x
x
x
cart-added The item has been added to your cart.

அகத்தியர் வரலாறு | Agathiyar History In Tamil

July 17, 2021 | Total Views : 70
Zoom In Zoom Out Print

அகத்தியர் வரலாறு:

அகத்தியர் தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி என்ற பெயர்களிலும்  அழைக்கப்படுபவர். அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். அகத்தியர் மித்திர வருணரின் மகனும், வசிட்டரின் சகோதரரும் ஆவார். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை ஆகும். இவர் சிவபெருமானிடம் இருந்து தமிழைக் கற்றவர் ஆவார். இவரது பாடல்கள் மூலம்  இவர்  பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பதை நாம் அறிய முடிகிறது. மேலும் பல ஆன்மீக கதைகள், ஜோதிட (Tamil Astrology) தகவல்கள் மற்றும் கோவில்கள் பற்றி அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

சிறப்புப் பெயர்கள்:

தமிழ் இலக்கணம் அருளியதால் தமிழ் முனிவர் என்றும், அதிக தவம் செய்ததால் மாதவ முனிவர் என்றும், மிகப் பெரிய முனிவர் என்பதால் மாமுனி என்றும், முனிவர்களுக்கெல்லாம் குரு  என்பதால் குருமுனி என்றும், போற்றுதற்கு உரியவர் என்பதால் திருமுனி என்றும், பொதிகையில் வாழ்ந்தவர் என்பதால் பொதிகை முனி என்றும், இன்றளவும் அழியாப் புகழ் பெற்றமையால் அமரமுனி என்றும், குடத்தில் பிறந்ததால் குடமுனி என்றும்  பல சிறப்புப் பெயர்களைப் பெற்றவர் அகத்தியர். 

அகத்தியரின் சிறப்புகள்:

அகத்தியரின் பிறப்பே மனிதப் பிறவியில் இருந்து  வேறுபட்டது. தாரகன் என்னும் அசுரன் கடும் தவம் புரிந்ததன் மூலம், கடலுக்குள் சென்று ஒளிந்து வாழும் வரத்தினையும், ஒரு குடம் அளவு உள்ளவரால் தான் தனக்கு மரணம் அமைய வேண்டும் என்ற வரத்தையும் பிரம்மனிடம் இருந்து பெற்றுக்கொண்டான்.  அவன் மற்ற அரக்கர்களுடன் சேர்ந்து  தங்களுக்கு கிடைத்த வரத்தை துஷ்பிரயோகம் செய்து உலகை அச்சுறுத்தி  வந்தான்.  உலக மக்களை  காப்பாற்றுவதற்காக தேவலோகத்திலிருந்து இந்திரன் கோபத்துடன் தாரகனை அழிக்க பூலோகம் வந்தடைந்தார். இதனைக் கேள்வியுற்ற தாரகனோ கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான். தாரகனை பின் தொடர முடியாத இந்திரன் முதலில் அக்னி பகவானை அழைத்து, உன் வெப்பத்தால் இந்த கடலை ஆவியாக்கி விடு என்று கூறினார். ஆனால் அக்கனி பகவானோ “கடல் நீர் இருந்தால் தான் மழை பெய்யும். தண்ணீர் இல்லாமல் எந்த ஜீவராசியும் பூமியில் வாழ முடியாது. இந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன்.” என்று கூறிவிட்டார். இரண்டாவதாக இந்திரன் வாயு பகவானை அழைத்து வறண்ட காற்றினால் கடலை வற்ற வைக்கும்படி கூறினார். ஆனால் வாயு பகவானும், அக்னிதேவன் கூறிய காரணத்தை கூறி தன்னாலும் முடியாது என்று கூறிவிட்டார். இதனால் கோபமடைந்த இந்திரன் வாயு பகவானுக்கும், அக்னிபகவானுக்கும் பூமியில் மனிதனாக பிறந்து கஷ்டப்பட வேண்டும் என்ற சாபத்தினை அளித்தார். அக்கனிபகவான் மித்திரா என்ற பெயரிலும், வாயு பகவான் வர்ணன் என்ற பெயரிலும் பூமியில் மனிதனாக பிறந்தனர். ஒரு நாள் குளத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது, மித்திரனும், வர்ணனும் ஊர்வசி என்னும் தேவ லோக கன்னிகையைக் கண்டனர். இப்படிப்பட்ட பேரழகியை அவர்கள் கண்டதில்லை. அப்போது அவர்களிடம் இருந்து வீரியம் வெளிப்பட்டது. மித்திரர் தன் கையில் இருந்த கும்பத்தில் வீரியத்தை வெளியிட்டார். வர்ணன் தன் வீரியத்தை தண்ணீரில் விட்டார். கும்பத்தில் இருந்து அவதரித்தவர் தான் அகத்திய முனிவர். தண்ணீரிலிருந்து அவதரித்தவர் தான் வசிஷ்ட முனிவர். அகத்தியர் குடத்தின் அளவே இருந்தார். குடத்தின் அளவு உள்ள அகத்தியரிடம் தேவர்கள்  சென்று தாரகன் செய்து வரும் கொடுமைகளை பற்றி கூறினார்கள். தாரகனை அழித்து தங்கள் அனைவரையும் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் தேவர்கள். அகத்தியரும் தேவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். தாரகனை அழிக்க அகத்தியர் 12 ஆண்டுகள் தண்ணீரின் மேல் தவம் செய்தார். கடும் தவத்தினால் பல அரிய வரங்களை அகத்தியரால் பெறமுடிந்தது. அகத்தியர் இந்திரனுடன் இணைந்து தாரகனையும் அவனது அசுர குலத்தையும் அழிக்க சென்றார்கள். இதனை அறிந்த தாரகன் மறுபடியும் கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான். அகத்தியர் தன் தவ வலிமையினால் பெற்ற சக்தியின் காரணமாக கடல் நீர் அனைத்தையும் குடித்து விட்டார். அதன்பின்னர் இந்திரன் கடலுக்குள் சென்று தாரகனை வதம் செய்தார். தாரகனை வதம் செய்த பிறகு அனைத்து நீரையும் கடலிலேயே விட்டு விட்டார் அகத்தியர்.

தென் திசை மேடாக்கிய அகத்தியர்:

கயிலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது. தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார்.

வாதாபி, வில்வளவன் அரக்கர்களுக்கு பாடம் புகட்டிய கதை 

வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர்கள் இருந்தனர். இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

இராமாயண காவியத்தில் அகத்தியர்:

இராமாயணக் காப்பியத்தில், இராமன் வன வாச காலத்தில், அகத்தியர்  ராமனை சந்தித்து மந்திர பல மிக்க ஆயுதங்களை அருளினார். இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.

காவிரி உருவான கதை:

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.

அகத்தியர் எழுதிய நூல்கள்:

அகத்தியர் ரிக் வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர்.அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர் என்று கூறப்படுகிறது.  இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. அகத்தியம் பற்றிய யாதொரு குறிப்பும் தொல்காப்பியத்திலும்  எங்கும் குறிக்கப் பெறவில்லை. இவர் தினை மாவு, பயனளிக்கும் தானியங்கள், விசம் தோய்ந்த அம்புகள், தர்ப்பைப்புல் ஆகியவைகள் பற்றி கூறியுள்ளார்.அகத்தியர் வெண்பா, அகத்தியர் வைத்தியக் கொம்மி, அகத்தியர் வைத்திய ரத்னாகரம், அகத்தியர் வைத்தியக் கண்ணாடி, அகத்தியர் வைத்தியம் 1500, அகத்தியர் வைத்திய சிந்தாமணி, அகத்தியர் கர்ப்பசூத்திரம், அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம், அகத்தியர் வைத்தியம் 4600, அகத்தியர் செந்தூரம் 300, அகத்தியர் மணி 4000, அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு, அகத்தியர் பஸ்மம் 200, அகத்தியர் நாடி சாஸ்திரம், அகத்தியர் பக்ஷணி, அகத்தியர் கரிசில் பஸ்யம் 200, சிவசாலம், சக்தி சாலம், சண்முக சாலம், ஆறெழுத்தந்தாதி, காம வியாபகம், விதி நூண் மூவகை காண்டம், அகத்தியர் பூசாவிதி, அகத்தியர் சூத்திரம் 30 போன்ற நூல்களை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும் அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம், அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சித்த மருத்துவத் துறையில்  அகத்தியர்:

அகத்திய முனிவர் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவமுறைகளை வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய "அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்" வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் சித்த வைத்தியத்திற்கு செய்த பணி சிறப்பானது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோசங்கள் பற்றி கூறியுள்ளார்.

அகத்தியர் சமாதியும் ஆலயமும்:

அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்தியர் தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தவர் ஆவார். புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக்கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் அழைக்கின்றனர்.

பதினாறு போற்றிகள்:

தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
சித்த வைத்திய சிகரமே போற்றி!
சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
இசைஞான ஜோதியே போற்றி!
உலோப முத்திரையின் பதியே போற்றி!
காவேரி தந்த கருணையே போற்றி!
அகத்தியம் தந்த அருளே போற்றி!
இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
இன்னல்கள் போக்கி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos