Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

முருகப்பெருமானின் வேலின் மகிமைகள் | Murugan Vel Meaning in Tamil

February 12, 2021 | Total Views : 3,404
Zoom In Zoom Out Print

முருகப்பெருமானின் வேலின் மகிமைகள்:

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மையானது வேலாயுதம். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால் அதற்கு வெற்றி வேல் என்று பெயர் வந்தது. அனைத்தையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டும் அல்லாமல் உள்பகையையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது.  அது சிவபெருமானைப் போலவே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது. உங்கள் ராசி மற்றும் நட்சத்திரம் பற்றி அறிய எங்கள் இலவச ராசி கால்குலேட்டர் பயன்படுத்துங்கள்.

பாம்பன் சுவாமிகள் இதை படைஅரசு எனப் போற்றுகிறார். ‘படைநாயகம்’ என்றும் பெயருண்டு. வேலைக் குறிக்கும் சொற்கள் பல உள்ளன. அவை, அயில், ஆரணம், உடம்பிடி, எஃகு, எஃகம், குந்தம், சக்தி, ஞாங்கர், மதங்கு, வாகை, விட்டேறு ஆகும்.

வேற்கோட்டம்:

வேல் வழிபாட்டை முருக வழிபாட்டுக்கும் முந்தையது என்கிறார்கள். வேலுக்கென்றே தனிக்கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதற்கு ‘வேற்கோட்டம்’ என்று பெயர். ‘கோடு’ என்றால் மலை (கிளை என்றும் பொருள் உண்டு. பல கிளைகளால் அமைக்கப்பட்ட வழிபாட்டிடம் என்று கூறுவர்). அக்காலத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள கோயிலை கோட்டம் என அழைத்துள்ளனர். வேலூர் என்ற பெயருடன் அமைந்த தலங்கள் பல உள்ளன. அங்கு வேற்கோட்டம் அமைந்திருந்ததால் அப்பெயர் பெற்றது என்பர்.

அன்னையிடம் வேல் வாங்குதல்:

தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழிக்க வேண்டி சிவபெருமான் முருகனை அழைத்து, “குமாரனே  நீ விரைந்து சென்று அசுரர்களை அழித்து தேவர்களைக் காப்பாற்று” என ஆணையிட்டார். அதோடு தனது பதினோரு ருத்திர அம்சங்களிலிருந்து பதினோரு ஆயுதங்களையும் அளித்தார். அதன் பின்பு அன்னை பார்வதியிடம் “முருகனுக்கு ஆயுதமொன்றை வழங்கு” எனக் கூறினார். அம்பிகை தனது ஒப்பற்ற சக்திகளை வேலாக மாற்றி முருகனுக்கு ஆயுதமாக வழங்கி ஆசீர்வதித்து அனுப்பினார்கள். இந்த வேல் சிவசக்தியரின் அம்சமாகவே தோன்றியது.

புராணங்களில் வேல்:

வேல் சிவந்த நிறம் உடையது. முருகனும் செம்மை நிறம் கொண்டவர். திருவிளையாடல் புராணத்தில்  பாண்டிய மன்னன் கடல் கடந்து சென்று, தனது வேலால் பல நாடுகளை வென்று அவற்றை அடிமைப்படுத்தினான் என்று காணப்படுகிறது. நல்லியக்கோடன் எனும் சிற்றரசனுக்கு முருகன் கனவில் தோன்றி அருளியவாறு, கேணியில் பூத்த பூக்களைப் பறித்து, அவன் பகைவர்கள் மீது எறிந்த போது, அவை வேலாக மாறி அவர்களை அழித்தன என்பதை சிறுபாணாற்றுப்படை என்ற சங்க இலக்கியம் விவரிக்கிறது.

பராசக்தியின் வடிவமே வேலாயுதம்:

வேல் தத்துவம் பற்றி ஆன்றோர்கள் பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்கிறார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட் சக்தி முதலிய சொற்கள் வேலின் உருவாய் உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும். வேலாயுதத்தை பஞ்சாட்சர மூலமந்திரம் என்றும் சிறப்பிக்கிறார்கள்.

வேல்மாறல் பாராயணம்:

வேலாயுதத்தைச் சிறப்பிக்கும் வழிபாடுகளுள் ஒன்று தான் வேல்மாறல் பாராயணம். அருணகிரி நாதர் அருளிச் செய்த வேல் வகுப்பு பாடலின் 16 அடிகளை, முன்னும், பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு வேல்மாறல் பாராயணமாக தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள். முருகப் பக்தர்கள் அனைவரும் முருகனுக்கு உகந்த நாட்களில் வேல்மாறல் பாராயணம் செய்து வழிபட்டு வருகிறார்கள். ஒரு மண்டலம் (48 நாட்கள்) காலம் இதை பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கைகூடும். சத்ருக்கள் பயமும், தீய வினைகளும் நீங்கும், தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.  உடல் நோய்கள் மட்டுமல்லாது மனநோய்களும் நீங்கி வாழ்க்கை சிறக்கும் என்பது ஐதீகம்.

வீட்டில் வேல் வழிபாடு:

வேல் வழிபாடு செய்ய விரும்புபவர்கள் ஏதேனும் முருகன் கோவில் அல்லது ஆறுபடை முருகன் கோயில்களில் ஏதேனும் ஒன்றிற்கு சென்று, அங்கு விற்கப்படும் பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட சிறிய அளவிலான வேல் ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டும். பின்பு அந்த வேல் வாங்கிய முருகப்பெருமான் தலத்தில், சிறிய வேலாயுதத்தை உங்கள் கையில் வைத்திருந்தபடி முருகப்பெருமானை வழிபட்டு, உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் ஒரு புதிய சிகப்பு நிற துணியை விரித்து, அதன் மீது ஒரு வெள்ளிக் கிண்ணம் அல்லது பித்தளை, செம்பு கிண்ணத்தில், புதிய பச்சரிசியை நிரப்பி அந்த வேலை அதில் நட்டு வைக்க வேண்டும். ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றோ அல்லது சுபமுகூர்த்த நாளிலோ உங்கள் பூஜையறையில் வைக்கப்பட்டிருக்கும் வேலை கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு அந்த வேலுக்கு காய்ச்சப்படாத சுத்தமான பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு சாதாரண நீரை கொண்டு வேலுக்கு அபிஷேகம் செய்து தூய்மைப்படுத்த வேண்டும்.

இதன் பின்னர் அந்த வேலையை ஒரு தூய்மையான துணி கொண்டு துடைத்து, மீண்டும் வெள்ளிக் கிண்ணத்தில் புதிய பச்சை அரிசி போட்டு நிரப்பி, அதில் அந்த வேல் நட்டு வைக்கப்பட வேண்டும். இதன் பிறகு அரைத்த சந்தனம், மஞ்சள் மற்றும் குங்குமத்தை அந்த வேலின் இரண்டு பக்கமும் பொட்டு வைக்க வேண்டும். அதன் பிறகு வாசமுள்ள விபூதியை அந்த வேலின் மீது அபிஷேக பொடி போன்று சிறிது தூவி விட வேண்டும்.

இவை எல்லாம் முடிந்ததும் முருகனின் வேல் நட்டு பட்டிருக்கும் கிண்ணத்தில், முருகனுக்கு விருப்பமான பன்னீர் ரோஜாப்பூக்கள் அல்லது செவ்வரளி பூக்களை சமர்ப்பித்து, கற்கண்டு, அவல், பொரி கடலை அல்லது பழங்கள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, தீபதூபம் காட்டி முருகனுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் அல்லது கந்தசஷ்டி கவசம் படித்து வழிபட வேண்டும். மேற்கூறிய முறையில் முருகனின் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் 21 நாட்கள் திட சித்தத்துடன், உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் திரிகரண சுத்தியுடன் செய்து வருவதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் தீருவதற்கான வழி பிறக்கும்.

முருகப்பெருமான் ஏந்தும் விதவிதமான வேல்கள்

முருகப்பெருமானின் கரத்தில் விளங்கும் வேலாயுதம் வடிவாலும், வனப்பாலும் அது செய்யப்பட்ட பொருளாலும் புராணச் சிறப்பாலும் அது நிகழ்த்திய வீரச் செயலாலும் பல்வேறு பெயர்களைப் பெறுகின்றது. இவ்வகையில் அதன் அமைப்பை ஒட்டி சக்திவேல், வஜ்ரவேல், இலைவேல், நெடுவேல் என்ற பெயர்களைப் பெற்றுள்ளது. சக்திவேல் சக்தியின் வடிவாகவும், வஜ்ரவேல் வைரம் பதித்ததாகவும் இருக்கின்றன.

சில வேல்களின் இலைப் பகுதியில் மந்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. இப்படி அமைக்கப்படும் மந்திரச் சக்கரங்கள், மந்திர வடிவங்களையொட்டி அது மந்திரவேல் எனப்படுகிறது. உயர்ந்த ரத்தினங்கள் இழைக்கப்பட்டு செய்யப்பட்ட வேல் நவரத்தினவேல் என்றும், மாணிக்கம் பதித்த வேல் மாணிக்கவேல் என்றும், வைரக் கற்களைக் கொண்டு இழைத்த வேல் வைரவேல் என்றும், தங்கத்தால் செய்யப்பட்ட வேல் தங்கவேல் என்றும், முத்துக்கள் பதிக்கப்பட்ட வேல் முத்துவேல் என்றும் அழைக்கப்படுகின்றன.

வேலுக்கென்று ஒரு கோயில்

கோவை மருதமலை அடிவாரத்தில் வேலுக்கென்று ஒரு தனிக்கோயில் அமைந்துள்ளது. இது வேல் கோட்டம் - தியான மண்டம் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் 6 அடி உயரம் கொண்ட அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வேல் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேலின் தண்டு பகுதியில்  பஞ்ச பூத சக்கரங்கள் செதுக்கப்பட்டுள்ளது. வேலின் முகப்புப் பகுதியில் இயற்கையான வெளிச்சம் விழும்  விதத்தில் விதானத்தில் ஒரு சிறிய துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. முன் மண்டபம் அறுகோண வடிவில் முருகனின் ‘சரவணபவ’ எனும் ஆறெழுத்து மந்திரத்தை குறிக்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.  இம்மண்டபத்தில் நிலவும் அமைதி தியானத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது. இவ்வாலயத்தில் கிருத்திகை, பௌர்ணமி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

சத்ருசம்ஹார வேல்

ராமநாதபுரம் சமஸ்தானத்தை மன்னன் கிழவன் சேதுபதி ஆண்டு வந்த சமயம், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியவர் சாத்தப்பன் என்கிற வீர தளவா வயிரவன் சேர்வை. முருக பக்தரான இவர் அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகனை வழிபடுவது வழக்கம். ஒரு நாள் அவரது கனவில் முருகன் தோன்றி, “என்னை வழிபட இனி நீ திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிப்பட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்கு கிழக்கே கண்ணாமுனை என்ற இடத்தின் மேலே கருடன் வட்டமிடும். அதற்கு கீழே கடலில் மாலையும், எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கடியில்  வள்ளி - தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்றார்.”

இதே போன்ற கனவு திருஉத்திரகோசமங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து கந்தன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்கடியில் முருகன் சிலையைத் தேடினார்கள். பலமணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. கடுமையான ரணத்துடன் திரும்பினார்கள். கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலையையும், வேலையும் எடுத்து வந்தார்.

விஷயம் அறிந்த மன்னர் பெருவயல் ஊரணிக்கரையில் முருகனுக்கு கோவில் கட்ட பொருளுதவி செய்தார். ஆலயப்பணிகளும் விரைந்து நடைபெற்று கும்பாபிஷேகமும் நடைபெற்றது. கடலுக்குள் இறங்கி சிலையை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் ரணம் ஏற்பட்டதால், மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி, ரணபலி முருகன் என்றே அழைக்கப்படுகிறார். ஒருமுறை இந்த ஆலயத்திற்கு வந்த கிருபானந்த வாரியார் நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதிந்திருப்பதை இந்த பெருவயல் கோயிலில் கண்டேன் எனக் கூறியிருக்கிறார்.  இத்தலத்துக்கு பெருமை சேர்ப்பது சத்ரு சம்ஹார வேல் என கூறப்படுகிறது.

இவ்வளவு சிறப்புகளும், பெருமைகளும் வாய்ந்த வேலாயுதத்தையும், வேலனையும் ஆத்மசுத்தியோடு வழிபட்டு வேண்டிய வரங்களைப் பெறுவோம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! சக்திவேல் முருகனுக்கு அரோகரா! ஞானவேல் முருகனுக்கு அரோகரா!

banner

Leave a Reply

Submit Comment