AstroVed Menu
AstroVed
search
search
x

எம தீபம் ஏற்றுவதன் பலன்கள் | Yama Deepam Importance In Tamil

dateFebruary 12, 2021

எம தீபம் ஏற்றுவதன் பலன்கள்:

இந்து மதத்தில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. அது போன்று தான் இந்த எம தீபம் ஏற்றுவது என்பது. தீபாவளிக்கு முந்தைய தினம் எம தீபம் ஏற்றுவது நமது மரபு. இதை ஏற்றுவதன் மூலம் நமது முன்னோர்களின் ஆசிகளையும், எமனின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம். ஒரு ஆத்மாவை உருவாக்குவதில் ஆத்மகாரகனான சூரியனும், அந்த ஆத்மாவின் ஆயுளை தீர்மானிப்பதில் சூரியனின் புத்திரர்கள் மற்றும் ஆயுள்காரகனான சனீஸ்வர பகவானும், அவருடைய அதிதேவதையான எமனும் தான் என  நமது ஜோதிடம் கூறுகிறது. ஆன்மிகம் குறித்து மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

எமன் என்றாலே பயம்:

எமன் சூரியனின் மகனானாவார். எமன் என்றதுமே எல்லோரும் பயந்து நடுங்குவார்கள். அவர் இருக்கும் திசையான தெற்கு திசையை பார்த்தாலே பயம் கொள்வார்கள். ஆனால் அவர் எல்லோருக்கும் சமமானவர். அவருக்கு சிவபெருமான் கொடுத்த கடமை உயிரை எடுப்பது. அதில் அவர் எந்தவித பாரபட்சமும் பார்ப்பதில்லை. அவருக்கு நன்றி சொன்னால்  அவர் பாதுகாப்பில் இருக்கும் நமது முன்னோர்களை நன்றாக பார்த்துக் கொள்வார் என்பது நம்பிக்கை.

முன்னோர்கள் வருகை:

நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைத்த போதெல்லாம் பூலோகம் வர இயலாது. பித்ருக்கள் பக்ஷமான ஆடி மாதத்தில் பித்ருக்கள் தங்கள் சந்ததிகளை ஆசீர்வதிக்க பூலோகத்திற்கு வருவதாகவும், பின் தீபாவளி அமாவாசையன்று பூவுலகை விட்டு மீண்டும் பித்ரு லோகத்திற்கு புறப்பட்டு உத்தராயண புன்ய காலத்தில் தை அமாவாசையில் பித்ருலோகம் சென்றடைவதாக புராணங்கள் கூறுகின்றன. அவர்களை வழியனுப்பும் பொருட்டு எம தீபம் ஏற்ற வேண்டும். ஏனென்றால் அவர்கள் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது எம தீபம் மட்டுமே. இந்த எம தீபத்தை ஏற்றி அவர்களுக்கு வழிகாட்டிட உதவுவதால் அவர்களது ஆசீர்வாதங்களைப் பெறலாம். எமனும் மகிழ்ச்சியடைவார். எம தீபத்தை ஏற்றி வழிபடுவதால் துர்மரணம், விபத்து போன்றவை சம்பவிக்காது. நோய், நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம். 

எந்த நட்சத்திரக்காரர்கள் எல்லாம் எம தீபம் ஏற்றலாம்?

பரணி, மகம், சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் எம தீபத்தை ஏற்றுவது சிறப்பு எனக் கூறப்படுகிறது. பரணி நட்சத்திரத்திற்கு அதிபதி எமன். மகம் நட்சத்திரத்திற்கு பித்ருக்களை அதிதேவதையாக கூறியுள்ளனர். ஆன்மீக நூல்களில் சதயத்திற்கு எமனை அதிதேவதையாக கூறப்பட்டுள்ளது. இது தவிர மற்றவர்களும் ஏற்றலாம். 

எம தீபத்தை எப்படி ஏற்றுவது?

எம தீப வழிபாடாக எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும், இல்லத்திலும், எட்டுத் திக்குகளிலும் வைத்து திரிகளை ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கி பிரார்த்திக்க வேண்டும்.  இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் நின்று, பூஜித்து, எம தீப தேவதா மூர்த்திகளை வணங்கி பிரார்த்திக்க வேண்டும். எம பயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணைபுரிவீர்களாக என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

வீட்டில் ஏற்றுபவர்கள், வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் தீபம் ஏற்றப்பட வேண்டும். எம தீபம் தெற்கு திசை நோக்கி எரிய வேண்டும். வசதி இல்லை எனில் வீட்டிற்குள்ளும் ஏற்றலாம். விளக்கேற்றிய பின்னர் நமது முன்னோர்களை நினைத்து ஒரிரு நிமிடங்கள் பிரார்த்திக்க வேண்டும். எம தீபம் குறிப்பாக துர்மரணம்  அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அதற்காக எவரேனும் மரணமடைந்தால் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும் எண்ணக் கூடாது.

எம தீபம் ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்:

எம தீபத்தை ஏற்றுவதன் வாயிலாக நமது முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள். குடும்ப விருத்தி உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றங்களை காணலாம். திருமணத் தடைகள் அகலும். செல்வங்கள் சேரும். எல்லாவிதமான துன்பங்களும் நீங்கி குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும்.


banner

Leave a Reply