Midhunam Rasi Guru Peyarchi Palangal 2020 to 2021 - மிதுனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021
கிரகங்களுள் சுப கிரகம் என்று கூறப்படும் குரு பகவான் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மகர ராசி சனியின் ஆட்சி வீடு ஆகும். இங்கு குரு பகவான் நீசம் அடைகிறார். என்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார். உங்கள் ராசிக்கு அஷ்ட ஸ்தானம் என்று கூறப்படும் 8 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் 12ஆம் வீடு, 2ஆம் வீடு, மற்றும் 4 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 12 ஆம் வீடு என்பது, மோட்சம், நஷ்டங்கள், செலவுகள், ரகசியங்கள், வெளிநாடுகளில் குடியேறுவது, முதலீடு, தான தர்மம் ஆகியவற்றைக் குறிக்கிறது. 2 ஆம் வீடு, செல்வம், குடும்பம், பேச்சு மற்றும் குரல், ஆரம்பக் கல்வி, சொத்து, உடமை, ஆடை, கோபம், வாத விவாதம் போன்றவற்றையும், 4 ஆம் வீடு, வசதிகள், தாய், கல்வி, இல்லம், நிலம், வாகனம், உறவினர்கள், ஆடம்பரப் பொருட்கள் போன்றவற்றையும் குறிக்கின்றன.
இந்த குரு பெயர்ச்சி மிதுன ராசி அன்பர்களுக்கு தொழில் மற்றும் அதன் முன்னேற்றங்களில் பல தடைகளை ஏற்படுத்தும். தொழிலில் பல சவால்களை எதிர் கொண்டு வெல்ல வேண்டும். எதிரிகளை நீங்கள் சாமார்த்தியமாக முறியடிக்க வேண்டும். உங்கள் தொழிலைப் பொறுத்தவரை, கடும் முயற்சிக்குப் பின்னரே, நீங்கள் விரும்பும் முடிவுகளைப் பெறலாம். இதற்கெல்லாம் உங்களுக்கு மன பலம் அவசியம் தேவை என்பதால் முதலில் நீங்கள் உங்கள் ஆற்றலையும் மன வலிமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பொறுமையும் விடா முயற்சியும் தேவைப்படும் காலக் கட்டம். உங்கள் வாழ்க்கைப் பாதையை சுமூகமாக செலுத்துவது உங்கள் கையில் தான் உள்ளது.
பணியில் இருக்கும் மிதுன ராசி அன்பர்களுக்கு ஊக்கத் தொகை, பதவி உயர்வு போன்றவை இப்பொழுது அவ்வளவு எளிதில் கிடைக்காது. சமுதாயத்தில் உங்கள் புகழ், அதிகாரம், கௌரவம் போன்றவையும் பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை. உங்கள் அறிவு, தொழில் நுட்பத் திறன் போன்றவற்றை மேம்படுத்திக் கொள்வதும் கடினமாக இருக்கலாம். இப்பொழுது படைப்பாற்றல், புதிய உத்திகளைக் கையாளுதல், கலைத் திறன், நிர்வாகத் திறன் போன்ற உங்களது நேர்மறை குணங்கள், இந்த நேரத்தில், சிறந்து விளங்காமல் போகலாம். அதே நேரம், கோபம், எளிதில் உணர்ச்சி வசப்படுதல், வாத விவாதங்களில் ஈடுபடுதல் போன்ற எதிர்மறைகள் மிகவும் அதிகமாகலாம்.

உங்கள் நிதி நிலையைப் பொறுத்தவரை இது சுமாரான பலன் அளிக்கும் காலமாகத்தான் இருக்கும். நிதிநிலையை கட்டுப்படுத்த நீங்கள் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் பணத் தேவைகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். சேமிப்புப் பணம் கரையும். செலவுகளில் எச்சரிக்கையும் கவனமும் தேவை. சொத்து வாங்குவது, பரம்பரை சொத்தை அடைவது போன்றவற்றில் சில தடைகளும் தாமதங்களும் ஏற்படும். திடீர் ஆதாயங்களை எதிர்பார்க்க இது ஏற்ற தருணம் அல்ல.
வேலை, தொழில்
உங்கள் தொழிலில் ஒரு தேக்கத் தன்மை காணப்படும். பணப்பற்றாக்குறை காரணமாக தொழிலை விரிவுபடுத்த இயலாத நிலை இருக்கும். வெளிநாடுகளில் தொழிலை விரிவு படுத்துவதற்கும், புதிய தொழில்களில் முதலீடு செய்வதற்கும் கூட, இது ஏற்ற காலமல்ல. பணியில் இருப்பவர்களும் பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பொறுமையும் விடா முயற்சியும் இருந்தால் தான் நீங்கள் வெற்றி காண இயலும். ஏனெனில், காத்திருத்தலுக்குப் பின், வேலை, தொழில் போன்றவற்றில் ஆதாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
நிதி
நிதிநிலையில் நீங்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் சேமிப்பு கரையும். வருமானமும் இலாபமும் நீங்கள் எதிர் பார்க்கும் அளவிற்கு இருக்காது. உங்கள் செலவுகளும் அதிகரித்து காணப்படும். அசையாச் சொத்து எதையும் வாங்கவோ, விற்கவோ வேண்டாம். அதற்கு இது உரிய தருணம் இது அல்ல. இந்தக் காலகட்டத்தில், ஒவ்வொரு ரூபாயையும், நன்கு யோசித்த பின்னரே செலவழிக்க வேண்டும்.
குடும்பம்
குடும்பத்தில் பல பிரச்சனைகள் எழலாம். உங்கள் முயற்சி மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டியது அவசியமாக இருக்கும். நிலைமையை நாசூக்காகக் கையாள்வதன் மூலம், குடும்பத்தில் நல்லுறவைப் பேண இயலும். குடும்பத்தினரின் அணுகுமுறை உங்களுக்கு சவாலாக இருக்கும். எனவே நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பதும், செயல்படுவதும் அவசியம். ஆனால் இவற்றையெல்லாம் நினைத்து நீங்கள் எந்த நேரத்திலும் சோர்ந்து போய்விட வேண்டாம். தன்னம்பிக்கையுடன் இவற்றையெல்லாம் எதிர்கொண்டால் நீங்கள் எதிலும் வெற்றி காணலாம்.
கல்வி
கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டும். கவனம் சிதற வாய்ப்புள்ளதால் கவனமுடன் இருக்க வேண்டும். தீய சகவாசம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும். தனியாக படிப்பதை விட சக மாணவர்களுடன் இணைந்து குழுவாக படிப்பது நன்கு படித்து சிறந்த மதிப்பெண்கள் பெற உங்களுக்கு உதவும்.
காதலும், திருமண வாழ்க்கையும்
திருமணமான தம்பதிகள் தங்களுக்குள் ஒளிவு மறைவு ஏதும் இன்றி பரஸ்பரம் கருத்துகளைப் பரிமாறி குடும்பம் நடத்துவது சிறந்தது. இதன் மூலம் உறவு வலுப்படும். புரிந்துணர்வும் விட்டுக் கொடுத்து வாழ்வதும் குடும்ப உறவில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும். பிரச்சனைகளை, அமைதியாகவும், நிதானமாகவும் கையாள்வது நன்மை தரும். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தக்க வரன் தேடுவதில் பல தடைகள் ஏற்படலாம். திருமண முயற்சியளில் பல தடைகள் ஏற்படலாம்.
ஆரோக்கியம்
இந்தக் காலக் கட்டத்தில் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நீங்கள் கவனக் குறைவாக இருக்க வாய்ப்புண்டு. உடல் உபாதைகள் சிறிய அளவில் இருக்கும் போதே மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது. அப்போது தான் அது பெரிய அளவில் மாறாது இருக்கும். மருத்துவமனை நாடிச் செல்வதை அது தடுக்கும். சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
எளிய பரிகாரங்கள்
- ‘ஓம் குரவே நமஹ’ என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
- ‘ஒம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஸஹ குருவே நமஹ’ என்ற மந்திரத்தை, வியாழக்கிழமைகளில் 108 முறை ஜபம் செய்யவும்
- பகவான் மஹாவிஷ்ணு, சிவபெருமான் இருவரையும் வணங்கவும்
- இனிப்புகள், வெல்லம், தேன் ஆகியவற்றை பிறருக்கு அளிக்கவும்
- மஞ்சள் கைக்குட்டையை, எப்பொழுதும் உங்களிடம் வைத்துக் கொள்ளவும்







