பைரவர் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார். வாரத்தின் ஒவ்வொரு நாளும் பைரவருக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்து நன்மைகளைப் பெறலாம். பொதுவாக அஷ்டமி திதி என்பது பைரவர் வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது கூடுதல் விசேஷமான நாள். தேய்பிறை அஷ்டமி அன்று வழிபட்டால் அவருடைய அருளை முழுமையாகப் பெறறலாம் என்பது ஐதீகம்.
அனைவரும் அனைத்து நாட்களிலும் பைரவர் வழிபாடு செய்யலாம். என்றாலும் குறிப்பிட்ட ராசியினர் அல்லது நடச்சத்திரக்காரர்கள் குறிப்பிட்ட நாட்களில் பைரவர் வழிபாடு செய்வதன் மூலம் கூடுதல் நன்மைகளைப் பெறலாம். அவற்றைப் பற்றிக் காண்போம்.
ஞாயிற்றுக்கிழமை:
பானுவாரம் எனப்படும் ஞாயிறு அன்று சிவனின் அம்சமான பைரவருக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் திருமணத் தடைகள் நீங்கும். நிதிநிலை மேம்படும். ராகு நேர வழிபாடு மிகச் சிறப்பு வாய்ந்தது. வடை மாலை சாற்றி வழிபடலாம். வெண்பொங்கல் நைவேத்தியம் செய்யலாம். அதன் மூலம் செல்வ வளம் பெருகும்.
அனைவரும் அன்று பைரவரை வழிபட்டு அவரது அருளைப் பெறலாம் என்றாலும் சிம்மம் ராசிக்காரர்கள் - மகம், பூரம், உத்திரம் நட்சத்திரக்காரர்கள் ஞாயிறன்று பைரவரை வழிபடுவது உத்தமம்.
திங்கட்கிழமை:
சோமவாரம் என்னும் திங்கட்கிழமை சிவனுக்கு உரிய நாள். பைரவர் சிவ பெருமானின் அம்சம் என்பதால் திங்கட்கிழமை அன்று சிவபெருமானுக்கு பிரியமான வில்வத்தால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால், அவரின் அருளுடன் சிவனருளும் நமக்கு கிடைக்கும். திங்கட்கிழமை பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக்காப்பு போட்டு, புனுகு பூசி நந்தியாவட்டை மலரை சாற்றி வழிபட்டால் கண் சம்மந்தமான நோய்கள் அகலும்.
அனைவரும் அன்று பைரவரை வழிபட்டு அவரது அருளைப் பெறலாம் என்றாலும் கடக ராசிக்காரர்கள் - புனர்பூசம், பூசம், மற்றும் ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் திங்கள் அன்று பைரவரை வழிபடுவது உத்தமம்.
செவ்வாய்க்கிழமை:
மங்களவாரம் எனப்படும் செவ்வாய்க்கிழமை மாலையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் இழந்த பொருள் எதுவாக இருந்தாலும் அது திரும்ப கிடைக்கும். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி திதி இணைந்து வந்தால் சிறப்பு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை பைரவர் வழிபாட்டிற்கு இன்னும் விசேஷமானது.
அனைவரும் அன்று பைரவரை வழிபட்டு அவரது அருளைப் பெறலாம் என்றாலும் மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்கள் – அசுவினி, பரணி, கார்த்திகை,அனுஷம், கேட்டை நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் அன்று பைரவரை வழிபடுவது உத்தமம்.
புதன்கிழமை:
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன்கிழமை அன்று பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடும் பட்சத்தில் வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கும்
அனைவரும் அன்று பைரவரை வழிபட்டு அவரது அருளைப் பெறலாம் என்றாலும் மிதுனம், கன்னி மற்றும் – திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சித்திரை நட்சத்திரக்காரர்கள் புதன் அன்று பைரவரை வழிபடுவது உத்தமம்.
வியாழக்கிழமை:
குருவாரம் எனப்படும் வியாழக்கிழமைகளில் பைரவருக்கு விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூனியம், காத்து, கருப்பு போன்றவைகள் நம்மை அணுகாது விட்டு விலகி நலம் கிடைக்கும்
அனைவரும் அன்று பைரவரை வழிபட்டு அவரது அருளைப் பெறலாம் என்றாலும் தனுசு, மீனம் ராசிக்காரர்கள் - மூலம், பூராடம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்கள் வியாழன் அன்று பைரவரை வழிபடுவது உத்தமம்.
வெள்ளிக்கிழமை:
சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை மாலை வேளையில் பைரவ மூர்த்திக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வந்தால் செல்வ வளம் பெருகும்
அனைவரும் அன்று பைரவரை வழிபட்டு அவரது அருளைப் பெறலாம் என்றாலும் ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் - ரோகினி, மிருகசீரிடம், சுவாதி விசாகம் நட்சத்திரக்காரர்கள் வெள்ளி அன்று பைரவரை வழிபடுவது உத்தமம்.
சனிக்கிழமை:
சனிபகவானுக்கு குரு, பைரவர். ஆகவே சனிக்கிழமையன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் சனி தோஷம் விலகி நன்மை கிடைக்கும். அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகும்.
அனைவரும் அன்று பைரவரை வழிபட்டு அவரது அருளைப் பெறலாம் என்றாலும் மகரம், கும்பம் ராசிக்காரர்கள் - உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சனி அன்று பைரவரை வழிபடுவது உத்தமம்.

Leave a Reply