AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?

dateApril 1, 2020

அட்சய திருதியை:

அட்சய திருதியை அல்லது அக்ஷய தீஜ் என்பது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் வரும் அமாவாசை நாளுக்கு அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவது ஆகும்.அட்சய என்றால் வளர்தல் என்று பொருள். அன்றைய தினம் மேற்கொள்ளும் காரியங்கள் யாவும் வளர்ச்சி தருவதாக இருக்கும். 

புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் கூறும் அட்சய திருதியை நாட்கள் :

முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.

வனவாச காலத்தில், சூரிய பகவானை வேண்டி தர்மர் அட்சய பாத்திரம் பெற்ற நாள் அட்சய திருதியை ஆகும்.

மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்ற நாள்.

பரசுராமர் அவதரித்த தினமும் இதே அட்சய திருதியை தினத்தில்தான் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. 

அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான்.

அட்சய திருதியை பூஜை:

அட்சய திருதியை அன்று காலையில் எழுந்து நீராடி உடலையும் உள்ளத்தையும்,இல்லத்தையும் தூய்மை செய்து கொள்ள வேண்டும். வீட்டில் கோலமிட்டு மாவிலை தோரணம் அமைக்க வேண்டும். பூஜை அறையில் ஒரு மனைப் பலகையின் மேல் வாழை இலை ஒன்றை வைத்து கலசம் ஸ்தாபிக்க வேண்டும். ஒரு சொம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைக்க வேண்டும். கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வைக்க வேண்டும்.கலசத்திற்கு பக்கத்தில் ஸ்ரீமன் நாராயணன் படம் வைத்து அலங்கரிக்க வேண்டும்.  பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். பிறகு அதனருகில் அன்று வாங்கிய ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும். அது உப்பாகக் கூட இருக்கலாம். 

எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்க வேண்டும். எனவே முதலில் விநாயகரை வணங்கி விட்டுப்  பிறகு கலச பூஜை,   ஸ்ரீமன் நாராயணர் பூஜை போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும்.  தீப ஆராதனைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது. 

எந்த ஒரு சிறப்பு நாள் என்றாலும் கோவிலுக்கு செல்வது சிறந்த பலன்களை அளிக்கும். அட்சய திருதியை அன்று அருகில் இருக்கும் ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு ஆகும். அன்று முடிந்தவர்கள் உபவாசம் இருக்கலாம். 

அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது.

அட்சய திருதியை அன்று வாங்க வேண்டிய பொருட்கள்: 

உப்பு, தங்கம்,அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் அல்லது உங்கள் தகுதிகேற்ற பொருட்கள் என எதை வாங்கினாலும் அவை மென்மேலும் பெருகும்என்பது ஐதீகம். 

புதிதாக கற்பதற்கு தொடங்கலாம். 

புதிதாக தொழில் தொடங்கலாம்.

பூமி பூஜை செய்யலாம்.

அட்சய திருதியை அன்று செய்ய வேண்டிய தான தருமங்கள்:

அட்சய திருதியை அன்று நம்மால் இயன்ற அளவிற்கு பிறருக்கு அன்னதானம் வழங்கலாம்.ஏழைகளுக்கு தானம் செய்யலாம்.தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை  நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும்.இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான வாழ்வு அமையும்.பானகம் மற்றும் நீர் மோர் வழங்கலாம். வெயில் காலத்திற்கு தேவையான குடை, விசிறி, காலணி, சந்தனம் போன்றவை தானம் வழங்கலாம். அந்தப் பருவ காலத்தில் கிடக்கும் பழங்களை தானமாக வழங்கலாம். 

அட்சய திருதியை- அன்னதானமும் பிற சிறப்புகளும்:

எந்தவொரு சிறப்புப் பண்டிகை நாட்களிலும்  அன்னதானம் வழங்குவது சிறப்பு. அட்சயதிருதியை அன்று அன்னதானம் வழங்கினால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும். மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றதும் அட்சய திரிதியை நாளில்தான். அள்ள அள்ளக் குறையாத பாத்திரம் அட்சய பாத்திரம். மணிமேகலை அட்சய பாத்திரத்தில் தான் காய சண்டிகை சாப விமோசனம் பெற்றாள். எனவே அட்சய திருதியை அன்று அன்னதானம் செய்வது சிறப்பு.

சாபம் பெற்று தேய்ந்துபோன சந்திரன், அட்சய திரிதியை தினத்தன்று அட்சய வரம் பெற்று மீண்டும் அட்சய திரிதியை தினத்திலிருந்து வளரத் தொடங்கினான்.பகீரதனின் கடுந்தவத்தால் ஆகாயத்திலிருந்து இறங்கிய கங்கை, அட்சய திரிதியை நாளில்தான் பூமியைத் தொட்டது. பாண்டவர்கள் வனவாசத்தின்போது அட்சய பாத்திரம் பெற்றதும்,. திருமால் மார்பில் என்றும் நீங்காமலிருப்பதற்கான வரத்தை அட்சய திரிதியை தினத்தன்று தான் மகாலட்சுமி பெற்றாள். அட்சய திரிதியை தினத்தன்றுதான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகிலுள்ள முழையூர் பரசுநாதர் ஆலயத்தில், அட்சய திரிதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அச்சமயம் சிவனை தரிசித்தால் செல்வம் பெருகுமென்பது நம்பிக்கை.அட்சய திரிதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய்ச் சேருமென்பது ஐதீகம். எனவே அன்றைய தினம் செய்யப்படும் பித்ருக் கடன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அட்சய திரிதியை தினத்தன்று சிவனே அன்னபூரணியிடம் உணவு பெற்றதால், நமசிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத் தொடங்கலாம். பிறகு நாள்தோறும் 108 முறை சொல்லிவந்தால் பார்வதி பரமேஸ்வரரின் பூரண அருள் கிட்டும்.

எந்தெந்த நட்சத்திரத்தில் எந்தெந்த  தானம் செய்யலாம்?

அஸ்வினி: கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.

பரணி: நெய் சாதம் தானம், ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

கிருத்திகை: சர்க்கரைப் பொங்கல் தானம்; பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.

ரோகிணி: பால் அல்லது பால் பாயசம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

மிருகசீரிஷம்: சாம்பார் சாதம் தானம், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.

திருவாதிரை: தயிர் சாதம் தானம்; ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவலாம்.

புனர்பூசம்: தயிர் சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.

பூசம்: மிளகு கலந்த சாதம் தானம்; கால்நடைகளுக்கு எள்ளுப்புண்ணாக்கு கொடுக்கலாம்.

ஆயில்யம்: வெண்பொங்கல் தானம்; பசுமாட்டுக்கு பச்சைப்பயிறைக் கொடுக்கலாம்.

மகம்: கதம்ப சாதம் தானம்; கால்நடைகளுக்கு கொள்ளு தானியம் கொடுக்கலாம்.

பூரம்: நெய் சாதம்; மன நோயாளிகளுக்கு உதவலாம்.

உத்திரம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; கால்நடைகளுக்கு கோதுமை அளிக்கலாம்.

அஸ்தம்: பால் பாயசம் தானம்; மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.

சித்திரை: துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்; விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.

சுவாதி: உளுந்து வடை தானம்; வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கித் தரலாம்.

விசாகம்: தயிர்சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.

அனுஷம்: மிளகு கலந்த சாதம்;வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு சாதம் கொடுக்கலாம்.

கேட்டை: வெண்பொங்கல் தானம்; பசு மாட்டுக்கு பச்சைப்பயிறு கொடுக்கலாம்.

மூலம்: கதம்ப சாதம் தானம்; ஏழைகளுக்கு உதவலாம்.

பூராடம்: நெய் சாதம் தானம்; ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.

உத்திராடம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

திருவோணம்: சர்க்கரை கலந்த பால் தானம்; வறுமையிலிருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.

அவிட்டம்: சாம்பார் சாதம் தானம்; கால்நடைகளுக்கு துவரை வாங்கித் தரலாம்.

சதயம்: உளுந்துப் பொடி சாதம் தானம்; கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் தரலாம்.

பூரட்டாதி: தயிர் சாதம் தானம்; பிறருக்கு இயன்ற உதவி செய்யலாம்.

உத்திரட்டாதி: மிளகு சாதம் தானம்; ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.

ரேவதி: வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது. பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.


banner

Leave a Reply