Kadagam Rasi Guru Peyarchi Palangal 2020 to 2021 - கடகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021
கிரகங்களுள் சுப கிரகம் என்று கூறப்படும் குரு பகவான் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மகர ராசி சனியின் ஆட்சி வீடு ஆகும். இங்கு குரு பகவான் நீசம் அடைகிறார். என்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார். உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் 11ஆம் வீடு, 1ஆம் வீடு, மற்றும் 3 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 11 ஆம் வீடு என்பது, லாபம், விருப்பங்கள் நிறைவேறுதல் போன்றவற்றையும், 1 ஆம் வீடு என்பது, திறமைகள், குணநலங்கள், பொது வாழ்க்கை ஆகியவற்றையும், 3 ஆம் வீடு என்பது, தகவல் தொடர்பு, துணிவு, கடவுள் நம்பிக்கை, இளைய சகோதரர்கள், அண்டை அயலார் போன்றவற்றையும் குறிக்கும்.
கடக ராசி அன்பர்களே! இந்தப் பெயர்ச்சி, உங்களை செல்வச் செழிப்பில் கொழிக்கச் செய்யும் எனலாம். வாழ்க்கைத் துணை மற்றும் நெருக்கமானவர்களுடன் உறவு, மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கையும் பொதுவாக, எளிதாகச் செல்லும். நீங்களும், தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயலாற்றுவீர்கள். இது தடைகள் அனைத்தையும் திறமையாகச் சமாளிக்க உதவும். இது உங்களுக்குச் சாதகமான காலகட்டம் என்பதால், உங்கள் விருப்பங்கள் நிறைவேற இது உகந்த நேரமாக இருக்கும் எனலாம்.

அனைவரிடமும் நீங்கள் மென்மையாகவும், மரியாதையாகவும் பழகுவீர்கள். இது, அவர்களுடன் உங்களுக்கு நல்லுறவை ஏற்படுத்த உதவும். ஆனால் வயதில் மூத்தவர்களுடன் சில பிரச்சனைகள் எழலாம் என்பதால், அவர்களுடன் பழகுவதில் கவனமாக இருக்கவும். ஆனால், நண்பர்களிடமிருந்து உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும். அருகிலுள்ள இடங்களுக்கு மேற்கொள்ளும் பயணங்கள் உங்களுக்கு நன்மை தரலாம். ஆனால், இந்தப் பெயர்ச்சி காலத்தில் நீங்கள் அதிக விமானப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பில்லை.
ஆன்மீக நாட்டம் குறையும். உங்கள் மனம் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளது.குடும்பம் மற்றும் பொது இடங்களில் நீங்கள் விதி முறைகளை அனுசரித்து நடக்காமல் அதற்குப் புறம்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். எனவே இந்தக் காலக் கட்டத்தில் உங்களுக்கு சுயக் கட்டுப்பாடு அவசியம் தேவை. மற்றவர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்படும்.
வேலை, தொழில்
வீடு வாங்கல் விற்றல், வாகனம் விற்றல் வாங்கல் ஆகிய தொழில் தவிர இதர தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றமும் சிறந்த பலனும் காண்பார்கள். தொழில் முயற்சிகளுக்கும், கூட்டுத் தொழிலுக்கும், பொதுவாக, இது சாதகமான காலமாக இருக்கும். உங்கள் கடுமையான முயற்சிகள் மூலம் நீங்கள் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களின் திருப்திக்கு ஆளாவீர்கள். அதன் மூலம் அவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
பணி செய்யும் அன்பர்கள், அலுவலகத்தில், சக ஊழியர்களும், கீழ் பணிபுரிபவர்களும், இணக்கமாகப் பணியாற்றுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், மேலதிகாரிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க இயலாது. வேலையில் வளர்ச்சியும், வளமும் சுமாராக இருக்கலாம்.
நிதி
சொத்து தொடர்பான விஷயங்கள் மிகச் சிறப்பாக இருக்காது என்றாலும், பலவித வருமானங்களின் வழியாக, உங்களிடம் கணிசமான பணம் வந்து சேரும். ஆனால் ஊக வணிகத்தில் ஈடுபட வேண்டாம். பங்குச் சந்தை, ம்யூசுவல் ஃபண்ட் போன்றவையும் அதிக லாபம் அளிக்காது. தொழில் முனைவோர் கணிசமான லாபம் அடையலாம். வருமானம் நிலையாகவும், உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானதாகவும் இருக்கும். உங்கள் செலவு அதிகம் இருக்கலாம் என்பதால், எதிர்காலத்திற்காக பணம், சொத்து முதலியவற்றை சேமிப்பது நல்லது. உங்கள் துணை அல்லது கூட்டாளியின் நிதிநிலையும் முன்னேற்றம் காணும்.
குடும்பம்
குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். இணக்கமான நல்லுறவு இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் அன்புடனும் ஆதரவுடனும் இருப்பார்கள். வயதில் மூத்தவர்கள் மனம் கோணாத வகையில் நடந்து கொள்ள முயலுங்கள். உங்கள் கருத்தும் குடும்ப உறுப்பினர் கருத்தும் ஒத்துப் போகும். குடும்பத்திற்குள், பொதுவான புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் அதிக அளவில் காணப்படும். இந்த நேரத்தில், மற்ற உறவினர்கள் அளிக்கும் ஆதரவும் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கும் வகையில் இருக்கும்.
கல்வி
கல்வி பயிலும் மாணவர்கள் இந்த காலக் கட்டத்தில் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உண்மையான மற்றும் கடுமையான உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்வித் துறை மற்றும் கல்லூரி கிடைப்பதில் சில தடைகள் மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடும். ஆனால், போட்டி அல்லது விசேஷத் தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய முடிவு கிடைக்கும்.
காதலும், திருமண வாழ்க்கையும்
கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பரஸ்பரம் புரிந்துணர்வு இருப்பதால் கருத்து வேறுபாடுகள் குறைந்து நல்லிணக்க உறவு மேம்பட வாய்ப்புள்ளது. ஆனால் பெரியவர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். திருமணத்திற்கு தக்க வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல துணை அமையவும் வாய்ப்புள்ளது. காதலர்களுக்கு வீட்டில் பெரியவர்களின் எதிர்ப்புகளை சந்திக்க நேரும்.
ஆரோக்கியம்
உங்கள் மற்றும் உங்கள் துணைவரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுபோல, உடன்பிறப்புக்களின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். ஆனால் பெற்றோரின் உடல்நிலை கவலை அளிக்கலாம். உங்கள் ஆரோக்கியம் பொதுவாக நன்றாக இருக்கும் என்றாலும், உங்கள் ரத்த அழுத்தம், கொழுப்பு போன்றவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், இவற்றை பரிசோதித்துக் கொள்வது நலம். மன அமைதியே உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகின்றது. எனவே மனதை இலேசாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
எளிய பரிகாரங்கள்
- ‘ஓம் குரவே நமஹ’ என்ற மந்திரத்தை, வியாழக்கிழமை காலையில் 108 முறை ஜபம் செய்யவும்
- பசுக்களுக்கும், பறவைகளுக்கும் வாழைப்பழம், மஞ்சள் நிற இனிப்புகள் வழங்கவும்
- ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை அளிக்கவும்
- அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் தயிர் அல்லது தயிர் சாதம் உணவாக அளிக்கவும்
- ஆல மரத்திற்கும், அரச மரத்திற்கும் தண்ணீர் ஊற்றி, வணங்கவும்
- வாழைப்பழம் உண்பதையோ, தூங்கும் அறையில் வைப்பதையோ தவிர்க்கவும். இது, வியாழன் கிரகத்தின் எதிர்மறை தாக்கங்களை விலக்கும்.

Leave a Reply
vijayalakshmi a/p thurairaj
guru peyarchi 2020 to 2021 which month . (starting and ending)
October 16, 2020






