Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

ராகு, கேது, நாக தோஷங்கள் நீக்கும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்

November 24, 2020 | Total Views : 707
Zoom In Zoom Out Print

ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது தமிழ் மூதாட்டி ஔவையாரின் வாக்கு. நமது நாட்டின் ஆன்மீக பலத்திற்கும், மக்களின் மனநலத்திற்கும் அடிப்படையாக விளங்குவதே ஆலயங்களே. அவ்வாறு கோயில்கள் நிரம்பியது நம் நாடு. நாயன்மார்களில் முக்கியமான அப்பர், சுந்தரர், சம்பந்தர் என்ற மூவர்கள் பாடி துதித்த சிவஸ்தலங்கள் 274. அத்தலங்களுள் மூவராலும் பாடப்பெற்ற சிறப்பு தலங்கள் 44. ஸ்ரீ காளஹஸ்தி  மூவரால் பாடப்பெற்ற சிறந்த தலம். பஞ்ச பூதங்களில் இது வாயு ஸ்தலமாக விளங்குகிறது. அம்மனின் 51 சக்திப் பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். இத்தல இறைவன் காளத்தியப்பர், காளஹஸ்தீஸ்வரர் எனவும், இறைவி ஞானபிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை எனும் பெயர்களில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் ராகு, கேது, நாக தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. இந்த தோஷங்களுக்காக இங்கு பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. கிரகதோஷ நிவர்த்தி தலம் என்பதால் நவகிரகங்கள் சன்னதி இல்லை. ஆனால் சனீஸ்வரரருக்கு மட்டும் சன்னதி உள்ளது. சிலந்தி, யானை, பாம்பு இத்தல இறைவனை வழிபட்டு சிறப்புப் பெற்ற தலம் இது.

கோவில் அமைவிடம்

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில். 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஒரே வாயு ஸ்தலம் இது. இங்கு மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். இங்கு அமைந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது. இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இரு தந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும், கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன. சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது.  இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. இக்கோவிலின் பிரதான கோபுரம் ‘தக்ஷிண கோபுரம்’ எனப்படுகிறது. இங்குள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி, தீர்த்த நீரை அருந்தினால் இயற்கையில் பேச வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும் என்பது ஐதீகம்.

தல வரலாறு

ஒரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவன் என்ற போட்டி வந்தது. நான் கயிலாய மலையை எனது உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக் கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச்சிகரங்களை பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக் கொள்வேன்” என்று ஆதிசேஷன், வாயு தேவனை நோக்கி கூறலானார்.போட்டி தொடங்கியது, ஆதிசேஷன் தனது ஆயிரம் தலைகள், உடம்பு மற்றும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி மலையே தெரியாதபடி மறைத்துவிட்டான். வாயுதேவன் தன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப் பார்த்தான். மலையை அசைக்கக் கூட முடியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின் ஆதிசேஷன் லேசாக அசையவே, அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக் காட்டினான். கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்று தான் காளத்திமலை என்கிறது புராணங்கள்.

நடைபெறும் திருவிழாக்கள்

மாசித்திருநாள், திருக்கார்த்திகை, வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் விழா, பொங்கல், மகா சிவராத்திரி, 10 நாட்கள் உற்சவம், திருத்தேர் பவனி, சிவராத்திரி இரவு நந்தி சேவை தரிசிப்பது சிறப்பு. சிவராத்திரியில் மலையை வலம் வரும் விழா ஆகிய திருவிழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன. 

கண்ணப்பர் வரலாறு

ஒரு நாள் திண்ணன் என்ற வேட்டைக்காரன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். அப்போது காட்டுக்குள் கட்டப்பட்டிருந்த சிறிய கோயிலில் இருந்த சிவலிங்கத்தைக் கண்டான். திண்ணன் முரட்டுத்தனமான சிவபக்தன். சிவலிங்கத்திற்குஎவ்வாறு பூஜைகள் செய்ய வேண்டும் என்ற நடைமுறைகளை அறியாதவன் என்பதால் தான் வேட்டையாடி கொண்டு வந்திருந்த மாமிசத்தை சிவலிங்கத்திற்கு படைத்து வணங்கினான். அதன் பின் மகிழ்ச்சியோடு அங்கிருந்து சென்றுவிட்டான். இந்த சிவலிங்கத்திற்கு வெகு தொலைவில் இருந்து ஒரு பிராமணர் வந்து பூஜைகள் செய்வது வழக்கம். அதே போல் வந்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. சிவலிங்கத்தின் முன்பாக எப்படி மாமிசம் வந்தது? ஏதாவது விலங்கு தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும் என எண்ணினார். உடனே சுத்தம் செய்து பூஜைகள் செய்துவிட்டு சென்றுவிட்டார்.

திண்ணனும் தினமும் காட்டுக்கு வேட்டையாட வரும் போது சிவலிங்கத்திற்கு மாமிசம் படைத்துவிட்டு வணங்கிவிட்டு சென்று விடுவான். மறுநாள் வந்து பிராமணர் பார்த்து அதை சுத்தம் செய்து விட்டு பூஜைகளை முடித்துவிட்டுச் செல்வார். இது தினசரி கதையாகிவிட்டது. ஒரு நாள் திண்ணன் சிவலிங்கத்தை சுத்தம் செய்ய எண்ணி கையில் தண்ணீர் இறைக்க பாத்திரம் ஏதும் இல்லாததால், அருகிலிருந்து நதிக்குச் சென்று தனது வாயில் தண்ணீரை நிறைத்துக் கொண்டு தனது வாயாலேயே லிங்கத்தின் மீது நீரை ஊற்றினான்.

பிராமணர் வந்து பார்த்து திடுக்கிட்டார். சிவலிங்கத்தின் மீது இருந்த எச்சிலையும், மாமிசத்தையும் கண்டு அருவருப்படைந்தார். இதை ஏதோ ஒரு மனிதன் தான் செய்திருக்க வேண்டும் என நினைத்து கோபமுற்றார். உடனே கோயிலை சுத்தம் செய்து மந்திரங்கள் எல்லாம் கூறி பூஜை செய்தார்.  பிராமணர் சிவனிடம் கண்ணீரோடு “மகாதேவனே இப்படி ஒரு அசிங்கம் நடைபெறுவதை நீ எப்படி அனுமதிக்கலாம்?” எனக் கேட்டார். அப்போது சிவலிங்கத்திலிருந்து அசரிரீ வந்தது. “எதை நீ அசிங்கம் என்று கூறினாயோ, அதை இன்னொரு பக்தன் எனக்கு அர்ப்பணித்தது. அவன் பக்திக்கு கட்டுப்பட்டு ஏற்றுக் கொள்கிறேன்” என்றார். நீயும் அவனது பக்தியின் ஆழத்தைப் பார்க்க விரும்பினால் ஒரு இடத்தில் ஒளிந்து கொள். இப்போது அவன் வருவான் எனக் கூறினார்.

பிராமணர் ஒரு மரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டார். திண்ணனும் வழக்கம் போல் மாமிசம், தண்ணீருடன் வந்தான். சிவலிங்கத்திற்கு படைத்தான். ஆனால் அதை ஏற்கவில்லை சிவன். திண்ணனுக்கு குழப்பம் ஏற்பட்டது. சிவலிங்கத்தை உற்றுப் பார்த்தான், அப்போது சிவலிங்கத்தின் வலது கண்ணில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்டான். அதை குணமாக்க பச்சிலைகளை வைத்து பார்த்தான். ஆனால் குணமாகவில்லை. உடனே ஒரு கத்தியை எடுத்து தனது ஒரு கண்ணை பெயர்த்தெடுத்து சிவலிங்கத்தில் பதித்தான். உடனே இரத்தம் வழிவது நின்றது. திண்ணம் நிம்மதியடைந்தான். ஆனால் இப்போது லிங்கத்தின் இடது கணணில் இரத்தம் வழிந்தது. இதைக் கண்ட திண்ணன் கத்தியை எடுத்து தனது இன்னொரு கண்ணையும் பெயர்த்தெடுக்க எண்ணினான். ஆனால் இரு கண்களும் தெரியாமல் எப்படி லிங்கத்தில் பொருத்துவது என்று எண்ணி, அடையாளம் காண லிங்கத்தின் கண் மீது காலை வைத்து மற்றொரு கண்ணையும் பெயர்த்தெடுத்தான்.

திண்ணனுடைய பரிபூரண பக்தியைக் கண்டு சிவபெருமான் அவன் முன் தோன்றினார். அப்போது அவனுக்கு பார்வை திரும்பி சிவபெருமான் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். சிவனுக்காக தன் கண்ணையே அர்ப்பணித்த சிவபக்தர் ஆனதால், அன்று முதல் கண்ணப்ப நாயனார் என்ற பெயரைப் பெற்றார்.

கோவில் பிரசாதம்

கண்ணப்பர் வாய்கலசமாக முகலிநீர் கொண்டு வந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு திருநீறு (விபூதி) வழங்கும் வழக்கம் இல்லை. பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக் கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் திருநீறு பொட்டலத்தை இறைவன் காலடியில் வைத்து தீபாராதனை காண்பித்து எடுத்து தருகிறார்கள். மூலவருக்கு பச்சைக் கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது.

தலத்தின் சிறப்பு

இங்கு வீற்றிருக்கும் காளத்திநாதர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இது வாயு (காற்று) ஸ்தலம் என்பதால் இங்குள்ள மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக் கொண்டே இருப்பது சிறப்பு. இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவகிரகங்கள் இடம் பெற்றுள்ளன.  அம்மனின் இடுப்பில் அணியப்படும் ஒட்டியாணத்தில் கேது உருவம் காணப்படுகிறது. கருவறையை அடுத்த மண்டபத்தில் கண்ணப்பர் சிலை உள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் உள்ளன.

பாதாள கணபதி

காளஹஸ்தி கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு முறை அகத்திய முனிவர், சிவனையும், விநாயகரையும் வழிபட மறந்து விட்டார். இதனால் விநாயகப்பெருமான் கோபம் கொண்டார். அவரது கோபத்தின் காரணமாக, காளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. இதையடுத்து தனது தவறை உணர்ந்த அகத்தியர், விநாயகப்பெருமானை பிரதிஷ்டை செய்து பூஜித்து வழிபட்டார். அந்த வழிபாட்டால் மகிழ்ந்த விநாயகர், அகத்தியருக்கு அருளாசி வழங்கினார். இந்த ஆலயமே பாதாள விநாயகர் ஆவார்.
காலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதைச் சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்குள் போய் விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், ‘பாதாள கணபதி’ என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.

ராகு, கேது பரிகார ஸ்தலம்

காளஹஸ்தி கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகால பிரச்சினையில் சிக்கி தவிப்பவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது, சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால் பிரச்சினையில் இருந்து விடுபடலாம் என்பது நிச்சயம். 

இக்கோயிலில் தினமும் காலை 7.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இதற்காக கோவில் தேவஸ்தான அலுவலகத்தில் அனுமதிச் சீட்டு விற்பனை செய்கிறார்கள். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படும். இதில் ஒரு அனுமதிச் சீட்டு வாங்கினாலே போதுமானது. பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தையும் கோவில் நிர்வாகமே வழங்கிவிடும். ஒரு அனுமதிச் சீட்டுக்கு 2 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வேளை பூஜையின் போது 200 பேர் வரை கலந்து கொள்ளலாம். 45 நிமிடம் இந்த பூஜை நடைபெறும்.

பரிகார பூஜை செய்யும் பக்தர்கள் பூஜை முடிந்து சுவாமியை தரிசனம் செய்துவிட்டு நேராக தங்களது வீட்டிற்குத் தான் செல்ல வேண்டும். வழியில் நண்பர்கள் வீட்டிற்கோ, வேறு எங்கோ செல்லக் கூடாது.

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை 5 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 9 மணி வரையிலும், செவ்வாய் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

ஓம் நமசிவாய போற்றி! போற்றி!!

Synonyms for "கேது"

banner

Leave a Reply

Submit Comment