Kapala Bhairava Homa - Fire Lab To Boost Productivity & Gain Progress In Work JOIN NOW
x
x
x
cart-added The item has been added to your cart.

கார்த்திகை தீபத்திருநாளின் மகிமை: ஜோதியாய் நின்ற அடி முடி அறிய முடியாத அண்ணாமலையார்

December 8, 2019 | Total Views : 218
Zoom In Zoom Out Print

கார்த்திகை மகா தீபம்:

விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் நேரம் கார்த்திகை மாதம் ஆகும்.  கிருத்திகை நட்சத்திரம் சூரியனின் நட்சத்திரம் ஆகும். விருச்சிக ராசி செவ்வாய் பகவானுக்கு உரியது. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்து வந்தாள்.  அந்தக் குழந்தை, சிறு பிராயம் முதலே  சிவனை குறித்து தவம் செய்து வந்தது. தவ வலிமை காரணமாக தேகம் முழுதும் வெப்பம் பரவி அக்னி மயமாய் ஆனது. தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார். பூமா தேவியின் புத்திரன் என்பதால் பூமி காரகன் என்றும், அக்னி மயமானதால் அங்காரகன் என்றும் செவ்வாய் என்றும் போற்றப்பட்டார். சூர்யன் அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம்,

அங்காரகன் அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் கார்த்திகை பௌர்ணமி தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் அன்றைய தீபம் மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், சாஸ்திரங்கள் கூறுகின்றன.


அடிமுடி தேடி பிரமனும் மாலும் தன்னை உணர்ந்த கதை

இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஒரு புராண கதை சொல்லப்படுகின்றது. விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஒரு தடவை தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டையைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார். அந்த நெருப்புப் பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது. அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் “எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்” என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்புப் பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்துச் சென்றார். பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறேன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை. இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற்சியை கைவிட்டு திரும்பி வந்தார். அவரிடம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது. ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிருப்பதை அறிந்தார். நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்டதாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது. தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. இதனால் கோபம் கொண்ட நெருப்புப் பிழம்பாக இருந்த சிவபெருமான் லிங்க வடிவில் வெளியில் வந்தார். விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியில் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலராவாய் என்றும் சாபமிட்டார். இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள்.


வாழ்வில் வளம் தரும் கார்த்திகை தீபம்:

இந்த அக்னியில் இருந்துதான் சூரியன், சந்திரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன்றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது. எனவே தான் கார்க்திகை மாதம் தீபம் என்னும் விளக்கேற்றி வழிபட்டால் நமது ஆணவம், அகந்தை எல்லாம் அகன்று விடும். அஞ்ஞான இருள் நீங்கி மெய் ஞான ஒளி கிட்டும்.

கார்த்திகை தீபம் மற்றும் வளங்களை அள்ளித் தரும் பௌர்ணமி அன்று, அடி முடி காண முடியாத ஒளிமயமாய் விளங்கும் அருணாசலேஸ்வரனாகிய சிவனை வழிபடுவதன் மூலம், எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலனை அடையவும், நல்ல அதிர்ஷ்டம், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைகக் காணவும் இயலும்.

 

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos