Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
Search

கொங்கணர் சித்தர் வரலாறு | Konganar Siddhar History in Tamil

July 17, 2021 | Total Views : 4,679
Zoom In Zoom Out Print

கொங்கணர் சித்தர் வரலாறு | Konganar Siddhar History in Tamil:

பதினெண் சித்தர்களுள் முக்கியமான சித்தராகக் கருதப்படுபவர் கொங்கணர் சித்தர்.  இவர் கொங்கணர் இனத்தைச் சேர்ந்தவர்.  சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தார். கேரளத்தின் கொங்கண தேசத்தில் புளிஞர் குடியில் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. திருப்பதி மலை புகழ் பெற முக்கிய காரணமாக இருந்தவர் கொங்கணர் சித்தர். மேலும் பல ஆன்மீக கதைகள், ஜோதிட (Tamil Astrology) தகவல்கள் மற்றும் கோவில்கள் பற்றி அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள் 

கொங்கணர் துறவு வாழ்வு மற்றும் தவ வாழ்வு மேற்கொண்டது எப்படி? இது பற்றி  இருவேறு கதைகள் நிலவுகின்றன.

கதை 1:

கொங்கணர் அடிப்படையில் ஒரு இளவரசர் கொங்குநாட்டில் மகராஜன் எனும் மன்னனின் ஒரே மகனாவார். தனது 16வது வயதிலேயே காடுகளை வலம் வரவேண்டும் என்ற ஆசையை தனது தந்தையிடம் முறையிட அவரும் ஏற்பாடு செய்தார். காடு மலைகளை சுற்றி வந்த இளவரசர் பிற உயிர்களின் கஷ்டம் அறியாதவராக  தனது கண்களில் பட்ட  பறவை விலங்கு செடி கொடிகள் அனைத்தையும் தனது வாளினால் வெட்டி வீசி எறிந்து கொண்டே வந்து ஓர் இடத்தை வந்து அடைந்தார். அந்த இடத்தில் இருந்த சுனை நீரில் தனது வாளின் இரத்தக் கரைகளைக் கழுவ, அந்த நொடியில் ஆச்சரியமும் அற்புதமும் நிகழ்ந்தது. இவரால் வெட்டப்பட்ட உயிர்கள் அனைத்தும் மீண்டும் உயிர்த்தெழுந்தது. இந்த நிகழ்ச்சியின் அடுத்த கணம் அவர் மனதை மாற்றியது. இந்த நிகழ்வே இவர் அரச வாழ்வை துறந்து துறவு வாழ்வில் அடியெடுத்து வைக்க காரணமாயிருந்தது. அங்குள்ள குகை ஒன்றில் தவம்செய்து மக்களுக்கு பல நன்மைகளை செய்து வந்தார், அங்கே உத்தண்ட வேலாயுத சாமி திருக்கோவிலை உருவாக்கினார்.

கதை 2:

போகரின்  சீடர்களுள்  கொங்கணர் வேறுபட்டுக் காணப்பட்டார்.   கொங்கணர் கொங்கண தேசத்தில் பிறந்தவர் என்பதால், கொங்கணர் என்று  அழைக்கப்பட்டார் என்பர்.அடிப்படையில் ஆசாரி குலத்தை சேர்ந்தவர் என்றும் இரும்புக் கலம் செய்வது இவர்கள்குலத்  தொழிலாக இருந்தது என்றும் கூறுவார். தொடக்கத்தில் அம்பிகை பக்தராக இருந்த இவரை தனது திருமணத்திற்குப் பிறகு மனைவியின் பேராசையால் பீடிக்கப்பட்டார். . காரணம் அதிக பணம் சம்பாதிக்காத தனது  கணவனை பேடி என வசை பாட, அதற்கான குறுக்கு வழியை இவர் யோசித்தார். சித்த யோகியானால் இரும்பை  தங்கமாக்கலாம் என்றும் காசும் தங்கமும் சேர்த்து வாழ்வில் கடைத்தேறி விடலாம் என்றும் எண்ணினார். . ஆனால் இவரது குருவான போகரின் உபதேசம் இவரை சிறந்த சித்தராக மாற்றியது எனலாம். தவம் செய்து தனது மாயையில் இருந்து மீள முயற்சித்தார்.

கொங்கணர் கற்ற பாடங்கள்:

ஒரு முறை கொங்கணர் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அப்பொழுது கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட்டது. கொங்கணரின் தவமும் கலைந்தது. தவம் கலைந்த  கொங்கணர் கொக்கை சினத்துடன் நோக்க அந்த நொடியிலேயே கொக்கு எரிந்து சாம்பல் ஆகி விட்டது. தவத்தில் இருந்து மீண்ட காரணத்தால் பசி அவரை வாட்டியது. அவர் உணவுதேடி செல்லும் வழியில் ஓர் வீடு இருந்தது. அந்த வீட்டின் முன் நின்று  இவர் உணவை யாசகமாகக் கேட்டார். அந்த வீட்டில்  வாசுகி அம்மையார் தனது கணவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த காரணத்தால்  சிறிது காலம் தாழ்த்தி உணவு கொண்டு வந்தார்.  பசியால் வாடிய கொங்கணருக்கு சினம் வந்து அந்த அம்மையாரை நோக்க நான் ஒன்றும் கொக்கல்ல கொங்கனரே  என்று அந்த அம்மையார் கூறியதும் அந்த அம்மையாரின் ஞான திருஷ்டியையும் கற்பின் திண்மையையும் கண்டு வியந்தார். தமது சினம் கண்டு வெட்கினார்.  அங்கிருந்து கிளம்பினார். வழியில் தர்மவியாதன் என்பவரை சந்தித்தார்.  கொங்கணரைப் பார்த்ததும் தர்மவியாதன் ஓடிவந்து வணங்கினான். பிறகு “சுவாமி! வாசுகியம்மையார் நலமாக இருக்கிறார்களா?” என்று கேட்டார். தர்மவியாதன் பெற்றோரை தெய்வமாய் எண்ணி அவர்களுக்கு பணிவிடை செய்து வாழ்பவன். தாம் வாசுகி வீட்டிலிருந்து தான் வருகிறோம் என்றும் தனது பெயரையும் அறிந்து கூறும்  தர்ம வியாதனின் ஞான திருஷ்டியும்  கொங்கணரை ஆச்சரியப்பட வைத்தது. அப்போது கொங்கணர் ஒரு உண்மையை உணர்ந்தார். அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது, தன்னடக்கத்துடன் இருப்பது ஆகியவைகள் மனிதனிடம் தெய்வ சக்தியை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்த கொங்கணருக்கு மனம் கனிந்தது. தவம் செய்து கிடைக்கும் ஆற்றலை விட தர்ம வழியில் நடப்பவர்களின் ஆற்றல் அறிந்து வியந்து போனார். இப்படி, கொங்கணர் அனுபவத்தால் அறிந்ததும் ஏராளம். தன் சத்குருவான போகருக்கு ஒருமுறை ஒரு பெண்மேல் பிரேமை ஏற்பட்டதை போகர் அறிந்தார். ஆனால் அவளோ அவருக்கு வசப்படாமல் போனாள். போகர் வருந்தினார். இதை அறிந்த கொங்கணர் ஒரு அழகிய சிலையை அவர் விரும்பும் பெண்ணாக்கி போகர் முன் சென்று நிறுத்தினார். ‘கல்லுக்கே உயிர் கொடுக்கும் அளவு உங்கள் சிஷ்யன் தவசக்தி மிக்கவன்’ என்று சொல்லாமல் சொல்ல, போகர் சிரித்து விட்டார். ‘‘இப்படி ஆக்கிக்கொள்ள எனக்குத் தெரியாதா... மாயையில் வந்தது மாயையிலேயே செல்லும்’’ என்று உரைத்த போகர், தன் மனதைக் கவர்ந்த பெண்ணிடம் அழகைக் கடந்த பல அம்சங்கள் இருந்ததைக் குறிப்பிட்டு, ‘‘அதை உன்னால் இப்பெண்ணுக்குள் ஏற்படுத்த முடியுமா?’’ என்று கேட்க, கொங்கணர் சூட்சுமம் அறிந்தார். கொங்கணர் வாழ்வில் இப்படி பலப்பல பாடங்கள். காலப்போக்கில் இரும்பைத் தங்கமாக்குவதில் இருந்து குளிகைகள் செய்வது வரை எவ்வளவோ கற்றார்.

கொங்கணர் இயற்றிய நூல்கள்:

தனிக்குணம் 200;வாத சூத்திரம் 200;வாத காவியம் 3000;வைத்தியம் 200;சரக்கு வைப்பு 200;முக்காண்டங்கள் 1500;தண்டகம் 120;ஞான வெண்பா 49;ஞான முக்காண்ட சூத்திரம் 80;கற்ப சூத்திரம் 100;உற்பக்தி ஞானம் 21;முதற்காண்ட சூத்திரம் 50;வாலைக்கும்மி 100;ஆதியந்த சூத்திரம் 45;நடுக்காண்ட சூத்திரம் 50;முப்பு சூத்திரம் 40;ஞான சைதண்யம்109;கடைக்காண்ட சூத்திரம் 50;உசாத்துணை: சித்தர்கள் வாழ்க்கை வரலாறு

திருப்பதியில் ஜீவ சமாதி அடைதல்:

கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார். தனது குருவின் ஆணைக்கிணங்க திருமாளிகைத் தேவரிடம் சமய மற்றும் நிர்வாண தீட்சை பெற்று பின்பு திருவேங்கட மலை சென்றார் என்பது போகரின் குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. அங்கு பல மகிமைகள் செய்தார் என்றும் 800 ஆண்டுகள் வாழ்ந்த அவர் திருப்பதியில் ஜீவா சமாதி அடைந்தார்.

திருமணத்தடை நீக்கும் கொங்கணர்:

கொங்கணர் கேது கிரகத்தை பிரதிபலிப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.பொதுவாக பலரது திருமண வாழ்வு தடைக்கு ராகு-கேது கிரகங்கள் காரணமாக அமைகின்றன. இவர் சமாதி சென்று வழிபடுவதன் மூலம்  ராகு கேது தோஷங்கள் நீங்கி திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். திருமணத்தடை, களத்திர தோஷம் நீங்கி திருமணம் நடக்கும்.

கொங்கண சித்தருக்கான பூசை முறைகள்: உடலையும் மனதையும் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு மனையை மெழுகி கோலமிட்டு அஷ்ட திசைகளிலும் ந்தனமும், குங்குமமும் இடவேண்டும். அந்த மனையின் மீது கொங்கணரின் உருவப்படத்தை வைக்க வேண்டும். குத்து விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் மலரிட்டு அலங்கரித்து, விளக்கில் முக்கூட்டு எண்ணெய் விட்டு, தீபத்தை ஏற்றி பூசையைத் துவங்க வேண்டும். முதலில் தியான ஸ்லோகம் சொல்லி பிறகு மலர் சாற்றி , வில்வ இலைகள் சாற்றி கீழ்கண்ட 16 போற்றிகளைச் சொல்லிக் கொண்டே சாமந்தி மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:

1. கம்பீரமான தோற்றம் உள்ளவரே போற்றி!
2. அம்பிகைப் பிரியரே போற்றி!
3. இரசவாத சித்தரே போற்றி!
4. அர்ச்சனையில் மகிழ்பவரே போற்றி!
5. சிறந்த தவசக்தி பெற்றவரே போற்றி!
6. செல்வங்களைத் தருபவரே போற்றி!
7. வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி!
8. நோய்களை அழிப்பவரே போற்றி!
9. வறுமையை போக்குபவரே போற்றி!
10. ஞானம் அளிப்பவரே போற்றி!
11. தீய கனவுகளில் இருந்து காப்பவரே போற்றி!
12. மாயையை அகற்றுபவரே போற்றி!
13. கருணாமூர்த்தியே போற்றி!
14. காவி வஸ்திரம் தரித்தவரே போற்றி!
15. கொங்கு தேசத்தவரே போற்றி!
16. குலம் விளங்கச் செய்பவரே போற்றி!
இவ்வாறு அர்ச்சித்தபிறகு “ஓம் ஸ்ரீம் கொங்கணமுனி சித்தர் பெருமானே போற்றி!” என்று 108 முறை ஜெபித்து பிரார்த்தனையை கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.
ஸ்ரீ கொங்கணசித்தரின் பூஜா பலன்கள்: முறைப்படி இவரை வழிபட்டால்
1. மனவளர்ச்சி அபிவிருத்தி ஏற்படும்.
2. ராகு கேது தோஷம் நீங்கும்.
3. களத்திர தோஷம் நீங்கும்
4. தியானம், தவம் சித்திக்கும் 
5. தீயோர் நட்பு நீங்கும்.
6. ஆன்மீக ஞானம் மேம்படும் 
7. மனதில் அமைதி நிலவும் 
இவருக்கு மஞ்சள், அல்லது சிவப்பு வர்ணங்கள் உடையை வைத்து அல்லது அணிவித்து பூஜை செய்யலாம். வழிபட சிறந்த நாள் வெள்ளிக்கிழமை.
நிவேதனம்: தயிர்சாதம், கல்கண்டு, பழங்கள்.

banner

Leave a Reply

Submit Comment