தெய்வங்கள் பல இருந்தாலும் வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத வகையில் முருகனுக்கு மட்டும் காவடி எடுக்கும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விசேஷ வழிபாட்டு முறை உண்டு. அந்த முறையில் தான் முருகப் பெருமானுக்கு காவடி எடுக்கும் பழக்கம் உள்ளது. சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி மாத உற்சவம், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் என முருகனை போற்றி வழிபட பல முக்கிய விசேஷ நாட்கள் உள்ளன. இயற்கையை போற்றிய தமிழரிடம் இறை உணர்வு அதிகம் இருந்தது. நமது நாட்டில் தெய்வத் திருத்தலங்களில் அதிகம் காணப்படுவது முருகன் ஆலயமே. முருகனை வழிபட விரதமிருந்து பாத யாத்திரை செல்வது, காவடி எடுப்பது என பல வகையிலும் வழிபாடு செய்கின்றனர்.
காவடி வந்த வரலாறு:
இடும்பன் அகஸ்திய முனிவரின் சீடர்களுள் ஒருவர். அகத்திய முனிவரின் கட்டளைக்கிணங்க இடும்பன் கவுதடி என்னும் தடியின் இரு புறங்களிலும் சிவ கிரி மற்றும் சக்தி கிரி என்னும் இரண்டு மலைகளை கட்டித் தொங்கவிட்டு பொதிகை மலையை நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் பழனி என்ற இடம் வந்தது. இடும்பன் சற்று இளைப்பாற விரும்பி தனது தடியுடன் மலைகளை கீழே வைத்தான். களைப்பு தீர இளைப்பாறி முடித்ததும் மலையை தூக்க முயன்றான், முருகன் இவ்விரு மலைகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். இடும்பன் சிறுவனாக வந்து இடும்பனின் தோல்வியை கேலி செய்தான். சிறுவன் முருகன் தான் என அறியாத இடும்பன் சிறுவனை பிடிக்க முயற்சித்தான். தனது முயற்சியின் போது அவன் தவறுதலாக கீழே விழுந்து விட்டான். பின்னர் முருகன் இடும்பனை காப்பாற்றி அருளினார். இடும்பனின் வேண்டுகோளுக்கு இணங்க பழனி முருகனின் காவல் தெய்வமாக இருக்க அருளினார், மேலும் காவடி சுமந்து வரும் பக்தர்களின் குறைகளுக்கு நிவர்த்தி அளிக்க வேண்டும் என்ற வரத்தினை கேட்டு வாங்கினான் இடும்பன். அன்றிலிருந்து காவடி சுமந்து வரும் பக்தர்களுக்கு முருகப்பெருமான் முருகன் அருள் புரிவதாக ஐதீகம்.
இவ்வாறு தான் நம்மிடையே காவடி தூக்கும் வழக்கம் நிலவி நிற்கின்றது.
காவடியின் வகைகள:்
''காவடியில் பால் காவடி, பன்னீர்க் காவடி, சர்க்கரைக் காவடி, பூக்காவடி, சந்தனக்காவடி, பழக்காவடி, அன்னக் காவடி, அக்கினிக் காவடி, நெய்க் காவடி, தைலக் காவடி, பானகக் காவடி, பாவைக் காவடி, ரத்தினக் காவடி,விலங்குக் காவடி, வேல் காவடி, தானியக் காவடி,கற்பூரக் காவடி, விபூதிக் காவடி, இளநீர்க் காவடி, செருப்புக் காவடி, மச்சக் காவடி, தேன் காவடி, சொர்ணக் காவடி, மஞ்சள் காவடி, மாப்பொடிக் காவடி, அவல் காவடி, விளக்குக் காவடி, பச்சிலைக் காவடி, பாண்டக் காவடி, ஆயுதக் காவடி, பஞ்சவாசகக் காவடி, சர்ப்பக் காவடி, சேவல் காவடி, சோதனைக் காவடி, முத்திரைக் காவடி என 36 வகை காவடிகள் உள்ளன. மயில் கால் காவடி, கிளிக் கால் காவடி, சேவல் கால் காவடி என காவடி அமைப்பில் நிறைய வகைகள் உள்ளன.
காவடி எடுப்பதன் பலன்கள்:
முருகனை வேண்டி காவடி எடுத்தால் நினைத்த காரியம் நிறைவேறும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமணத் தடைகள் நீங்கும். பொருளாதார நிலை மேம்படும். நல்ல ஆரோக்கியம் மற்றும் செல்வா வளம் கிட்டும். திருமணம் கை கூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். லௌகீக இன்பம் மற்றும் ஆன்மீக மேம்பாடு கிட்டும். நலமும் வளமும் பெருகும்.

Leave a Reply