x
x
x
cart-added The item has been added to your cart.

கார்த்திகை தீபத்திருநாளில் விளக்கேற்றிக் கொண்டாடுவது ஏன் தெரியுமா?

December 10, 2019 | Total Views : 208
Zoom In Zoom Out Print

பொதுவாக நாம் அன்றாடம் ஏற்றும் விளக்கு புற இருளை நீக்க வல்லது. அதனையே பக்தி சிரத்தையோடு, இறை உணர்வோடு நாம் ஏற்றும் போது நமது அறியாமை என்னும் அக இருளும் நீங்கப் பெறுகின்றது. தீப ஓளி நம் மனதில் தீய சிந்தனைகளை வரவிடாமல் காக்கின்றது. மேலும் தீபத்தில் முப்பெரும்தேவியராகிய லட்சுமி, சரஸ்வதி பார்வதி உள்ளனர். எனவே தீபம் ஏற்றுவதன் மூலம் முப்பெரும் தேவியரின் அருளைப் பெறலாம்.

மெய் ஞானம் அளிக்கும் திருவண்ணாமலை தீபம்

கர்ணனுக்குப்பின் கொடையுமில்லை. கார்த்திகைக்குப் பின் மழையுமில்லை' என்பது முதுமொழி. கார்த்திகை என்றாலே அடைமழை என்று பொருள். இம்மாதத்தில் எப்போதும் வானில் கருமேகம் சூழ்ந்திருக்கும் காரணத்தால் இருள் மண்டி இருக்கும். இந்த புற இருளை நீக்க, வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. கார்த்திகை மாதம் புற இருளை நீக்க ஏற்றப்படும் இந்த தீபத்தின் தத்துவதில் அஞ்ஞான இருள் நீக்கும் தத்துவமும் உள்ளது. பரம்பொருளாய்த் திகழும் சிவபெருமானுக்கு உகந்த நாளில் சிவபெருமானை நினைத்து ஏற்றப்படும் விளக்கு நம்மனதில் மண்டியிருக்கும் அறியாமையை நீக்கி மெய் ஞானத்தை அளிக்கின்றது.

திருவண்ணாமலை தீபம்

கார்த்திகை மாதம் இல்லங்களில் மட்டுமன்றி கோவிலில், குறிப்பாக திருவண்ணாமலை கோவிலில் மலை உச்சியில் விளக்கு ஏற்றுவார்கள். அவ்வாறு ஏற்றும் தீபத்தின் பிரகாசமானது பல மைல் தூரங்களுக்குத் தெரியும். இறைவனின் ஆலயத்தில் ஏற்றப்படும் இந்த இறை ஆற்றல் மிக்க விளக்கு அல்லது தீபத்தின் ஒளிக்கற்றையானது பூமியில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் படும் போது பாவங்கள் கரைகின்றது. மனித மனதில் உள்ள அறியாமை என்னும் அஞ்ஞானம் மறைந்து மெய் ஞானம் கிட்டுகின்றது.

தீபம் தோன்றிய கதை

கார்த்திகை தீப விழா தோன்றியதற்கு காரணமாக விளங்கிய புராண நிகழ்ச்சியான அடிமுடி தெரியாத ஒளிப் பிழம்பாய் சிவன் தோன்றியதும் அதனை விஷ்ணுவும் பிரம்மாவும் தேடிக் காணக் கிடைக்காமல் தோற்றதும், ஒளி வடிவில் இருந்த சிவன் லிங்கமாய் காட்சி அளித்ததும் நாம் அனைவரும் அறிந்ததே. இந்த பௌர்ணமி திருக் கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம் கூறுவது உண்டு. ஒருசமயம் சிவாலயம் ஒன்றில் நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. கோயிலுக்குள் புகுந்த அந்த எலி எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது. தன்னையறியாமல் எலி செய்த அந்த காரியம் அதற்கு புண்ணியத்தை தந்தது. அந்த புண்ணியத்தின் விளைவாக எலிக்கு மானிடப் பிறவியும் அரச போகமும் அரண்மனை வாழ்வும் கிடைக்கப் பெற்றது. முன்ஜென்மத்தில் எலியாய் இருந்த பிறவிக்கு, அடுத்த ஜென்மாவில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறவி கிடைத்தது. மகாபலி எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது. உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.

தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வந்தால் காலப்போக்கில் உன் நோய் நீங்கும்! என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக நிலைத்துவிட்டது. காலப்போக்கில் அனைத்து மக்களும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது.

தீபம் கொண்டாடும் முறை

இவ்வாறாக கார்த்திகை மாதம் ஒவ்வொரு இல்லங்களிலும் கார்த்திகை தீப நாளன்று விளக்கு ஏற்றி வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. அன்றைய மாதம் முழுவதும் அனைவரும் தங்கள் இல்லங்களை தினமும் தூய்மைப்படுத்தி அந்தி சாயும் நேரத்தில் தங்கள் வீட்டு வாயிலில், கிணற்றடி, குழாயடி என எல்லா இடங்களிலும் தீபங்கள் ஏற்றி இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்துகிறார்கள். பொரி உருண்டை, அவல் உருண்டை என பண்டங்களை இறைவனுக்கு அர்பித்து குழந்தைகளுக்கு அவற்றை அளித்து மகிழ்கிறார்கள். இந்த நல்ல நோக்கத்தில் தான் பௌர்ணமி கார்த்திகை தீபம் அன்று அண்ணாமலை, பழநி, திருப்பரங்குன்றம் இன்னும் பல ஸ்தலங்களில் மலை தீபமாகவும், மற்ற தலங்களில் சொக்கப் பனையும் கொளுத்துகின்றனர்.

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos