Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

சூரசம்ஹாரம் உணர்த்தும் தத்துவமும் கந்த சஷ்டியின் பலன்களும் | Kanda Sashti Soorasamharam In Tamil

February 12, 2021 | Total Views : 810
Zoom In Zoom Out Print

சூரசம்ஹாரம் உணர்த்தும் தத்துவமும் கந்த சஷ்டியின் பலன்களும்:

முருகன் என்றால் அழகு, அழகென்றால் முருகன். தமிழகத்தின் மிக தொன்மையான வழிபாடு முருக வழிபாடு. சிவபெருமானின் மைந்தன் என வடநாட்டினார்கள் கூறினாலும், முருகன் தனது அருளாடல்களை நிகழ்த்தியது எல்லாமே தமிழ் மண்ணில் தான். எனவே தான் முருகனை தமிழ்க்கடவுள் என்கிறோம். முருகனுக்கு அறுபடை வீடுகள் அமைந்ததும் இந்த தமிழ் மண்ணில்தான் என்பது கூடுதல் சிறப்பு. முருகப்பெருமான் சிவாக்னியில் தோன்றியதால் ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம் எனக் கூறப்படுவதுண்டு.ஆன்மிகம் குறித்து மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மனையும், அவனது சகோதரர்களையும் அழிக்க போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாக கொண்டாடி மகிழ்கிறோம். கந்த சஷ்டியின் முக்கியத்துவத்தையும், சூரசம்ஹார திருவிளையாடலைப் பற்றியும் இக்கட்டுரையில் நாம் காண்போம்.

பிரம்மாவின் புதல்வர்கள்:

படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கு தட்சன், காசிபன் என இரண்டு புதல்வர்கள். இவர்களில் தட்சன் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபெருமானுக்கே மாமனாராகினான். ஆணவத்தின் காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரனால் கொல்லப்பட்டான். இந்த தட்சன் தான் தனது அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். 

தட்சனைத் தொடர்ந்து காசிபனும் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கிய காசிபன் தன் பெற்ற தவ வலிமையை எல்லாம் இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

நான்கு புதல்வர்களின் தவம்:

காசிபன் தன் பிள்ளைகளிடம், வடதிசை நோக்கி சென்று சிவபெருமானை நோக்கி தவம் செய்து, வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள் என உபதேசம் செய்தார். இவர்கள் நால்வரும் கடுமையான தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றனர். இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து, 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டம் அரசாளவும், இந்திர ஞாலம் எனும் தேரையும் பெற்றான். 

மேலும் சிவபெருமானிடம் தனக்கு சாகா வரம் வேண்டும் என்று கேட்டான். ஆனால் சிவபெருமானோ பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்பது இயற்கை நியதி. உனக்கு எவ்வாறு அழிவு வரவேண்டும் எனக் கேள் என்றார். சூரபத்மனும் புத்திசாலித்தனமாக ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் அழிய வேண்டும் எனக் கேட்டான்.  அதாவது பெண்ணைத் தவிர வேறு யாரும் ஜீவன்களை உருவாக்க உற்பத்தி செய்ய முடியாது என்பத அவனது கணக்கு. சிவபெருமானும் அந்த வரத்தையே அவனுக்களித்தார்.

சூரபத்மனின் அட்டகாசம்:

சிவபெருமானிடமிருந்து வரங்களைப் பெற்ற சூரபத்மனும், அவனுடன் பிறந்தவர்களும் தங்களது குல குருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தங்களைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்களையெல்லாம் ஆண்டனர். இந்திரன் முதலான தேவர்களை சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

சிவனிடம் தஞ்சம் அடைந்த தேவர்கள்:

அசுரர்களின் இந்த கொடுமையை தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினர். சிவன் அவர்களை காக்கும் பொருட்டு அன்னை பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு). அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர்.

முருகப்பெருமானின் தோற்றம்:

ஆறு குழந்தைகளின் ஆறு திருமுகங்களும், ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களை குறிக்கிறது. பிரணவத்தின் சொரூபமான முருகப்பெருமானிடம்  காக்கும் கடவுள் மகா விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன், படைக்கும் கடவுள் பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். அந்த ஆறு குழந்தைகளையும் அன்னை பார்வதி கட்டியணைக்க, அவர்கள் ஒரே மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும், இரு கரங்களும் கொண்டு முருகப்பெருமானாகத் தோன்றினர். இந்த திருவுருவத்தைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற திருநாமம் முருகப்பெருமானுக்கு ஏற்பட்டது.

அசுரர்களை பற்றி அறிந்த முருகன்:

முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றை அறிந்தார். வேலேந்திய முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே, நீங்கள் அசுரர்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். அஞ்சுதல் வரும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள் செய்வது என் வேலை என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசூரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன் மட்டும் தான்.

முருகப்பெருமான் அனுப்பிய தூது:

முருகன் தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி திருந்தும்படி எச்சரித்தார். ஆனால் சூரபத்மனோ “பாலகன் முருகனா எனக்கு எதிரி. யார் வந்தாலும் தேவர்களை காப்பாற்ற முடியாது என்று இறுமாப்பில் கொக்கரித்தான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் முருகப்பெருமானை சூரபத்மனுடன் போர் புரிய அனுப்பினர்.

கடலுக்குள் நகரம்:

முருகன் போர் புரிய வருவதையறிந்த சூரபத்மன் கடலுக்கு நடுவே வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை  எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால் உலகையே ஆள வந்த முருகப்பெருமானுக்கு இது சாதாரணமல்லவா. எளிதாக அந்த நகரை அடைந்தார் முருகன்.  சூரபத்மன் முருகனைப் பார்த்து, “ஏ சிறுவனே நீயா என்னைக் கொல்ல வந்தாய். உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. இங்கிருந்து ஓடிவிடு என பரிகாசம் செய்தான். தனது உருவத்தை பெரியதாக்கி பயமுறுத்தினான். அவன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன்.  உடனே அவன் மகாசமுத்திரமாக மாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனை பயமுறுத்தினான் சூரபத்மன். உடனே நூறு அக்னி அம்புகளை கடலின் மீது எய்தினார் முருகன்.  கடல் பயந்து பின் வாங்கியது.

கல்லுக்குள் ஈரம்:

இவ்வளவு நடந்த பின்பும் முருகனைக் கொல்வதற்கு சூரபத்மனுக்கு மனம் வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தனது வீரத்துக்கு அழகல்ல என்றும், மிகப்பெரிய பாவமாகவும் கருதினான். அவனுக்குள் இருந்த ஈரத்தை கண்டு தான் முருகப்பெருமான் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தனது விஸ்வரூபத்தைக் காட்டினார். அதைக் கண்டவுன் சூரபத்மனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது.

“முருகா, தெய்வமாகிய உனது கையால் நான் மடிவதை பாக்கியமாக கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவமாகவே இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி எனும் புத்தியைப் பெற வேண்டும்” என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்களித்தார். அதன் பின்னர் தனது ரூபத்தை சுருக்கி, சூரபத்மனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரபத்மனுக்கு ஆணவம் மீண்டும் தலைதூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

முருகப்பெருமான் தன் தாய் பார்வதியிடம் ஆசி பெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். வேல் பட்டதும் மாமரம் இரண்டு துண்டாகப் பிளந்தது. அதன் ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடியின் சின்னமாகவும் ஆக்கினார். சூரசம்ஹாரம் முடிவுக்கு வந்தது. முருகப்பெருமான் போர் புரிந்த இந்த ஆறு நாட்கள் தான் சஷ்டி விழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சூரசம்ஹாரம் உணர்த்துகின்ற தத்துவம்:

முருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூர சம்ஹாரம். சூரபத்மன் ஆணவத்தில் முருகக் கடவுளோடு போர்புரிந்தான். தன் வலிமையாலும் மாயையாலும் முருகனை வெல்ல நினைத்தான். ஆனால், ஆதிமுதல்வானான ஈசனின் மகனுக்கு முன்பாக அவை தோற்றன. முருகனின் கை வேலுக்கு சக்திவேல் என்றுபெயர். அன்னையே தன் அம்சமாக அந்த வேலை முருகக் கடவுளுக்கு வழங்கினார். அந்த சக்திவேல் அசுரர் படையை அழித்தது.
வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன், இறுதியில் தன் மாயையால் வெல்ல நினைத்து மாமரமாகி நின்றான். வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், மாயையை வெல்ல ஞானவேலாக மாறியது. மாயையை இருகூராகக் கிழித்தது. ஞானத்தின் தீண்டுதலால் மாயை அகல அந்த மாமரம், மாயை அற்ற சேவலாகவும் மயிலாகவும் மாறியது. சூரசம்ஹாரம், ஞான உபதேசமாக மாறிப்போனது. பகைவனான சூரபத்மன் முருகக் கடவுளின் புகழ்போற்றும் கொடியும் வாகனமும் ஆனான். ஆணவம் அழிந்து ஞானமும் பெற்றுவிட்டால் எந்த ஆன்மாவும் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பது கந்த சஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம்.

கந்த சஷ்ட விரதமிருக்கும் முறை:

ஆறுநாள்களும் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து திருநீறு தரித்து, முருகக் கடவுளை வணங்க வேண்டும். அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவது சிறப்பு. குறிப்பாக, யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெறும் ஆலயங்களுக்குச் செல்வது விசேஷம். ஆறுநாட்களும் உண்ணா நோன்பிருக்க வேண்டும். ஒருசிலர் பால் பழம் உட்கொள்வது வழக்கம். ஒருசிலர் ஒரு வேளை மட்டும் உப்பில்லா உணவை உண்பர். எதுவாக இருந்தாலும் ஆறுநாட்களும் ஒரே மாதிரி வழக்கத்தைப் பின்பற்றுவது நன்று.

முருகனின் பெருமைகளைப் பாடும், கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல், வேல் வகுப்பு போன்ற துதிகளை நாள்முழுவதும் பாட வேண்டும். இதன்மூலம் மன ஒருமைப்பாடு சாத்தியப்படும். ஆறாவது நாள் சூரசம்ஹாரத்தை தரிசித்து நீராடிப் பின் முருகனை வழிபட வேண்டும். ஒருசிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் உணவு எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. ஏழாவது நாள் காலையில் முருகப் பெருமானை தரிசித்த பின்பு உணவு உண்டு விரதம் முடிப்பதே சிறந்தது.

விரதத்தில் முக்கியமானது பக்தி. இந்த ஆறுநாள்களும் முருகனை மனதில் நினைத்துத் துதித்த வண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருளாசிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கந்தசஷ்டி விரதத்தின் பலன்கள்:

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. திருமணம், வாகனம், வீடு, செல்வம், தீவினைகளிலிருந்து விடுதலை போன்றவைகளைப் பெறலாம். “சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய அனைத்துப் பலன்களையும் பெறலாம்.

banner

Leave a Reply

Submit Comment