AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

Hayagreeva Stotram in Tamil - ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்

November 24, 2020 | Total Views : 1,242
Zoom In Zoom Out Print

காலம் பொன் போன்றது கல்வி கண் போன்றது என்று சொல்வார்கள். இந்த உலகத்தில் அழியாத ஒரு செல்வம் இருக்கிறது என்றால் அது நிச்சயமாக கல்வி செல்வம் தான். கடைசி வரை நம்மோடு வருவது இந்த செல்வம் ஒன்று தான். யாராலும் ஒருவரிடமிருந்து ஒருவர் தட்டிப் பறிக்கவோ, திருடவோ முடியாத மகத்தான செல்வம் கல்வி. அத்தகைய பெருமை வாய்ந்த கல்விக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்குவது அன்னை சரஸ்வதியைத் தான். ஆனால் அந்த சரஸ்வதிக்கே ஒரு குரு உண்டென்றால் அது ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவரே. அந்த சரஸ்வதிக்கே கல்வியறிவைக் கொடுத்தவர் ஹயக்ரீவர். ஒருவரது வாழ்க்கையில் கல்வியிலும், கலைகளிலும் சிறந்த விளங்க வேண்டும் என்றால் ஹயக்ரீவரை வழிபட்டால் போதும்.

ஹயக்ரீவர் அவதாரம்

நான்கு வேதங்களின் துணை கொண்டு பிரம்மன் தனது படைப்புத் தொழிலை செய்து வந்தார். மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் பேராசையின் காரணமாக பிரம்மாவிடம் இருந்த வேதங்களை குதிரை வடிவில் வந்து திருடிச் சென்றனர். இதன் காரணமாக உலகம் படைத்தலின் அர்த்தமே இல்லாமல் இருள் சூழ்ந்தது. பிரம்மா மகா விஷ்ணுவிடம் சென்று முறையிட்டார். இதனையடுத்து மகாவிஷ்ணு குதிரை முகம், மனித உடல் கொண்டு வேதங்களை மீட்கச் சென்றார். அசுரர்களிடம் போரிட்டு வேதங்களை மீட்டார். அசுரர்கள் கைபட்டதால் வேதங்களின் பெருமை குன்றியதாக அவை நினைத்தன. எனவே தங்களை புனிதமாக்கும்படி திருமாலிடம் வேண்டின. குதிரை முகத்துடன் இருந்த திருமால் வேதங்களை உச்சி முகர்ந்தார். இதனால் அவரது மூச்சுக்காற்று வேதங்களின் மீது பட்டதால் புனிதமடைந்தன.

அசுரர்களிடம் போரிட்டதன் காரணமாக ஹயக்ரீவர் உக்கிரமாக இருந்தால் அவரை குளிர்விக்க லட்சுமி தேவியை அவரது மடியில் அமர்த்தினார். இதனால் இவர் லட்சுமி ஹயக்ரீவர் என அழைக்கப்படுகிறார். வேதங்களை மீட்டதால் கல்விக்கு அதிபதியாகிறார். கல்வி உள்ள இடத்தில் செல்வம் சேரும் என்பதால் லட்சுமியை இடது பக்கம் அமர்த்தியிருக்கிறார்.

ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் திருமாலின் 18வது அவதாரம். வெண்மை நிறமுள்ள குதிரை முகத்துடன் காட்சி தரும் பெருமாள் ஞானமே வடிவானவர். பின் வலக்கரத்தில் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தையும், இடக்கரத்தில் சங்கத்தையும், முன்வலக்கரத்தில் ஏட்டையும் ஏந்தி மக்களுக்கு ஞானத்தைப் போதிக்கும் ஞான சொரூபியாக ஹயக்ரீவர் திகழ்கிறார்.

ஹயக்ரீவ ஸ்தோத்திரம்

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினம் 
நரம் முஞ்சந்தி பாபானி தரித்ரமிவ யோஷீத 
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரிவேதி யோவதேத் 
தஸ்ய நிஸ்ஸரதேவாணீ ஜன்ஹீகன்யா ப்ரவாஹவத் 
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வனி 
விசோபதே ஸ வைகுண்ட கவாடோத்காடனக்ஷம 
ச்லோகத்ரயமிதம் புண்யம் ஹயக்ரீவ பதாங்கிதம் 
வாதிராஜயதி ப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம்.

திருமாலின் அவதாரமான ஹயக்ரீவரைப் போற்றும் இந்த ஸ்தோத்திரத்தை, திருமாலின் வழிபாட்டிற்குரிய புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று ஸ்ரீ ஹயக்ரீவர் சந்நிதியில் நெய் தீபமேற்றி, ஏலக்காய் மாலையை ஹயக்ரீவருக்கு அணிவித்து, இந்த ஸ்தோத்திரத்தை 12 முறை துதித்தால கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கலாம். எந்த விஷயத்திலும் அலசி ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் திறன் பெற்று ஞான நிலை உண்டாகும். அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

கல்வியில் சிறந்து விளங்க

குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷங்கள் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ, கல்வியறிவு பெருக வேண்டி விரும்பினால் மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி அருள்பாலிக்கும் ஹயக்ரீவருக்கு நடைபெறும் சிறப்பு திருமஞ்சன அலங்கார பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் நோட்டு, பேனா, தேன் மற்றும் ஏலக்காய் மாலையுடன் வந்து ஹயக்ரீவருக்கு சாத்தி பூஜை மற்றும் அபிஷேகம் செய்யலாம். இதில் அபிஷேகம் செய்த தேனை தோஷம் உள்ள குழந்தைக்கு கொடுத்து தொடர்ந்து ஹயக்ரீவரை பூஜித்து வந்தால் உடனடியாக தோஷம் நீங்கும். மேலும் பூஜையில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்ட தேனை குழந்தைகளின் நாவில் தடவிவிட்டு ஹயக்ரீவரர் மந்திரத்தை தொடர்ந்து மனதில் செபிக்க செய்தால் குழந்தைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து வருவர்.

ஹயக்ரீவ மண்டி

ஹயக்ரீவருக்கு மிகவும் உகந்த பிரசாதமாகிய நன்றாக வேகவைத்த கடலைப் பருப்பு, துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து, நெய் விட்டுக்கிளறிய "ஹயக்ரீவ மண்டி' என்ற பிரசாதத்தை ஒவ்வொரு திருவோணம் நட்சத்திரத்தன்றும் செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்கள் படிப்பில் மேன்மை அடைவர். அதுவும் ஆவணி திருவோணம் அன்றாவது கட்டாயம் செய்யவேண்டும்.

ஆகவே ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவரை போற்றி வணங்கி கல்வியிலும், அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்குங்கள். அதோடு லட்சுமி தேவியின் அருள் கடாட்சத்தின் மூலம் செல்வத்தையும் பெற்றிடுங்கள்.

banner

Leave a Reply

Submit Comment