விருச்சிக ராசி பொதுவான குணங்கள், Viruchiga Rasi Character in Tamil

விருச்சிக ராசிக்காரர்கள் நிமிர்ந்த நேரான தேகம், உறுதியான உடல், கம்பீரமான தோற்றம், போதுமான அளவு கேசம், அகன்ற நெற்றி, கூர்மையான காது, குறுகிய உதடு கொண்ட வாய், நீண்ட கழுத்து, அகன்ற மார்பு, விரிந்த புஜம்,உறுதியான நீண்ட கைகள், நீண்ட கால்கள், வலிமையான தேகம் உடையவர்களாக இருப்பார்கள்.
பெண்கள் கம்பீரம், நீண்ட கேசம், அழகிய வரிசையான பற்கள், அழகிய தோற்றம், குவிந்த கரண்டைக் கால்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் கொண்டவர்கள். எடுத்த காரியங்களை திறமையுடனும் வெற்றியுடனும் செய்வார்கள். மிகவும் தைரியமானவர்கள். எதையும் நேருக்கு நேராகச் செய்வார்கள். கல்வியில் ஆர்வம் மிக்கவர்கள்.
இவர்கள் சிந்தனை சக்தி மிக்கவர்கள். சதா சர்வ காலமும் சிந்தனை செய்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள். இவர்களிடம் சுய நலப் போக்கும், யாரிடமும் ஒட்டாத குணமும் காணப்படும். இவர்களிடம் மித மிஞ்சிய கற்பனை வளம் இருக்கும்.
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். மனைவியின் பேச்சுகளுக்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள். தாய் தந்தையிடம் அதிக பிரியமாக நடந்து கொள்வார்கள். இவர்களின் வாழக்கையில் சிரமங்களும், சண்டை சச்சரவுகளும், அதிகமாக காணப்படும். ஆயினும் தங்கள் திறமையால் சமாளித்து வெற்றி பெறுவார்கள்.
எப்போதும் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் இருப்பார்கள். விரும்பும் போது பற்று கொள்வதும், வெறுப்பு வரும் போதுவிலகிக் கொள்வதும் இவர்கள் இயல்பு. இவர்கள் எப்போதும் அமைதியாக செயல்படுவார்கள். பழி தீர்க்கும் குணம் கொண்டிருந்தாலும்,நேர்மை மிக்கவர்கள்.
