மனித வாழ்க்கைக்குத் தேவை நல்ல உறைவிடம், நல்ல உணவு, நல்ல உடை. இம்மூன்றும் மிகவும் அத்தியாவசியமானவை. இதில் வீடு என்பது கோயிலைப் போன்றது. கோயில் எப்படி நம் மனதுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தருகிறதோ, அது போன்று நாம் ஆயுட்காலம் முழுவதும் குடியிருக்கும் வீடும் அவ்வாறு அமைவது தான் நலம். ‘வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்’ என்ற ஒரு சொல் உண்டு. ஏனெனில் இரண்டுமே வாழ்க்கைக்குத் தேவை. இன்றைய கால கட்டத்தில் வாழ்கின்ற எத்தனையோ ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வாடகை வீட்டில் படும் இன்னல்களை சொல்லி மாளாது.
அவர்களுக்கெல்லாம் ஒரு கனவு இருக்கும். எப்படியாவது சிறிய அளவிலாவது நமக்கென்று சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று. இந்தக் கனவையே லட்சியமாகக் கொண்டு பல முயற்சிகளை மேற்கொண்டு வீட்டைக் கட்டி விடுவார்கள். தனக்கும், தன் சந்ததிக்கும் வாழ்விடமாக அமையப் போகின்ற வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்காகத்தான் கிரஹப்பிரவேசம் செய்யப்படுகிறது. அதை எப்படி முறையாகச் செய்வது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
கிரஹப்பிரவேசம் எப்போது செய்யலாம்?
ஜோதிடர்கள் கிரஹப்பிரவேசம் என்ற புதுமனை புகுவிழாவை சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் செய்யலாம் என்கிறார்கள். இந்த மாதங்களில் செய்தால் குடும்பம் தழைக்கும், பல சந்ததிகள் கடந்தும் அந்த வீடும் வாசலும் நிலைத்திருக்கும் என்கிறார்கள்.
கிரஹப்பிரவேசத்தை எப்படிச் செய்வது?
சாஸ்திரங்கள் கூறியுள்ளபடி கிரஹப்பிரவேச ஹோமத்தை அதிகாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள்ளும், லக்ன முகூர்த்தங்களான காலை 6.00 முதல் 7.00 ஆகிய நேரங்களில் செய்வது சிறப்பு. 9 மணிக்கு மேல் நல்ல நேரமாக இருந்தாலும் கிரஹப்பிரவேசம் செய்யாமல் இருப்பது நலம்.
கணவன், மனைவி இருவரும் கிரஹப்பிரவேச பூஜை மனையில் அமரும் போது ஆடம்பர உடைகளைத் தவிர்த்து நமது பாராம்பரிய உடைகளாக வேட்டி, சேலையை அணிந்துக் கொள்ள வேண்டும். கிரஹப்பிரவேசத்திற்கு தேவையான அனைத்து பூஜை பொருட்களும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தயார் நிலையில் இருக்க வேண்டும். கிரஹப்பிரவேச சடங்குகளை அர்ச்சகர் சொல்வதைக் கேட்டு ஒன்றன் பின் ஒன்றாக நிதானமாக செய்ய வேண்டும். பூஜைக்கான பொருட்களை அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். அவர் முதலில் விநாயகர் பூஜை, அடுத்து லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை என வரிசையாக ஹோமம் செய்து கலச தண்ணீரை வீடு முழுவதும் தெளிப்பார்.
உங்கள் வீடு கட்டியிருக்கும் பகுதியில் அருகே உள்ள ஏதேனும் ஒரு கோயிலின் கோபுர வாசலில் சாமிப்படம், அரிசி, உப்பு, பருப்பு, குடத்தில் நீர், காமாட்சி தீபம், ஐவகை மங்கலப் பொருட்கள் மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வந்து பூஜை முறைகளை செய்வதால் தெய்வங்களின் அனுக்கிரகம் உங்களுக்கு உண்டாகும்.
புதிய வீட்டிற்குள் தெய்வீத் தன்மை நிறைந்த கன்று ஈன்ற பசுவை அழைத்து வந்து கோ பூஜை செய்யும் போது கணவன், மனைவி இருவரும் பசுவின் அங்கங்களுக்கு பொட்டு வைத்து, அதன் கன்றிற்கும் பொட்டு வைத்து, துணி மாலை சாற்றி, அரிசி, வெல்லம் கலந்த கலவை மற்றும் அகத்திக் கீரையை பசுவிற்கும் கன்றிற்கும் உண்ண கொடுக்க வேண்டும்.
அதன் பின், அன்றைய தினத்தில் காலையில் வரும் சுப முகூர்த்த நேரம் முடியும் முன்பாக அடுப்பில் ஒரு புதிய பாத்திரம் வாங்கி, அதற்கு பூ, சந்தனம், குங்குமம் வைத்து, பசும்பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வந்த பின் கைகூப்பி வணங்கி அதனை, சாமி படத்தின் முன்பாக வைத்து பூஜை பொருட்களுடன் நிவேதனம் செய்து ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். இவ்வாறாக முறைப்படி கிரகப்பிரவேச சடங்கு செய்வதால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் என்றென்றும் நன்மையான பலன்களை பெறுவார்கள்.

Leave a Reply