Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

Meenakshi Pancharatnam

May 12, 2020 | Total Views : 1,489
Zoom In Zoom Out Print

Meenakshi Pancharatnam | மீனாட்சி பஞ்சரத்தினம்:

மீனாட்சி பஞ்சரத்தினம் (மீனாட்சியின் அருளைப் பெற்றுத் தரும் ஐந்து ரத்தினங்கள்) என்பது ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய ஒரு பிரபலமான ஸ்தோத்திரமாகும். சுந்தரேஸ்வர் (சிவன்) கடவுளின் மனைவியான மீனாட்சி தெய்வத்தின் தெய்வீக குணங்கள், தோற்றம் மற்றும் மகத்துவத்தை இந்த ஸ்தோத்திரம் விளக்குகிறது.

அன்னை மீனாட்சியின் புகழைப் பாடும் மீனாட்சி பஞ்சரத்தினம் என்னும் இந்தப் பாடல் மதுரை அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் திருவிழா நாட்கள், பங்குனி மாத நவராத்திரி என்ற விசேஷ நாட்களில் மட்டுமல்லாது ஏனைய நாட்களிலும் துதித்துப் பாடுவதன் மூலம் அன்னையின் அருட்கடாட்சம் நமக்குக் கிட்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.மீனாட்சி பஞ்சரத்தினம் பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும் 

உத்யத்பானு சஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூர ஹாரோஜ்ஜவலாம்
பிம்போஷ்டீம் ஸ்மிததங்க்த பங்க்தி ருசிராம் பீதாம்பராலங்க்ருதாம்
விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்.

ஆயிரம் கோடி உதய சூரியனின் ஒளிக்கு ஈடான ஒளியை உடையவளும்; வளையல்கள், மாலைகள் போன்ற அணிகளால் பிரகாசிப்பவளும், சிவந்த கோவைப்பழங்கள் போன்ற இதழ்களை உடையவளும்,  புன்னகை தவழும் அழகிய  பல்வரிசைகள் உடையவளும், பீதாம்பரம் என்று அழைக்கபடும் பொன் பட்டாடைகளால் அழகு பெற்றவளும்,  திருமால், பிரம்மன், தேவர் தலைவனாகிய இந்திரன்  போன்றவர்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும்,  உண்மை வடிவாய் இருப்பவளும், மங்கள வடிவானவளும், இரக்கத்தின் பெருங் கடலாய் விளங்கி நிற்பவளும் பெரும் செல்வமாயத் திகழும் மீனாட்சி தேவியை நான் சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.

முக்தாஹார லஸத் கிரீடருசிராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்
சிஞ்சந் நூபுர கிண்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம்
ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமா ஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

முத்துமாலைகளால் அலங்கரிக்கப்பட கிரீடத்தை உடையவளும், ஒளி வீசும் பூர்ண சந்திரனைப்  போன்ற திருமுகத்தை உடையவளும், கிண் கிண் என்று ஒலி செய்யும் மாணிக்க சிலம்புகளை அணிந்தவளும், தாமரை போல் அழகு பொருந்தியவளும், அடியவர்களின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற அருளுபவளும், மலைமகளான  சக்தி தேவியாலும், கலைமகளான சரஸ்வதி தேவியாலும்,  அலைமகளான  லக்ஷ்மி தேவியாலும், வணங்கப்படுபவளும்,கருணைக்கடல் ஆனவளும், பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை சதா சர்வ காலமும்  வணங்குகிறேன்.
 
ஸ்ரீவித்யாம் சிவவாமபாகநிலயாம் ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதீம் ஸ்ரீமத் சபாநாயகீம்
ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

வேதத்தின் வடிவாகத் திகழ்பவளும், உமையொரு பாகமென  சிவபெருமானின் இடப்பாகத்தில் வசிப்பவளும், ஹ்ரீம் என்ற  மந்திரத்தில் (பீஜாக்ஷர மந்திரம்) ஒளி வீசி இருப்பவளும், ஸ்ரீசக்ரத்தின் மத்தியில் வசிப்பவளும், சுந்தரேசுவரனின் சபைக்குத் தலைவியும், ஆறுமுகனான முருகனையும், விக்னங்களை நீக்கும்  விநாயகனையும் பெற்றவளும்; உலகங்களை மயக்குபவளும், கருணைக்கடல் ஆனவளும், பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை சதா சர்வ காலமும்  வணங்குகிறேன்.

 ஸ்ரீமத் சுந்தரநாயிகாம் பயஹராம் ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாசனார்ச்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம்
வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரசிகாம் நானாவிதாமம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்.

சுந்தரேசருடைய நாயகியும், தன்னை வணங்கும் அடியவர்களுடைய பயத்தை நீக்குபவளும், அண்டி நிற்கும் அடியவர்களுக்கு பேரறிவை (ஞானத்தை) நல்குபவளும், குறையொன்றும் இல்லாதவளும், கருநீல நிறம் கொண்டவளும், தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மனால் அர்ச்சிக்கப்பட்ட திருவடிகளை உடையவளும், நாராயணனுடைய தங்கையும், யாழ், குழல், மிருதங்கம் முதலியவற்றின் இசையை இரசிப்பவளும், பல்விதமான உயிர்களுக்கு அன்னையாகத் திகழ்பவளும், கருணைக்கடல் ஆனவளும், பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை சதா சர்வ காலமும்  வணங்குகிறேன்.
 
நானா யோகி முனீந்த்ர ஹ்ருந் நிவஸதீம் நானார்த்த சித்திப்ரதாம்
நானா புஷ்ப விராஜிதாங்க்ரியுகளாம் நாராயணேநார்ச்சிதாம்
நாதப்ரஹ்மமயீம் பராத்பரதராம் நானார்த்த தத்வாத்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

சிறந்த யோகிகள், முனிவர்கள் போன்றவர்களின் இதயத்தில் வசிப்பவளும், வேண்டி நிற்கும் அனைத்துப் பொருட்களையும் தருபவளும், பல விதமான   பூக்களாலும் அழகு பெற்ற திருவடிகளை உடையவளும், நாராயணனால் அர்ச்சிக்கப்பட்டவளும், நாதபிரம்ம உருவாக விளங்குபவளும், உயர்வானவளும், அனைத்துப் பொருட்களிலும் உள்நின்று இயக்குபவளும், கருணைக்கடல் ஆனவளும், பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை சதா சர்வ காலமும்  வணங்குகிறேன்.

banner

Leave a Reply

Submit Comment