How to Calculate Sevvai Dosham in Tamil | செவ்வாய் தோஷம் எப்படி கண்டுபிடிப்பது
நவகிரகங்களுள் செவ்வாய் கிரகமும் ஒன்றாகும். செவ்வாயை பூமிகாரகன் என்று கூறுவார்கள். இவருக்கு அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன், என்று இன்னும் பல பெயர்கள் உள்ளன.
பரத்வாஜ முனிவருக்கும் தேவ கன்னிகைக்கும் பிறந்த செவ்வாய் பகவான் பூமித்தாயால் வளர்க்கப்பட்டவர். இதனால் தான் இவர் பூமிகாரகன் என்று அழைக்கப்படுகிறார். செவ்வாய் பகவான் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைக்கொண்டே பலன்களை அளிக்கிறார்.
செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதைப் பற்றிக் காண்போம்.

செவ்வாய் தோஷம்:
நமது முன்னோர்கள் இதன் பின்னணியில் இருக்கும் அறிவியலைப் புரிந்து கொண்டு நேரடியாகக் கூறாமல் மறைமுகமாக இதனை தோஷம் என்று கூறி வந்தார்கள். இது அறிவியல் சார்ந்த விஷயம். செவ்வாய் நமது உடலில் எந்த தாதுவுடன் சம்பந்தம் கொண்டது என்று பார்த்தோமானால் இது எலும்பு மஜ்ஜையுடன் தொடர்புடையது. அங்கிருந்து தான் நமது உடலில் இரத்தம் உருவாகிறது. ரத்தம்தான் இனவிருத்திக்கான அடிப்படையாக அமைகிறது.ஒருவரது உடலில் ஏற்படும் அதிர்வலையும் செவ்வாய் கிரகத்தின் அதிர்வலையும் பலமாகப் பொருந்திவந்தால் அவர் செவ்வாய் தோஷம் கொண்டவராகக் கருதப்படுகிறார். அவருக்கு அதே செவ்வாய் தோஷமுள்ள இணையை திருமணம் செய்துவைத்தால் திருமணம் இனிமையாகி தாம்பத்யம் சிறக்கும் என்பதே ஜோதிடம் சொல்லும் உண்மை.
ஜோதிடத்தில் செவ்வாய் தோஷம்:
லக்னம், சுக்கிரன், சந்திரன் ஆகியவைகளுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உள்ளதாகக் கருத வேண்டும்.என்றாலும் லக்னத்தை வைத்தே கூறப்படுகிறது. ஆண்களுக்கு 2,7,8 ல் பெண்களுக்கு 4,8,12 ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு என்பது சிறப்பு விதி.
- கடக லக்னம், சிம்ம லக்னம் என்ற இந்த இரண்டு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கு இருந்தாலும் தோஷம் இல்லை.
- மிதுனம்- கடகம் இரண்டாம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும், தோஷம் இல்லை
- மேஷம்- விருச்சிகம் – நான்காம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை
- மகரம்-கடகம் ஏழாம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை
- தனுசு – மீனம் எட்டாம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை
- ரிஷபம் – துலாம் – பன்னிரண்டாம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை
- செவ்வாய், சிம்மம், மேஷம், விருச்சிகம் மகரம், கும்பம் இவைகளில் இருந்தால் செவ்வாயினால் ஏற்படும் எந்த தோஷமும் இல்லை
- குருவுடன் சேர்ந்தால் தோஷம் இல்லை
- சந்திரனுடன் சேர்ந்தால் தோஷம் இல்லை
- புதனுடன் இருந்தாலும் புதன் பார்த்தாலும் தோஷம் இல்லை
- சூரியனுடன் இருநதாலும் சூரியன் பார்த்தாலும் தோஷம் இல்லை
- செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி லக்னத்திற்கு 1,4,5,7,9,10 இவைகளில் எங்கு இருந்தாலும் தோஷம் இல்லை
- 8,12 ல் உள்ள செவ்வாய் இருக்கும் ராசி மேஷம், சிம்மம் விருச்சிகம் , மகரம் எனில் தோஷம் இல்லை
- செவ்வாய் தனது சொந்த வீடு அல்லது உச்ச வீட்டில் இருந்தால் தோஷம் இல்லை
- சனி, ராகு , கேது இவர்களுடன் கூடினாலும் இவர்களால் பார்க்கப்பட்டாலும் தோஷம் இல்லை
எனவே அரைகுறையாக தெரிந்துகொண்டு, இந்த இடத்தில் செவ்வாய் இருந்தால் ஆபத்து என்பதெல்லாம் தவறானது. மேலே கூறிய விதி விளக்குகளையும் கருத்தில் கொண்டு தனிப்பட்ட ஜாதகத்தை ஆய்வு செய்து பலன்களைச் சொல்வதே நல்லது. இந்த விதி விலக்குகளைத் தாண்டி செவ்வாய் தோஷம் இருக்குமாகில் அதே போன்று செவ்வாய் தோஷமுள்ள ஜாதகத்தை இணைக்க வேண்டும்.அப்போது தான் தாம்பத்திய வாழ்க்கை சிறக்கும்.
செவ்வாய் தோஷ நிவர்த்தி :
செவ்வாய் தோஷத்திற்கு பல வழிகளில் தோஷநிவர்த்தி செய்துகொள்ளலாம். செவ்வாய்க்கான தலமாக வைத்தீஸ்வரன் கோயில் கருதப்படுகிறது. எனவே அந்த கோவிலுக்கு செவ்வாய்க் கிழமை சென்று செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றி விசேஷ பூஜைகள் செய்து வணங்கலாம். செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் என்பதால் அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம். குறிப்பாக திருச்செந்தூர் செல்வது நன்மையளிக்கும். செவ்வாய்க்கிழமைகளில் நவக்கிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி, செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து வணங்குவது நல்ல பலனைத் தரும்.
செவ்வாய்க்குரிய மந்திரம்:
"ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்."











