x
x
x
cart-added The item has been added to your cart.

கோரக்கர் சித்தர் வரலாறு | Korakkar Siddhar History in Tamil

July 17, 2021 | Total Views : 67
Zoom In Zoom Out Print

கோரக்கர் சித்தர் | Korakkar Siddhar:

பதினெண் சித்தர்களுள் புகழ் பெற்ற சித்தராக விளங்குபவர் கோரக்கர் சித்தர் ஆவர். இவர் அகத்தியர் மற்றும் போகரிடம் சீடராக இருந்தவர். பதினெண் சித்தர்களில் 16வது இடத்தில் உள்ளவர் கோரக்கர் சித்தர் ஆவார். கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரம் 2ம் பாதத்தில் பிறந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன. இவர் தமது இளம் வயதினை கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் கழித்தார். இது இவரது பிறப்பிடமாகவும் கருதப்படுகிறது. கோரக்கர் 80 வயது வரை வாழ்ந்த வட இந்தியர் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய நாட்டின் தென் வட மாநிலங்களிலும், சீன நாடு முதலிய கீழ் நாடுகளிலும் கோரக்கர் வரலாறு அறியப்பட்டுள்ளது.  நாகப்பட்டினம் அருகே வடக்கு பொய்கை நல்லூரில் கோரக்க சித்தர் ஆலயம் உள்ளது.மேலும் பல ஆன்மீக கதைகள், ஜோதிட (Tamil Astrology) தகவல்கள் மற்றும் கோவில்கள் பற்றி அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

கோரக்கர் பிறந்த கதை மற்றும் சித்தரான கதை 

கோரக்கர் சித்தரின் பிறப்பு சித்த புருஷர்களின் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டது. விபூதி எனில் சாம்பல் என்று ஒரு பொருளும், ஞானம் என்று மறுபொருளும் உண்டு. அப்படிப்பட்ட விபூதியிலிருந்து பிறந்தவர் இவர், என்பார்கள். ஆணும் பெண்ணும் கூடி அந்தக்கருவால் வளரும் உயிர்கள் கருமஞ்சார்ந்தவை.ஆனால் அவ்வாறு இல்லாமல், விதிவிலக்காக பல மனித உயிர்களும் தோன்றியுள்ளன. அப்படி விசேஷமாகப் பிறந்தவர்களுள் ஒருவர் தான் கோரக்கர்.

ஒரு முறை சிவ பெருமானும் பார்வதி தேவியும் கடற்கரையில் அமர்ந்து இருந்தனர். அப்போது சிவ பெருமான் பார்வதி தேவிக்கு மந்திர உபதேசம் செய்து கொண்டு இருந்தார். கடலுக்குள் இருந்த மீன்களுள் ஒன்று அந்த மந்திரத்தை கிரகிக்க சிவனின் அருளால் அந்த மந்திரம் மீனின் வயிற்றில் இருந்து மனிதனாக உருவெடுத்தது. சிவனின் அருளால் பிறந்த அவனுக்கு மச்சேந்திரன் என்ற பெயரும் ஏற்பட்டது. சித்தனாக விளங்கிய மச்சேந்திரன் ஒரு தடவை அழுது கொண்டிருந்த ஒரு பெண்மணியின் அழுகைக்கான காரணம் கேட்க அந்தப் பெண் குழந்தையின்மையைக் காரணமாகக் கூறி அழுதாள். மலடியான அவளின் துன்பம் தீர்க்க மச்சேந்திரன், தாயே ! இது  திருநீறு, இதை சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய், என்று சொல்லி திருநீறை கொடுத்து விட்டு சென்று விட்டார். அந்தப் பெண் திருநீறு  வாங்கியதைக் கண்ட தோழி  அவளிடம், அடிபைத்தியக்காரி ! யாராவது திருநீறு கொடுத்தால் அதை வாங்கி விடுவதா ! இதை சாப்பிட்டால் நீ மயங்கி விடுவாய். அந்த சாமியார் உன்னை தன் தவறான இச்சைக்கு ஆட்படுத்தி விடுவார். இதை வீசி எறிந்து விடு, என்றாள். தோழியின் பேச்சைக் கேட்டு பயந்து போன அந்தப் பெண், திருநீறை வீட்டுக்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் எரியும் அடுப்பில் போட்டு விட்டாள். சில ஆண்டுகள் கடந்தன. மீண்டும் மச்சேந்திரரை சந்திக்கும் வாய்ப்பு அந்தப் பெண்ணுக்கு கிடைத்தது. அவள் அழுது கொண்டு நடந்ததைக் கூறி இது வரை தனக்கு குழந்தை இல்லை என்பதையும் கூறினாள். அவளது நிலைமையை உணர்ந்து கொண்ட மச்சேந்திரர் அவளிடம் கோபிக்கவில்லை. சரியம்மா ! உன் வீட்டு அடுப்புச் சாம்பலை எங்கே கொட்டுவீர்கள் ? ஒரு வேளை கொட்டியதை அப்புறப்படுத்தி விட்டீர்களா ? என்றார். இல்லை சுவாமி அடுப்புச்சாம்பலை இதோ அந்த எருக்குழியில் போட்டு வைத்திருக்கிறோம், பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அதை அப்புறப்படுத்துவார்கள். நான் திருநீறை எரித்த சாம்பலும் இத்துடன் கலந்து தான் கிடக்கிறது, என்றாள். மச்சேந்திரர் மகிழ்ந்தார். உனக்கு யோகமிருக்கிறது, என்றவர், எருக்குழியில் அருகே போய், கோரக்கா ! என குரல் கொடுத்தார். என்ன சித்தரே ! என உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. எழுந்து வெளியே வா, என்றார் சித்தர். அப்போது, சாம்பலைக் கொடுத்த நாளில் இருந்து, இதுவரை கடந்த பத்தாண்டுகளைக் கடந்த நிலையில், பத்து வயது சிறுவன் ஒருவன், தெய்வீக  லட்சணங்களுடன் எழுந்து வந்தான். அவனை தாயிடம் ஒப்படைத்தார் மச்சேந்திரர். சுவாமி ! தாங்கள் தந்த திருநீற்றின் மகிமை அறியாமல், வீசி எறிந்தேன். இவனை என் வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை இழந்தேன். என அழுதவள், மகனை அரவணைத்துக் கொண்டாள். ஆனால், அவளது மகன்  அவளை உதறித் தள்ளிவிட்டு  தாயே! என்னை சிறு வயதிலேயே வீசி எறிந்துவிட்டாய். நான் இந்த நாற்றம்பிடித்த குழியில் இவ்வளவு நாளும் கிடந்தேன். என்னை ஒதுக்கிய உன்னோடு இணைந்து வாழ நான் விரும்பவில்லை என்றான்.  மேலும், நான் தவ வாழ்வில் ஈடுபடப்போகிறேன். இருப்பினும், நான் இந்த பூமிக்கு வர காரணமாக இருந்ததற்கும், என் தாய் என்ற முறையிலும் உன்னை வணங்குகிறேன். நான் இந்த சித்தருடன் செல்கிறேன். என்னை வழியனுப்பு, என்றான். தான் செய்த தவறுக்கு வருந்திய அந்தத் தாய் செய்வதறியாது  மகனின் உறுதியான பேச்சை மாற்ற முடியாது என்பதை உணர்ந்து வேறு வழியின்றி கோரக்கருக்கு விடை கொடுத்தாள். அதன்பின் கோரக்கர் மச்சேந்திர சித்தரின் மாணாக்கர் ஆனார். மச்சேந்திரரிடம் இலக்கணங்களோடு ஞான நெறியும் கற்று குருகுலவாசம் இருந்தவர். நாலா திசைகளிலும் அலைந்து சித்தி பெற்றவர்.  

காய கல்பத்தைக் கண்டு பிடித்தவர் கோரக்கர்

மனித வாழ்வில் ஏற்படும் முதுமைக்கும் உடலின் தளர்ச்சிக்கும் எது காரணம் என ஆராய்ந்து உடம்பினை என்றும் இளமையாய் அழகாய் இருக்க உதவும் காய கல்பத்தைக் கண்டு பிடித்தவர் கோரக்கர். இதன் பின்னியில் ஒரு கதை உள்ளது. கோரக்கரின் மனதில்  மனிதனையும் பிற உயிர்களையும் படைக்கும் பிரம்மனின் தொழிலை தானே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த சக்தியைப் பெறுவதற்காக அவர் தனது நண்பரான பிரம்ம முனியுடன் இணைந்து ஒரு யாகத்தைத் துவக்கினார். படைக்கும் தொழில் இந்த சித்தர்களின் கைக்கு போய் விட்டால், தங்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடுமே என அஞ்சிய தேவர்கள் வருணனையும், அக்னியையும் அனுப்பி யாகத்தை அழித்து விட உத்தரவிட்டனர். அவர்களின் காரணமாக யாகம் சரிவர நடைபெறவில்லை. அவர்கள் யாக குண்டத்தில் இருந்து அழகிய இரண்டு பெண்களை படைத்து கோரக்கரையும் பிரம்மமுனியையும் மயக்கி திசை திருப்ப முயன்றனர். என்றாலும்   இன்ப வாழ்வை முற்றிலுமாக வெறுத்த கோரக்கரும், பிரம்ம முனியும்  அந்த  இரண்டு பெண்களையும் தங்கள் தவ வலிமையால் இரண்டு செடிகளாக  மாற்றி விட்டனர். அவை காயகல்ப செடிகள் எனப்பட்டன. கோபம் கொண்டதன் காரணமாக சித்தர்கள் இருவரும் தங்கள் தவ வலிமையை இழந்து விட்டனர். அதை என்னை வருந்திய போது சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றி சித்தர்களுக்கு கோபம் ஆகாது. கோபம் கொண்டவன் தன் பலத்தை இழப்பான். நீங்களும் உங்கள் தவவலிமையை பெருமளவு இழந்து விட்டீர்கள். இனி இந்த காயகல்பத்தைக் கொண்டு, உலக உயிர்கள் பல காலம் வாழ்வதற்குரிய மருந்துகளைத் தயாரியுங்கள், என்றார். அவர்கள் வருத்தப்பட்டாலும், சிவன் சொன்னவாறே செய்தனர். சதுரகிரி மலைக்கும் அவர்கள் வந்ததாக ஒரு தகவல் உண்டு. பல சித்துவேலைகள் செய்து மக்களுக்கு வாழ்வளித்த கோரக்கர், பேரூரில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.

கோரக்கர் ஜீவ சமாதி 

இவரது ஜீவ சமாதி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்கு பொய்கை நல்லூரில் உள்ளது. பொய்கை நல்லூரில் சமாதி கூடியகாலம் கி.பி. 1233ம் ஆண்டாகும். இவர் பட்டினத்தார் காலத்திற்குப் பின்னும் வாழ்ந்திருந்தார் எனக்கூறப்படுகிறது.

கோரக்கரின் ஜீவசமாதி இடங்கள்:

பொதிய மலை,  ஆனை மலை,  கோரக் நாத்திடல் (பாண்டிய நாடு), வடக்கு பொய்கை நல்லூர்,  பரூரப்பட்டி (தென் ஆற்காடு),  கோரக்கர் குண்டா (சதுரகிரி),  பத்மாசுரன் மலை (கர்நாடகம்),  கோரக்பூர் (வட நாடு)இவற்றில் வடக்கு பொய்கை நல்லூர் மற்றும் படூர்பட்டி ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். பொதிய மலை ஆனைமலை சமாதிகள் பற்றி அறிய முடியவில்லை. கோரக்நாத்திடல் மானாமதுரை அருகே வந்தமனூர் என்ற இடத்திலுள்ளது. அங்குள்ள கோரக்கர் சமாதிக்கு சித்ரா பௌர்ணமியன்று பொங்கலிட்டு படையல் செய்து வழிபட்டு வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கோரக்நாத் மந்திர் என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது. ஐப்பசி பௌர்ணமி நாளில் சமாதி கூடிய இவர் அன்றைய தினம் வழிபடுபவர்க்கு (வடக்கு பொய்கை நல்லூரில்) இன்றும் வரம்பல அருள்கிறார் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. கோரக்கரின் தொடர்புடைய பிற மடங்களாகப் பேரூர், திருச்செந்தூர் மற்றும் இலங்கையில் உள்ள திருக்கோணமலை உள்ளது. கோரக்கர் குகைகள் சதுரகிரி மற்றும் கொல்லி மலைகளில் காணப்படுகின்றன. மற்ற சித்தர்களைப் போலவே, கோரக்கர் மருத்துவம், தத்துவம் மற்றும் ரசவாதம் குறித்த பாடல்களையும் எழுதியுள்ளார்

கோரக்கர் எழுதிய நூல்கள்

கோரக்கர் இயற்றிய நூல்களாக இப்பொழுது கிடைப்பவை:

1. கோரக்கர் சந்திர ரேகை
2. கோரக்கர் நமநாசத் திறவுகோல்
3. கோரக்கர் ரக்ஷமேகலை
4. கோரக்கர் முத்தாரம்
5. கோரக்கர் மலைவாக்கம்
6. கோரக்கர் கற்பம்
7. கோரக்கர் முத்தி நெறி
8. கோரக்கர் அட்டகர்மம்
9. கோரக்கர் சூத்திரம்
10. கோரக்கர் வசார சூத்திரம்
11. கோரக்கர் மூலிகை
12. கோரக்கர் தண்டகம்
13. கோரக்கர் கற்ப சூத்திரம்
14. கோரக்கர் பிரம்ம ஞானம்

கோரக்கரின் பதினாறு போற்றிகள் 

1. முருகக் கடவுளின் பிரியரே போற்றி!
2. வாக்கில் சுத்தமுடையவரே போற்றி!
3. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி!
4. கஷ்டங்களை போக்குபவரே போற்றி!
5. அடுப்புச் சாம்பலில் தோன்றியவரே போற்றி!
6. ஆசைகளற்ற அருளே போற்றி!
7. மாயைகளை களைபவரே போற்றி!
8. பூலோகச் சூரியனே போற்றி!
9. மாசற்ற மனமே போற்றி!
10. புகழும், அருளும் நிறைந்தவரே போற்றி!
11. ஞான வழி காட்டுபவரே போற்றி!
12. ஞானஸ்கந்தரே போற்றி!
13. ஜீவ ஜந்துக்களை காப்பவரே போற்றி!
14. காவி வஸ்திரம் தரிப்பவரே போற்றி!
15. உலக மக்களில் நண்பரே போற்றி!
16. உறுதியான மனதிடம் உள்ள கோரக்க சித்தரே போற்றி! போற்றி! என கூறி வணங்க வேண்டும்.

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos