந்த உலகிற்கு தெரிவித்து சென்றவர் என்ற பெருமை திருவள்ளுவருக்கு உண்டு
அறத்துப்பால்
- பாயிரவியல்
- இல்லறவியல்
- துறவறவியல்
- ஊழியல்
பொருட்பால்
- அரசியல்
- அமைச்சியல்
- அரணியல்
- கூழியல்
- படையில்
- நட்பியல்
- குடியியல்
காமத்துப்பால்
- களவியல்
- கற்பியல்
திருவள்ளுவரின் பெருமை:
“வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு திருக்குறள் மூலம் தமிழுக்கு புகழை சேர்த்தவர். இவரது மிகச்சிறந்த படைப்பு இந்த திருக்குறள் எனும் நூல் திருவள்ளுவனாரின் திருக்குறளைத் திறனாய்வு செய்த இடைக்காடர் என்னும் புலவர்,
"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்"
எனக் கூறியுள்ளார். கடுகு என்பது மிகவும் சிறியது. ஒரு சிறிய கடுகைத் துளைத்து அதனுள் ஏழு கடலைப் புகுத்தமுடியுமா? முடியாது. ஆனால், அந்த அரிய செயலைத்தான் திருவள்ளுவர் தம் ஒவ்வொரு குறட்பாவிலும் ஆற்றியுள்ளதாக இடைக்காடர் இயம்பியுள்ளார்.
ஒளவையார் என்னும் புலவர்
"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்" என்று கூறியுள்ளார்.
பிளக்க முடியாத - துளைக்க முடியாத அணுவையும் துளைத்து அதனுள் ஏழுகடலைப் புகுத்துவது போன்ற அரிய பெரிய செயலைத் திருவள்ளுவனார் செய்துள்ளாராம். அதாவது ஒவ்வொரு குறளிலும், அரிய பெரிய - ஆழ்ந்த உயர்ந்த - பரந்த விரிந்த கருத்துகள் உள்ளன என்பது இதன் பொருளாகும்.
திருக்குறளின் பெருமை:
திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது. தமிழின் தலையார்ந்த நூல் திருக்குறள் அதை உலகப் பொதுமறை என்று அழைப்பதில் நாம் பெருமை கொள்ளலாம். குறள் காலத்தால் அழியாதது என்றும் வியந்து பாராட்டுகிறோம். அதை வாழ்க்கை நெறி என்றும் கூறி மகிழ்கின்றோம். திருக்குறள் மிகவும் இனிமையானது. கருத்தாழம் கொண்டது. சுருங்கக் கூறி நயமாய் உரைக்கும் சிறப்பு இதில் உள்ளது. ஒவ்வொரு குறளிலும் வேறுபட்ட கருத்துகள் தூய தமிழில் ஆழமாகப் புரியும் வண்ணம் அமையப் பெற்றுள்ளது. இந்த நூலில் மாற்றங்களோ, இடைச் செருகல்களோ அகற்றுதல்களோ செய்யப்படாதது இதற்கு மேலும் பெருமை சேர்க்கும்.
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள்:
இந்த நூலுக்கு திரு பரிமேலழகர், திரு மு.வரதராசனார், திரு மணக்குடவர், திரு மு.கருணாநிதி, திரு சாலமன் பாப்பையா, திரு வீ.முனிசாமிஆகியவர்கள் தமிழில் உரை எழுதியுள்ளார்கள். திரு ஜி. யு போப், திரு ட்ரு, திரு ஜான் லாசரஸ் மற்றும் திரு எல்லிஸ் ஆகியோர் ஆங்கிலத்தில் உரை எழுதியுள்ளார்கள்.
மணிமண்டபம்:
சென்னையில் உள்ள ஒரு முக்கிய பகுதி இந்த “வள்ளுவர் கோட்டம்”. இந்த வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவருக்காக ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குறள் மண்டபத்தில் திருக்குறளின் அனைத்து குறள்களும் பதிக்கப்பட்டுள்ளன . இன்றுவரை தமிழக அரசு அதனை சிறப்பாக பேணிக்காத்து வருகிறது.
வள்ளுவரின் சிலை
கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இவரது திருஉருவ சிலை நிருவப்பட்டுள்ளது. அவரது 133 அதிகாரிங்களின் நினைவாக அந்த சிலையானது 133அடிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையினை செய்த சிற்பியின் பெயர் கணபதி ஸ்தபதி.
வள்ளுவரின் கோயில்
திருவள்ளுவருக்காக அவரது பிறப்பிடமாக கருதப்படும் மயிலாப்பூரில் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இன்றுகூட அதனை நீங்கள் காண முடியும். அந்த கோவிலானது மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோயில் அருகில் உள்ளது.







