கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோயில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பெரிய கோயிலாகும். இது ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 210 வது தேவார திருத்தலம். சம்பந்தர் ,அப்பர், சுந்தரர் ஆகியோர் பதிகங்களை இயற்றியுள்ளனர். சுந்தரர் தம்முடைய நமச்சிவாயப்பதிகத்தை இங்கு இயற்றியுள்ளார், பல இலக்கியப் படைப்புகள் இக்கோயிலின் பெருமையைப் போற்றுகின்றன. இக்கோயில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. காவேரி நதிக்கரையில் கட்டப்பட்ட கோவில்களில் ஒன்றாக இந்த கோவில் கருதப்படுகிறது. அகஸ்திய முனிவர் இக்கோயிலுடன் தொடர்புடையவர்.
கோவில் அமைப்பு :
கிழக்கு நோக்கிய ஆலயம் 640 அடி நீளமும் 484 அடி அகலமும் கொண்டது. இக்கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் சன்னதிகள் இருப்பதால் திரிமூர்த்தி கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான கோவிலுக்கு கிழக்குப் பகுதியில் 3 நுழைவாயில்கள் உள்ளன. மத்திய வாயிலின் வடக்கே கொடுமுடி நாதர் மற்றும் மகுடேஸ்வரர் எனப்படும் சிவபெருமானின் சன்னதிக்கான நுழைவாயில் உள்ளது. மத்திய வாயிலின் தெற்கே பன்மொழி நாயகி மற்றும் சௌந்தராம்பிகை என்று அழைக்கப்படும் அவரது துணைவியார் அன்னை பார்வதியின் சன்னதிக்கான நுழைவாயில் உள்ளது. விஷ்ணு பகவான் வீரநாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். குஞ்சிதபாத நடராஜர் இடது பாதத்தை உயர்த்திய நிலையில் காட்சி தருகிரார். ஸ்தல விருட்சம் வன்னி மரமாகவும், தீர்த்தம் காவேரி நதியாகவும் உள்ளது. இது 7 முக்கிய சந்நிதிகளைக் கொண்ட பெரிய கோவில் வளாகமாகும்.
இங்கு மகுடேஷ்வர்,சுந்தரநாயகி (அம்மன் கோவில்) வீரநாராயண பெருமாள்,திருமங்கை நாச்சியார் தாயார்,வன்னி மரம்,ஆஞ்சநேய சுவாமி,சனீஸ்வர்,சூரியன் & சந்திரன்என கல்லால் ஆன தனி சன்னதிகள். உள்ளன இங்கு மகுடேச்வரர் மலை கொளுந்தீச்வரர் என்றும் சவுந்திர நாயகி வடிவுடை அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
கல்வெட்டு ஆதாரங்கள்:
பாண்டிய மன்னர்கள் கோவிலுக்கு தொடர்ந்து ஆதரவளித்துள்ளனர் மற்றும் பாண்டிய மன்னர்களின் தொடர்பு காரணமாக, இந்த சிவஸ்தலம் திருப்பாண்டிகொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் மன்னர் சுந்தரபாண்டியன் கேசரியின் ஆட்சிக்கால கல்வெட்டுகள் உள்ளன. மலையத்துவுஜ பாண்டியன், மாறவர்மன் சுந்தரபாண்டியன், பாண்டிய கேசரிவர்மன் போன்ற பாண்டிய மன்னர்கள் இக்கோயிலுக்கு நிலம், நகைகள் போன்றவற்றை தானமாக வழங்கியவர்களாவர்.
தல வரலாறு
ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் மேருமலையை ஒரு கயிறு கட்டி ஒரு பக்கம் ஆதிசேஷனும், மறுபக்கம் வாயு தேவனும் இழுத்தனர். ஆதிசேஷன் மேரு மலையை தன் கைகளால் கட்டி அணைத்துக் கொண்டார். வாயு பகவான் அவரது காற்றின் வேகத்தால் ஆதிசேஷனை மலையை விட்டு மேலிருந்து கீழே தள்ள, காற்றை வேகப்படுத்தி வீசினார். இதனால் மேரு மலையானது அழுத்தம் தாங்காமல் ஏழு துண்டுகளாக வெடித்து சிதறியது. வெடித்த துண்டுகள் அனைத்தும் ரத்தின கற்களாக மாறி லிங்கமாக உருமாறியது. அதில் ஒன்றுதான் கொடுமுடி. இந்த தலத்தில் வைர கல்லாலான லிங்கம் உள்ளது. இந்த லிங்கமே மகுடேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
சிறப்பம்சம்
இந்தக் கோவிலில் ஒரு வன்னி மரம் உள்ளது. இந்த வன்னிமரத்தின் வயதை நம்மால் கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையானது. இந்த மரத்தில் பூக்கள் பூக்கிறது. ஆனால் காய் காய்க்காது. மரத்தின் ஒரு பக்கத்தில் முள் இருக்கும். மறுபக்கத்தில் முள் இருக்காது. இந்த மரத்தின் இலையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், தண்ணீரில் இந்த இலையை போட்டு வைத்தால் தண்ணீரானது எத்தனை நாட்கள் ஆனாலும் கெடுவதில்லை.
இந்த கோவிலில் வீற்றிருக்கும் லிங்கமானது சுயம்பு லிங்கமாகும். அகத்தியர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பூஜை செய்ததற்கு அடையாளமாக லிங்கத்தின் மீது விரல் தடயங்கள் உள்ளதை காணலாம்.
இந்த கோவிலின் புராணக்கதை அகஸ்திய முனிவருடன் தொடர்புடையது. ஒருமுறை அந்தச் சிலை மறைந்து கொண்டிருப்பதை முனிவர் கவனித்தார். அவர் சிலையை கையில் பிடித்ததால் அவரது கைரேகைகள் தெய்வத்தின் மீது காணப்படுகின்றன.
தலப் பெருமை
இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் தரிசிக்கலாம். இங்கு மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம். வன்னி மரத்தை நான்காவது முகமாக பாவித்துக் கொள்ள வேண்டும். ஆதி சேஷனால் உருவான கோவில் என்பதால் இங்கு நாகர் வழிபாடு விசேஷம். இங்கு அகத்தியர், பரத்வாஜர் போன்ற முனிவர்களுக்கு இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி அளித்தார். கோரமான பல்லுடன் இங்கே ஆஞ்சநேயர் காட்சி அளிக்கிறார். வாலில் மணி கட்டப்பட்டுள்ளது.
விழாக்கள்
தமிழ் மாதமான சித்திரையில் பிரம்மோத்ஸவம் கொண்டாடப்படுகிறது சித்திரை திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.ஆடிப்பெருக்கில் ஆற்றில் தீபங்கள் ஏற்றப்பட்டு மிதக்கப்படுகின்றன. மற்ற விழாக்கள் ஐப்பசி பௌர்ணமி, தைப்பூசம் மற்றும் ஆருத்ரா தரிசனம். பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் விசேஷ பூஜை உண்டு.பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் 4 நாட்களுக்கு சூரியனின் கதிர்கள் சிவன் மற்றும் அம்பாளின் சன்னதியை ஒளிரச் செய்கின்றன.
பரிகார வழிபாடுகள்
ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்வதால் தோஷ நிவர்த்தி கிட்டும். திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும். ஆதிசேஷனால் உருவாக்கப்பட கோவில் என்பதால் இங்கு பரிகாரம் செய்வதன் மூலம் நாக தோஷங்கள் நீங்கும். நவகிரக்ததிற்கு பூஜை செய்து வாழை மரத்திற்கு தாலி கட்டும் பரிகார வழிபாட்டு வழக்கமும் இந்த கோவிலில் உள்ளது. அரச மரமும் வேப்பமரமும் இணைந்தது இருக்கும் இடத்தின் கீழ் உள்ள விநாயகருக்கு, ஒருவருக்கு எத்தனை வயதோ அத்தனை குடம் தண்ணீர் ஊற்றினால் திருமண வரமும் குழந்தைப் பேறும் கிட்டும் என்பது ஐதீகம்.
செல்லும் வழி:
ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும், கரூரில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலும் இக்கோயில் உள்ளது.
முகவரி: அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், திருப்பாண்டிக் கொடுமுடி-638 151, ஈரோடு மாவட்டம்.
ஆலயம் திறந்திருக்கும் நேரம் :காலை 6 முதல் 12 மணி வரை -மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை

Leave a Reply