திருப்பாம்புரம் கோவில் | Thirupampuram temple details in Tamil

தல வரலாறு
பாம்பு தொழுத இத்தலம் திருப்பாம்புரம், “பாம்புரம்” எனப் பெயர் கொண்டது.கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது சிவ பெருமான் கழுத்தில் இருந்த நாகம் விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி மிகுந்த கர்வம் கொண்டது. இதனை அறிந்த சிவபெருமான் மிகவும் கோபமுற்று நாக இனத்திற்கு சாபம் வழங்கி விட்டார். அதனால் நாக இனம் முழுவதும் தனது சக்தியயை இழந்தது. உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்தி அன்று சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர்.
இத்தலத்தின் சிறப்பு
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 122 வது தேவாரத்தலம் ஆகும்.சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்புரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.
ராகு-கேது தோஷம் நீக்கும் ஆலயம்
திருப்பாம்புரம் ராகு – கேது தோஷ நிவர்த்தி ஸ்தலம். இந்த தலத்தை தரிசித்தாலே ராகு கேது தோஷம் நீங்கி விடும். மற்ற ஸ்தலங்களுக்கு போக வேண்டியதில்லை. ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது. ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், ராகு தசை நடந்தால், கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
