Puthumanai Pugu Vizha in Tamil | புது வீடு கிரகப்பிரவேசம்

செல்வ வளத்துடன் வாழ, கிரகப்பிரவேசம் அன்று இவற்றை கடைபிடியுங்கள்
புது வீடு கட்டி அங்கு நாம் குடி போகும் நாளில் நடத்தும் விழா புதுமனை புகு விழா என்று கூறுவார்கள். இதையே கிரகபிரவேசம் என்றும் கூறுவார்கள். நாம் கட்டிய புது வீட்டில் வாஸ்து தோஷங்கள் ஏதும் இருந்தால் அதற்கு நிவர்த்தி செய்யவும் தீய சக்திகளை அழிக்கவும் ஹோமம், பூஜை முதலியன செய்யப்படுகினறன.
ஹோமம் மற்றும் பூஜை செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் பெருகும். ஹோமத்தில் இடப்படும் சமித்துகள் சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தும். அவ்வாறு ஹோமம் பூஜை செய்ய நல்ல நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பெரும்பாலும் விடியற்காலை சிறந்த நேரமாக கருதப்படுகிறது.
நாம் வாழும் வீட்டை மாற்றும் போது, அந்த வீட்டில் நாம் மகிழ்ச்சியாக வாழ சில தெய்வீக சடங்குகளை பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு பின்பற்றுவதன் மூலம் இல்லத்தில் சுபிட்சம் நிறையும். கிரகபிரவேசம் என்றால் மாவிலை, தோரணம், மாக்கோலம் என்று வீட்டை அலங்கரிப்பது வழக்கம். மேலும், கிரக பிரவேசம் செய்யும் போது கண்டிப்பாக நாம என்னென்ன செய்ய வேண்டும் என்று காண்போம்.
- முதலாவதாக கிரகப்பிரவேசம் செய்ய சுப முகூர்த்தத்தை கண்டறிய வேண்டும்.
- நாம் வாழும் வீட்டில் இருந்து விளக்கு ஏற்றி அதை அணையாமல் பாதுகாத்து குடிபுகும் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்
- வீடு மிகவும் தொலைவில் என்றால் அருகில் இருக்கும் கோவிலில் இருந்து எடுத்துச் செல்வது நல்லது.
- மஞ்சள், குங்குமம் போன்ற மங்களகரமான பொருட்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
- கிரகப்பிரவேச நாளில் முதலில் பசு மாடு கன்றுடன் புது வீட்டின் உள்ளே செல்ல வேண்டும்.
- கண்டிப்பாக வாசலில் தாருடன் கூடிய வாழை மரத்தை கட்ட வேண்டும். அதில் வாழைப்பூவும் இருக்க வேண்டும். இது எதிர்மறை சக்தியை விரட்டும். நேர்மறை ஆற்றலை கொண்டு சேர்க்கும். தனி வீடாக இருந்தால் வாழை மரத்தை நட வேண்டும்.
- தென்னை ஓலையை குறைந்த பட்சம் ஒரு ஓலையாவது அதில் சுற்ற வேண்டும். தனி வீடு கட்டுபவர்கள் அன்று ஒரு தென்னம்பாளையை நடுவது நன்று.
- நம்மை பெற்றவர்கள். வளர்த்தவர்கள், நமக்கு உறுதுணையாக இருந்தவர்களை விழாவிற்கு அழைத்து அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும். இது மூத்தவர்களின் ஆசிகளை பெற்றுத் தரும்.
- முதலில் கணபதி ஹோமம் செய்ய வேண்டும். அதன் பிறகு அவரவர் விருப்பத்திற்கேற்ப பிற ஹோமங்களை நடத்தலாம். நவ கிரக ஹோமம் செய்ய வேண்டும்.
- மாலையில் விளக்கேற்ற வேண்டும்.
- கிரகப்பிரவேசம் செய்யும் நாளில், அந்த வீட்டு உரிமையாளர்கள் தம்பதிகளாக இரவு அங்கு தங்க வேண்டும்.
இவ்வாறு நியமத்துடன் கிரகப் பிரவேசம் செய்வதன் மூலம் அந்த வீட்டில் ஆற்றல் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் பெருகும். வாஸ்து தோஷங்கள் நீங்கும். தாங்கள் மட்டும் அல்லாது தங்களுடைய வம்சாவளியினரும், அடுத்தடுத்த சந்ததியினரும் அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ இயலும். செல்வ வளம் பெருகும்.
