Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

அகத்தின் இருளை போக்கும் தீப வழிபாடு!

December 9, 2019 | Total Views : 756
Zoom In Zoom Out Print

கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து

கண்டவர் அகத்து இருள் அனைத்தும்

சாய்த்துநின்று எழுந்து விளங்குறும் சோண

சைலனே கயிலை நாயகனே.

இந்தப் பாடல் மூலம் சிவப்பிரகாசர் அவர்கள் உலகத்தில் இருக்கும் விளக்குகள் எல்லாம் புற இருளை நீக்க வல்லவை. ஆனால் காரத்திகை மாதம் கயிலை நாதனாம் சிவ பெருமானின் அருள் வேண்டி ஏற்றப்படும் தீபம் புறத்திருளோடு அகத்திருளையும் அதாவது அஞ்ஞான இருளையும் நீக்க வல்லதாய் இருக்கும் என்று சுட்டிக் காட்டுகிறார்.

விளக்கு எரிவதன் மூலம் பிரகாசம் கிடைக்கின்றது. அது இருளை நீக்குகின்றது. இது நாம் காணும் புறத்தோற்றம் ஆகும். இது நம்மைச் சுற்றி இருக்கும் புற இருளை நீக்குகின்றது. விளக்கு எண்ணெயை கிரகித்துக் கொண்டு எரிகிறது. திரியானது அளவில் குறைந்து கொண்டே வருகிறது. இது நமது அகத்தை உணர  வைக்கின்றது. தீபம் எரிந்து பிரகாசத்தை அளிப்பது போல, நாமும்  உலக வாழ்க்கையின் சுகத்தை அனுபவத்துக் கொண்டிருந்தாலும்  பிறருக்கு உதவி புரிவதும், எண்ணெயும் திரியும் குறைவது போல லௌகீக இன்பத்தின் மீதான பற்றைக் குறைத்துக் கொண்டு எரியும் சுடர் இறுதியில் பிரபஞ்சத்தில் கலப்பது போல நாமும் இறைவனின் திருவடி கண்டு பிரபஞ்சத்தில் மோட்சம் பெறுவது தான் இதன் நோக்கம் ஆகும். ஆக இருள் நீங்கி இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் காண விழைவதே இதன் தத்துவம் ஆகும்.  எனவே பௌர்ணமி கார்த்திகை தீபம் என்பது நமது ஆன்மாவுக்கும் ஆன்மீகத்திற்கும் அதாவது ஆண்டவனுக்கும் இடையில் உள்ள தொடர்பை நாம் வலுவாக்கிக் கொள்ள உகந்த தருணமாக அமைகின்றது.

எனவே தான் நமது முன்னோர்கள் பௌர்ணமி கார்த்திகை தீப வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளனர். சங்க இலக்கிய காலங்களில் கூட இது கொண்டாடப்பட்டுள்ளது என்றால் இதன் பழமை போற்றப்பட வேண்டியதாக உள்ளது. 

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட

தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப்

புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி

தூதொடு வந்த மழை'

என்னும் செய்யுள் அடிகள் மூலம் கார்த்திகை தீபவிழாவைப் பற்றிய செய்திகள் அறியமுடிகிறது. இச்செய்யுளில் "தலை நாள் விளக்கின்' என்பதிலிருந்து அதற்கு அடுத்து வரும் நாட்களிலும் இவ்விழா கொண்டாடப்படும் என அறிய முடிக்கின்றது. பௌர்ணமி அன்று சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவே கார்த்திகை தீபவிழா எனக்கொள்ளலாம். அதுவே மகா கார்த்திகை எனவும் வழங்கப்படும்.

கார்த்திகை பௌர்ணமி தினம் மட்டும் அன்றி அந்த மாதம் முழுவதும் நாம் விளக்கேற்றுவது மற்றும் தீப வழிபாடு வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. நம் முன்னோர்கள் வகுத்த பல நெறிமுறைகளில் தீபம் ஏற்றுவதும் நாம் பின்பற்றும் ஒன்று ஆகும். காலம் காலமாக இந்த வழியில் நடந்த அவர்களைப் பின்பற்றி நாமும் அந்த வழியில் நடப்பதன் மூலம் நம்வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறக்கும். அது மட்டுமன்றி பௌர்ணமி கார்த்திகை அன்று திருவண்ணாமலைக் குன்றிலே ஏற்றும் விளக்கு உயிர்களின் சகல பாவங்களையும் நீக்குகின்றது. இதனையே சீவக சிந்தாமணியும், "குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை பைந்தார்' என கூறுகிறது. நீதி இலக்கியங்களில் ஒன்றான பழமொழி, குன்றின்மேலிட்ட விளக்கு' என்று கூறுவதும் இக்கார்த்திகை தீப விழாவையே. புற இருள் மட்டுமன்றி ஆக இருள் நீக்கும் தீபத் திருவிழாவை கொண்டாடி வாழ்வில் வளம் பெறுவோம்.

banner

Leave a Reply

Submit Comment