ஐந்து முக ருத்ராட்சம்... யாரெல்லாம் அணியலாம்? | 5 Faced Rudraksha Benefits Tamil

ருத்ராட்சம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொரு ருத்ராட்சமும் வெவ்வேறு முகம் கொண்டதாக இருக்கலாம். ஒரு ருத்ராட்சம் எந்த வகை அல்லது எத்தனை முகம் கொண்டது என்று எவ்வாறு நாம் அறிவது? ருத்ராட்சத்தின் மேலே உள்ள கோடுகளைக் கொண்டு அந்த ருத்ராட்சம் எத்தனை முகம் கொண்டது என அறியலாம்.
ஐந்து முக ருத்ராட்சம்
ருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இந்தக் கோடுகளுக்குத்தான் முகங்கள் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம்.ருத்ராட்சத்தின் மேல் ஐந்து கோடுகள் இருந்தால் அது ஐந்து முக ருத்ராட்சம் என்று பெயர்.
ஐந்தொழில் புரியும் சிவ பெருமானின் கண்களின் நீர்த் துளியில் இருந்து பிறந்தது ருத்ராட்சம் என்பதால் ஐந்து முக ருத்ராட்சம் சிவபெருமானின் அம்சமாகவே கருதப்படுகிறது. ஐந்து என்ற எண் நமது வாழ்வுடன் அதிக சம்பந்தம் உடையது. நமது கை விரல்கள் ஐந்து. நமது புலன்கள் ஐந்து. நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களால் ஆன இந்த உலகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். எனவே இந்த உலகத்தோடு ஒட்டி வாழ ஐந்து முக ருத்ராட்சம் நமக்கு துணை புரிகிறது.
ஐந்து முக ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம்?
ஐந்து முக ருத்ராட்சத்தை அனைவரும் அணியலாம். ஆண், பெண், குழந்தைகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த ஐந்து முக ருத்ராட்சத்தை அணியலாம். இது எளிதாகவும் கிடைக்கும். இதன் விலையும் குறைவு.
ஐந்து முக ருத்ராட்சம் அணிவதால் பலன்:
இதற்கு பெயர் காலக்னி. உணவால் ஏற்படும் தோஷத்தை போக்கும். அத்துடன் ஐந்தாம் எண் புதனின் எண்ணாக இருப்பதால், தடைபடும் கல்வி தொடரும். நல்ல ஞானத்தை பெறுவார்கள். கலைதுறையில் முன்னேற வழி பிறக்கும். பலரின் உதவிகள் கிடைக்கும். செயல்கள் வெற்றி அடையும். ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
