x
x
x
cart-added The item has been added to your cart.

விநாயகர் சதுர்த்தி எப்படி தமிழ் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்

August 6, 2019 | Total Views : 271
Zoom In Zoom Out Print

விநாயகர் சதுர்த்தி எப்படி தமிழ் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்

விநாயகர் சதுர்த்தி என்றும், கணேஷ் சதுர்த்தி என்றும் அழைக்கப்படும் பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாடவிருக்கும் இந்தத் தருணத்தில் பக்தி உணர்வுடன் சேர்த்து நமது தமிழ்க் கலாச்சாரத்தில் விநாயகர் எப்படி பின்னிப் பிணைந்து உள்ளார் என்பதையும் இக் கட்டுரையில் காண்போம்.

தமிழக கலாச்சாரமும் விநாயகர் வழிபாடும்

உலகக் கலாச்சாரங்களில் தலையாய இடம் பெற்றுத், தன்னிகரில்லாமல் விளங்கும் கலாச்சாரம் தமிழ்க் கலாச்சாரம் என்றால் அது மிகை ஆகாது. கலையும் கலாச்சாரமும், காலம் காலமாய் சிறந்து விளங்கும் சொர்க்க பூமியாகத் தமிழகம் விளங்குகின்றது. வான் உச்சியை விஞ்ஞானம் தொட்டு நிற்கும் போதிலும், புதுமையோடு பழமையையும் பாரம்பரியம் மாறாமல் கட்டிக் காப்பதென்பது, தமிழர்களுக்கு கை வந்த கலையாகும். முறத்தால் புலியை விரட்டி அடித்த தமிழ் நங்கையின் “வீரம்” பற்றி நாம் அறிவோம். தன் மகன் மரணத்தின் பிடியில் இருந்த போதிலும், “விருந்தோம்பலை” தவற விடாத அப்பூதியடிகள் பற்றியும் நாம் அறிவோம். தம் “கற்பு நெறியால்” மதுரையை எரித்த கண்ணகி பற்றியும் நாம் அறிவோம். புறாவின் உயிரைக் காக்கத் தன் உடல் சதையை பருந்துக்குக் “கொடையாக” அளித்த சிபிச் சக்கரவர்த்தியைப் பற்றியும் நாம் அறிவோம்.

வீரம், விருந்தோம்பல், கற்பு, நெறி, கொடை மட்டுமின்றி தமிழர்களின் கலாச்சாரத்தில் பக்தியும் இணைந்து இருந்தது என்பதற்கு பல சான்றுகள் உண்டு. அதிலும் சிறப்பாக விநாயகர் மீதான பக்தியிலும், அவரது வழிபாட்டிலும் தமிழக கலாச்சாரத்தின் பங்களிப்பு என்ன என்பதை இங்கு சற்று விரிவாகக் காண்போம்.

தலையில் குட்டிக் கொள்ளும் மரபு:

ஒரு இடத்தின் கலாச்சாரத்தை இலக்கணம் மற்றும் இலக்கியம் வாயிலாக நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கணத்தின் தலை ஆசிரியராய் விளங்கும் அகத்தியர் விநாயகரை பய பக்தியுடன் வணங்கியதோடு மட்டுமல்லாம் வணங்கும் முறையையும் நமக்கு அளித்துள்ளார்.

தமிழக மக்கள் யாவரும் விநாயகரை வணங்கும்போது தம் தலையில் குட்டிக் கொள்வதை நாம் பலமுறை கண்டிருப்போம். இந்த பழக்கம் எப்படி எப்போது ஆரம்பித்தது என்று காணலாமா?

ஒரு முறை அகத்திய முனிவர் சிவனிடம் இருந்த காவிரி நதியைக் கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வரும்போது குடகு மலையில் சிவ பூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது இந்திரன் சீர்காழியில் பூஜை செய்து கொண்டிருந்தான். மழையின்றி நந்தவனம் வாடியது. நாரத முனிவர் இந்திரனை பார்த்து, "அகத்தியருடைய கமண்டலத்தில் உள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும்'' என்று கூறினார். இந்திரன் விநாயகரை வழிபட்டு வேண்டிக் கொண்டான். விநாயகர் காக்கை வடிவம் எடுத்து சென்று காவிரி அடங்கிய கமண்டலத்தின் மீது அமர்ந்தார்.

அகத்தியர் காகத்தைக் கரத்தால் ஓட்டினார். காகம் காலால் உந்திப் பறந்தது. கமண்டலம் கவிழ்ந்து காவிரி பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியர் காகத்தின் மீது சீறிப்பாய்ந்தார். அது சிறுவனாகி நின்றது. அச்சிறுவனை இரு கரங்களாலும் குட்டும் பொருட்டுக் குறுமுனி ஓடினார். பிள்ளையார் அவருக்கு அகப்படாமல் அங்கும் இங்குமாக ஓடினார்.

அகத்தியர் அச்சிறுவனை அணுகிக் குட்டுவதற்கு இரு கரங்களையும் ஓங்கினார். ஐங்கரங்களுடன் விநாயகர் காட்சி தந்தருளினார். அகத்தியர் திகைத்து போனார். விநாயகப் பெருமானே உம்மைக் குட்டுவதற்கா கையை ஓங்கினேனே? என்று தன் தலையிலேயே குட்டிக் கொண்டார்.

விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றி "இன்று முதல் என் முன் பயபக்தியுடன் தலையில் குட்டிக் கொண்டோர் கூரிய மதியும் சீரிய நிதியும் பெறுவார்கள்'' என்று அருளினார். இதனால் விநாயகர் முன் பக்தர்கள் தலையில் குட்டிக் கொள்ளும் மரபு உண்டாயிற்று.

ஒவ்வையாரின் விநாயகர் அகவல்

“சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்/br> பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்/br> வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்/br> பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்”

தமிழர்களின் வேதமாக விளங்கும் விநாயகர் அகவலின் இந்தப் பாடல் வரிகளை கேட்காத காதுகளே தமிழகத்தில் இல்லை என்று கூறலாம்.

“இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!“

மூஷிக வாகனனாம் விநாயகனை 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவ்வையார் தனது விநாயகர் அகவல் மூலம் வேண்டி வழிபட்ட பாடலை விஞ்ஞானம் அசுர வளர்ச்சி கண்ட இந்த நூற்றாண்டிலும் ஒலிக்கச் செய்து விநாயகரை வழிபடும் வழக்கம் இன்றளவும் நாம் காணலாம்.

கர்நாடக இசையும் கணபதி பாடலும்

கர்நாடக இசை மும்மூர்திகளில் ஒருவரான முத்து சுவாமி தீட்சிதர் அவர்கள் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்கீத வித்வான். இவர் சமஸ்கிருததில் புலமை பெற்றவர். இவர் இயற்றிய “வாதாபி கணபதிம் பஜே ஹம்” என்ற பாடல் இன்றளவும் இன்னிசைக் கச்சேரிகளில் பாடப் பெற்று தமிழக மக்களின் இதயங்களைக் கவர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.“

மகா கணபதிம் மனஸா ஸ்மராமி “ – இன்னிசைக் கச்சேரியின் தொடக்கப் பாடலாய் அமைந்து விநாயகர் விக்னங்களை நீக்குபவர், அனைத்திலும் முதலிடம் வகிப்பவர், அவரை வணங்குவதே முறை என்ற வழக்கம் தொன்று தொட்டு நம் கலாச்சாரத்தில் இருப்பதை நாம் யாரும் மறுக்க இயலாது.

கணபதியின் வடிவங்கள்:

சாஸ்திர முறைப்படி விநாயகருக்கு பல வடிவங்கள் உள்ளன என்ற போதிலும் சந்தனம், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடுவார்கள். விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும் இவை யாவும் இயற்கையான தூய்மையான எளிய பொருட்கள் ஆகும். பக்திக்கு எளிமையும் தூய்மையும் அவசியம் என்பதை வழிபாட்டிலும் கடைபிடிக்கும் கலாச்சாரம் மிக உயர்ந்த ஒன்று என்பதில் எள்ளளவும்ஐயமில்லை..

வாழ்க்கைத் தத்துவமும் நிவேதனப் பொருட்களும்:

விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக  வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில்  படைக்கப்படுகிறது. 

கரும்பு:  கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும்  இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம்  என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது.

அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம்  சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

விநாயகர் உலகளவில் வணங்கப்படும் தெய்வம் ஆவார். பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் விநாயகரை எந்த முறையில் வழிபட்டாலும் நம் தமிழ்நாட்டில், விநாயகர் சதுர்த்தி அன்று, வீடு தோறும் களிமண்ணால் செய்த விநாயகரை வணங்கி வழிபடும் வழக்கமும், அன்றாட வாழ்வில் சந்தனம், மஞ்சள், சாணம் போன்ற பொருட்களைக் கொண்டு வழிபடும் வழக்கமும் தமிழக கலாச்சாரத்துடன் விநாயகர் பின்னிப் பிணைந்து காணப்படுவது கண்கூடாகத் தெரியும்.

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி நீங்கள் உங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எங்கள் இதயப் பூர்வமான வாழ்த்துக்கள்

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos