AstroVed Menu
AstroVed
search
search

காளஹஸ்தி பரிகாரம் செய்வது எப்படி? | Kalahasti Pariharam In Tamil

dateNovember 25, 2020

இந்து மதத்தில் ஒருவரது முற்பிறவியில் செய்த கர்ம வினைகளின் அடிப்படையிலேயே அடுத்த பிறவி தொடர்கிறது என்று சொல்லப்படுகிறது. அதன்படியே ஒருவரது பிறந்த ஜாதகத்தில் கிரக அமைப்புகள் ஏற்படுகிறது. அந்த கிரகங்கள் வலிமை பெறும் போது நல்ல பலன்களையும், வலிமையை இழக்கும் போது தீய பலன்களையும் தருவது இயல்பாகிறது. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏற்படும் சோதனைகளையும், சிக்கல்களையும் கடப்பதற்கு ஜோதிடம் ஒரு சிறந்த வழிகாட்டியாக செயல்படுகிறது. ஜாதக ரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்கு  உரிய தீர்வைப் பெறுவதற்கு ஜோதிடம் உதவுகிறது.

ஒருவரது வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. ஏனெனில்  திருமண பந்தத்தில் அமைகின்ற துணையைப் பொறுத்தே வாழ்க்கையின் பிற்பகுதி நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே நம்மவர்கள் திருமணம் என்றவுடன் முதலில் கையில் எடுப்பது ஜாதகத்தைத் தான். அதில் பல பொருத்தங்கள் பார்க்கப்பட்டாலும், மிக முக்கியமாக நிழல் கிரகங்களான ராகு, கேது தோஷம், நாக சர்ப்ப தோஷம் ஏதும் உள்ளதா என பார்க்கப்படுகிறது.

சிலருக்கு திருமணம் தடைபட்டுக் கொண்டே போகும் அல்லது புத்திர பாக்கியம் இல்லாத நிலை ஏற்படும். தொடர்ந்து பிரச்னைகளையே சந்தித்து வருகிறவர்களும் உண்டு. தொழில் விருத்தி இருக்காது. எவ்வளவு தான் கடுமையாக உழைத்தாலும் முன்னேற்றம் என்பதைக் காண பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதற்கெல்லாம் காரணம் இந்த ராகு, கேது தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷம் தான். சரி இந்த தோஷங்களிலிருந்து எவ்வாறு நிவர்த்தி பெறுவது என்றால், அதற்கான பரிகாரங்களை ஜோதிடத்தில் நமது முன்னோர்கள் எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள் 

காளஹஸ்தி திருக்கோயில்:

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகாளஹஸ்தி என்னும் ஊர். இந்த ஊரில் தான் திருக்காளஹஸ்தீஸ்வர சுவாமியாக கோயில் கொண்டுள்ளார் எம்பெருமான் சிவன். அன்னை பார்வதி இங்கே ஞானபிரசுனாம்பிகையாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பஞ்சபூத ஸ்தலங்களில் இது வாயுத் தலமாகும். இங்கே உள்ள சிவலிங்கம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதோடு ராகு, கேது தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷத்திற்கு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது இத்திருக்கோயில். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் இத்திருக்கோயிலுக்கு வருகை தந்து இந்த பரிகார பூஜையை செய்து தோஷங்களிலிருந்து விடுபடுகிறார்கள்.

பரிகார பூஜையை செய்வது எப்படி?

காளஹஸ்தி திருக்கோயில் ராகு, கேது கிரகங்களின் சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கிறது. இந்த ஆலயத்தில் தினமும் காலை  7.30 மணி முதல் இரவு 9 மணி வரை பரிகார பூஜை செய்யப்படுகிறது.  இதற்காக கோவில் தேவஸ்தான அலுவலகத்தில் அனுமதிச் சீட்டு விற்பனை செய்கிறார்கள். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படுகிறது.  இதில் பரிகார பூஜை செய்பவர் ஒரு அனுமதிச் சீட்டு வாங்கினாலே போதுமானது.  ஒரு அனுமதி சீட்டுக்கு இரண்டு பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தையும் தேவஸ்தான அலுவலகத்தில் அனுமதிச் சீட்டு பெறும் போதே வழங்கி விடுகிறார்கள். சுமார் 45 நிமிடம் இந்த பூஜை நடைபெறும். அர்ச்சகர்களின் வழிகாட்டுதல் படி இந்த பரிகார பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. ஒரு வேளை பூஜையின் போது 200 பேர் வரை கலந்து கொள்ளலாம். 

பரிகார பூஜை செய்பவர்கள் பூஜைக்கு முதல் நாள் மாலையோ அல்லது இரவோ காளஹஸ்தி கோயிலுக்குச் செல்வது நல்லது. அப்போது தான் காலையில் சீக்கிரமாக எழுந்து குளித்து முடித்து     பூஜைக்கு தயாராவதற்கு வசதியாக இருக்கும். அங்கே தங்குவதற்கு ஏராளமான விடுதிகளும், அறை வசதிகளும் இருக்கின்றன. 

பரிகார பூஜை செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:

பரிகார பூஜை செய்பவர்கள் காலையில் எழுந்து தலைக்கு குளிக்க வேண்டும். அன்றைய தினம் அசைவ உணவு, மது போன்றவைகளை தவிர்க்க வேண்டும். மனதளவில் தூய்மையாக இருத்தல் அவசியம். முடிந்தால் காளஹஸ்தி கோவில் சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகத்திற்கு பால் வழங்கலாம். உங்களது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் இந்த பூஜையை செய்வது மேலும் சிறப்பான பலன்களைத் தரும். ராகு காலத்தில் இந்த பரிகார பூஜையை செய்வதும் சிறப்பு. ராகு, கேது பரிகார பூஜை செய்பவர்கள், ராகு, கேது பகவான்களை தரையில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக் கூடாது. கோவிலுக்கு வெளியே இருக்கும் யாசகர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். 

இந்த பரிகார பூஜையை செய்த பின்பு வேறு எங்கும் செல்லாமல் நேராக உங்கள் இல்லத்திற்குத் தான் செல்ல வேண்டும். பிற கோவில்களுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ செல்லக் கூடாது. வீட்டிற்கு வந்தவுடன் சிறிது நேரம் கழித்து தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் வாயிலாக தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளத்தையும், முன்னேற்றத்தையும் காணலாம்.


banner

Leave a Reply