Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

அசுவினி நட்சத்திரம், அசுவினி நட்சத்திரம் குணங்கள் ,பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

April 13, 2020 | Total Views : 2,343
Zoom In Zoom Out Print

இந்த பூமியில் வாழ்க்கை என்னும் பாதையில் நாம் அனைவரும் பயணம் செய்தாலும் நமது இலக்கு, திசை, நோக்கம் வெவ்வேறாகத் தான் இருக்கின்றது. இதனை நாம் யாரும் மறுக்க இயலாது.  நமது உடல் இயக்கமும், நமது உள்ளம்,  உணர்வு சார்ந்த  அத்தனை இயக்கங்களும் இறையருளால் தான் நடக்கின்றது. நீங்கள் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்றால்,  அது உங்கள் சக்திக்கும் மீறிய ஒரு இயற்கை சக்தி என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். நமது முன்னோர்கள் வகுத்த பாதையில் நாம் நமது வசதிக்கென்று  காலத்திற்கு தக்கவாறு பல மாற்றங்களை செய்து கொண்டு வாழ்வில் முன்னேற நினைக்கிறோம். எது நம்மை வழி நடத்துகின்றது? எது நமது வாழ்க்கையை  தீர்மானிக்கின்றது?  இந்த பிரபஞ்சத்தில் ஒரு துளியாய் இருக்கும் நமது வாழ்வில் நமது அத்தனை இயக்கங்களும்  கிரகங்கள் மூலமாக,  நட்சத்திரங்கள் மூலமாக வழிநடத்தப்படுகின்றன என்று கூறினால் அது தான் நிதர்சனமான உண்மை. ஒருவருடைய ஜாதகப்படி, பிறக்கும் போது, சந்திரன் எந்த நட்சத்திரத்தின், எந்த பாதத்தில் நிற்கிறாரோ அதுவே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களை முக்கியமாகக் கருதினார்கள். அவற்றுள் முதலாவதாக வரும் நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம் ஆகும். 

இது வான் மண்டலத்தில் 0 பாகை முதல் 13 பாகை 20 கலை வரை வியாபித்து உள்ளது. இது மூன்று நட்சத்திரங்களைக் கொண்டது.  இது குதிரையின் முகம் போல் தோற்றமளிக்கும் நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரங்களும் நான்கு பாதங்கள் கொண்டது.  இதன் நான்கு பாதங்களும் மேஷ ராசியில் உள்ளது. இதன் அதிபதி கேது பகவான்.

ஒரு மனிதனின் குண இயல்புகளைத் தீர்மானிக்கும் சக்தி அந்தந்த நட்சத்திரத்திற்கு இருக்கின்றது. அதே சமயம் அந்த நட்சத்திரத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தாங்கிக் கொள்ளும் சக்தி பெற அல்லது நிவர்த்தி செய்து கொள்ள இறையருளால் இயலும். 

அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கென்று, தேவதை, உருவகம், பறவை, மிருகம், விருட்சம் என்று உள்ளது. அந்த வகையில் அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான். இதன் அதி தேவதை அஸ்வினி  குமாரர்கள்  ஆவார்கள். இவர்கள் தேவ மருத்துவர்கள் அல்லது மருத்துவ இரட்டையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் மனிதர்களின் எப்படிப்பட்ட உடல் ஆரோக்கியக் குறைபாடுகளையும் நீக்க வல்லவர்களாக இருக்கிறார்கள். அசுவனி தேவர்களை வணங்குவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம். வணங்க வேண்டிய தெய்வம் சரஸ்வதி தேவி ஆவாள்

இந்த நட்சத்திரம்  ஆண் பாலினத்தை சார்ந்தது.  இதன் நிறம் கருப்பு ஆகும். தேவகணத்தை சார்ந்தது.  இதன் பறவை ராஜாளி ஆகும். இதற்கு வணங்க வேண்டிய, வளர்க்க வேண்டிய, பராமரிக்க வேண்டிய  மரம் எட்டி மரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் தோன்றியவர் அசுவத்தாமன் ஆவார். இது வட தேசத்தையும் உடலில் பாதத்தின் மேல் பாகத்தையும் குறிக்கும். இந்த நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் : அறி, மருத்துவன், நாள், ஆழ், குதிரை வாசி.

அசுவினி நட்சத்திரம் குணங்கள்:

இவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஓய்வாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது. ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் எதையும் புதியதாக செய்ய நினைப்பவர்கள். ஆராய்ச்சியாளர்கள். இவர்களிடம் வேகம் இருக்கும் அளவிற்கு விவேகம் இருக்காது. இவர்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வார்கள். தாம் நினைப்பதை எப்படியாகிலும் அடைந்தே தீருவார்கள். இவர்களுக்கு வாகனங்கள் ஓட்டுவது மிகவும் பிடிக்கும்.. 

பொறுப்பில்லாமல் மற்றவர்களைப் பற்றி நினைக்காமல் இருப்பவர்கள் என்றாலும் இவர்கள் மற்றவர்களின் துயரம் கண்டு உதவி செய்பவர்கள். அவர்களின் துயரங்களுக்கு ஆறுதல் அளிப்பவர்கள். இவர்கள் மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவார்கள். குறிப்பாக ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்து விளங்குவார்கள். 

இவர்களுக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். கண்டிப்பாக பூர்வீக சொத்தில் சிறிதேனும் அனுபவிப்பார்கள். சகோதரர்களுடன் ஒற்றுமை குறைவாக இருக்கும். அவர்களுடன் சண்டை சச்சரவு கூட இருக்கும். 

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

உங்கள் நட்சத்திரக் குறியீடும் உங்கள் குணங்களும்:

ஒரு நபரின் வாழ்க்கை ரகசியம் அவர் பிறந்த நட்சத்திரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அம்ஸங்களையும் பொருத்து  அமையும். உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்தின் உருவம் குதிரைத் தலை அல்லது குதிரை உருவம். உங்கள் வாழ்வின் ரகசியத்தை நீங்கள் உங்கள் நட்சத்திரத்தின் உருவம் மூலம் அறியலாம். உங்களிடம் குதிரையின் வேகம் இருக்கும். இலக்கை நோக்கியே நீங்கள் முன்னேறுவீர்கள். உங்கள் இலக்கை அடையும் வரை நீங்கள் உங்கள் முயற்சியை மேற்கொள்வீர்கள். அது போல உங்களுக்கு வாகனம் ஓட்டுவது பிடிக்கும். அது மட்டுமின்றி வேகமாக ஓட்டும் விருப்பம் உங்களிடம் காணப்படும். வேகமாக வாகனங்களை ஒட்டி விதி முறைகளை மீறுவதால் தண்டனை பெறும் நபராகவும் நீங்கள் சில சமயங்களில் இருப்பீர்கள்.  சில சமயங்களில் விபத்துக்களையும் சந்திப்பீர்கள்.

உங்கள் நட்சத்திர விருட்சமும் உங்கள் குணங்களும்:

உங்கள் நட்சத்திர விருட்சம் எட்டி மரம் ஆகும். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் வெளி வந்த காரணத்தால் சிவனே அதனைப் பருகி உலகத்தை காத்தருளினார். அதற்கு நன்றி செலுத்த அசுவினி குமாரர்கள் எட்டி மரத்தின் கீழே தவமியற்றினர். கசப்பான எட்டி மரம் மற்றும் அதன் பல பாகங்கள் மருத்துவப் பயன் உள்ளவை. நோய்களை குணமாக்கும் தன்மை உண்டு. மேலும் அஸ்வினி குமாரர்களும் தேவ மருத்துவர்கள். எனவே நீங்கள் பிறருக்கு ஆறுதல் அளித்து உடல் மற்றும் மன நோய்களை அகற்றுவீர்கள். 

அசுவினி நட்சத்திரத்தின் அடையாளங்கள் :

மலையின் உச்சி, தலை , தொப்பி,  தலைப்பாகை, அழுகை, விசும்பல், தலை முடி , மொட்டை அடித்தல், மொட்டை மாடி, அன்னாசிப் பழம், காளான், இரு சக்கர வாகனம், பயணத்தின் புறப்பாடு, சூரிய உதயம் 

தொழில் ஆர்வங்கள்: மனநல மருத்துவம், ஆன்மீகம், இறையியல், மருத்துவம், ராணுவம், போலீஸ், குற்றவியல் துறை, நீதித் துறை, வியாபாரிகள், இசைக் கலைஞர்கள், குதிரைப் பயிற்சியாளர்கள், ஜாக்கிகள், கட்டிட நிபுணர்கள், கட்டிடத்தொழில், கட்டுமான பொருட்கள் விற்பனை, பங்கு தரகர்கள், வணிகம். உள்துறை வடிவமைப்பாளர்கள், ஓட்டுனர்கள், விளையாட்டு துறை, உணவகம் தொடர்பான தொழில்

விருப்பமான செயல்கள் : பிரயாணங்கள், மருந்துப் பொருட்கள், ஆபரணங்கள் தயாரித்தல், கட்டிடக் கலை பற்றிய படிப்பு, வாங்கல் விற்றல், யானை, குதிரை சவாரி, வண்டி மற்றும் வாகனங்கள் ஒட்டுதல்.

நோய் : தலையில் காயம். தலைவலி, மன நோய், சின்னம்மை, மலேரியா, தசை நோய். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விபத்து ஏற்படுவது சகஜமான விஷயம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உண்டு. அஸ்வினி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் மேஷ ராசியில் அமைகின்றது. ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களுக்கும் வெவ்வேறு குணநலன்கள் காணப்படும்.  அதனை இப்பொழுது காண்போம்.

அசுவினி பாதம்-1

செவ்வாய் ஆளும் ராசியான மேஷத்தின் நவாம்சத்தில் அஸ்வினியின் முதல் பாதம் அமைகின்றது. அஸ்வினி நட்சத்திரம் முதல்  பாதத்தில் பிறந்தவர்கள்  உற்சாகம், சுறுசுறுப்பு, காந்தம் போன்ற கவர்ச்சித்தன்மை, தைரியம் மற்றும் இந்த  நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கும் இயல்பான நல்ல குணங்களைப் பெற்றிருப்பார்கள். இவர்கள்  கவர்ச்சிகரமாகவும் அழகாகவும் இருப்பார்கள். இவர்கள் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். வேகப் பிரியர்களாக  இருப்பார்கள்.  மேலும் நிலையற்ற மனம்  அவசரச் செயல், சுறுசுறுப்பு, பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாத குணம், வீரதீரச் செயல்கள், விளையாட்டு வீரர்கள், உயிரைப் பற்றி கவலைப்படாத அச்சமூட்டும் விளையாட்டுக்கள். அடுத்தவர் பணத்தை அனுபவித்து அதனால் மகிழ்ச்சி பெறுவது. கதாசிரியர்கள். காரமான உணவில் விருப்பம். அதிகாரம், ஆணவம் போன்ற குண நலன்கள் இவர்களிடம் காணப்படும்.  

அசுவினி பாதம் 2

சுக்கிரன்  ஆளும் ராசியான ரிஷபத்தின் நவாம்சத்தில் அஸ்வினியின் இரண்டாம்  பாதம் அமைகின்றது. அஸ்வினி நட்சத்திரம்  இரண்டாம்   பாதத்தில் பிறந்தவர்கள் விரைந்து யோசிப்பார்கள் மற்றும்  விரைந்து செயல்படுவார்கள்.  சில சமயம் அவர்களின் வேகம் நல்லதைவிட தொல்லைகளை ஏற்படுத்தும். அவர்கள் புதிய முயற்சிகளையும்  புதுமையான விஷயங்களையும் தொடர்ந்து செய்வார்கள். இந்த நட்சத்திரத்தின் சிறப்பே அதன் குறியீடாகிய குதிரையின் தகுதிகளை கொண்டிருப்பது. இவர்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் திண்மை மற்றவர்களின் பாராட்டைப் பெறும்.

அசுவினி பாதம் 3

புதன் ஆளும் ராசியான மிதுனத்தின் நவாம்சத்தில் அஸ்வினியின் மூன்றாம்  பாதம் அமைகின்றது. அஸ்வினி நட்சத்திரம்  மூன்றாம்   பாதத்தில் பிறந்தவர்கள், ஆயுதப் படை மற்றும் சட்ட அமலாக்கம் போன்ற துறையை தேர்ந்தெடுக்கும் போது மிகுந்த பயனடைகிறார்கள். வேகத்தின் மீதான இவர்களின் பிரியம் காரணமாக இவர்களுக்கு  விளையாட்டுத் துறை, தடகளம், பறத்தல், சவாரி மற்றும் வியாபாரம் (விரைவான சிந்தனை)  போன்றவைகள்  சாதகமாக அமையும். படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகம். விஷய ஞானம் அதிகம் உள்ளவர்கள். எளிதில் கற்றுக்கொள்பவர்கள். கல்வியில் அடிக்கடி தடையைச் சந்திப்பார்கள். எழுத்தாற்றல் உடையவர்கள். தன் எழுத்தால் அனைவரையும் கவர்பவர்கள், தன்னுடைய எழுத்தில் சொல்லவந்த கருத்தை தெளிவாக விளக்குபவர்கள். எனவே இவர்களில் சிலர்  எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் என பரிமளிப்பார்கள். 

அசுவினி பாதம் 4

சந்திரன்   ஆளும் ராசியான கடகத்தின் நவாம்சத்தில் அஸ்வினியின் நான்காம்  பாதம் அமைகின்றது. அஸ்வினி நட்சத்திரம்  நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் குணப்படுத்தும் திறன் பெற்றவர்கள். மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் உயர் நிலை வளர்ச்சி காண்பார்கள். சில சமயங்களில் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுடைய பிடிவாத குணத்தினால் அவர்களுக்கு ஏற்படும் தொல்லைகளைத் தவிர மற்றபடி எல்லா வகையிலும் அவர்கள்  மற்றவர்களுடன் நல்லுறவைக் கொண்டு மகிழ்வார்கள்.

காயத்திரி மந்திரம்

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே 
சுதாகராயை தீமஹி 
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

இந்த நட்சத்திரத்தில் செய்யும் சுப காரியங்கள்

விவாகம் செய்யலாம், புதுமனை புகு விழா, வித்யா ஆரம்பம், உபநயனம், பதவி ஏற்றல், தானியம் வாங்குதல், வாகனம், ஆபரணம், மாடு வாங்குதல், வெளிநாடு செல்லுதல், மாங்கல்யம் செய்தல், பும்சவனம் செய்தல், சாந்தி முகூர்த்தம், விதை விதைத்தல், வியாதி உள்ளவர்கள் மருந்து உண்ணுதல். 

இந்த நட்சத்திரத்தின் எழுத்துக்கள் : 

முதல் பாதம் சு
இரண்டாம் பாதம் சே
மூன்றாம் பாதம் சோ
நான்காம் பாதம் ல

banner

Leave a Reply

Submit Comment