ஆதிபராசக்தியின் உக்கிர வடிவம் தான் காளி தேவி. இவளே கால சொரூபிணியாகவும் விளங்குகிறாள். இவர் சக்தியின் தச மகா வித்யாதேவிகளுள் ஒருவராக கருதப்படுகிறார். காளி என்ற பெயர் வடமொழியில் ‘காலா’ என்ற பெயரின் பெண் சொல் ஆகும். காளி என்பதற்கு காலம் மற்றும் கருப்பு என்று பொருள். காளனின் (ஈசன்) துணைவி தான் காளி. இவரைப் பற்றிய தகவல்கள் அதர்வண வேதங்களிலும், தேவி மகாத்மியத்திலும் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. “எங்கே எப்போது அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கே அப்போது நான் வருகை தருவேன்” என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணா பரமாத்மா கூறியதை, அப்படியே செய்து காட்டுபவள் தான் காளி. எங்கெல்லாம் அதர்மம் இருக்கிறதோ அதை அழிப்பவள் காளி தேவி. நல்லர்வர்களுக்கு நன்மையையே வழங்குவாள். காளியின் தோற்றம் தான் உக்கிரமாக இருக்கிறதேயன்றி, உள்ளம் சாந்த சொரூபமானது. காளியை முறையாக வழிபட்டால் அவரது அருளாசிகள் கிட்டும்.
வரலாற்றில் காளி
ஆதிகால மனிதனின் காலத்தில் தாய்மைப் பண்பு விளங்கும் தெய்வமாகக் கருதப்பட்ட காளி கிபி மூன்றாம் நூற்றாண்டில் வடநாட்டில் குப்தர்கள் காலத்தில் போர்த் தெய்வமாகப் போற்றப்பட்டாள். போருக்குச் செல்வதற்கு முன்பு காளிக்கு ரத்தப் பலியிட்டனர். அடுத்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் காளியை துர்காவாக்கி பார்வதியின் கோப வடிவமாக மாற்றி அமைத்தனர். தேவி மகாத்மியம் இவளை துர்கா என்று அழைத்தது. அடுத்து தோன்றிய காதம்பரி, மாலதி மாதவம் ஆகிய நூல்கள் இவளை ரத்த தாகம் எடுத்த சண்டி என்றும் சாமுண்டி என்றும் அழைத்தன. இவளைப் புராணங்கள் தெய்வம் ஆக்கின.
காளியின் குணாதிசயங்கள்
காளி பார்ப்பதற்கு பயங்கரமான தோற்றத்துடன் காணப்பட்டாலும், தனது பக்தனிடத்தில் ஒரு தாயைப் போன்ற பரிவு, பாசமுடன் இருந்து அருள்பாலிக்கிறாள். காளிதேவி மிகவும் சுறுசுறுப்பானவள். அவளிடம் தாமதம் என்பது எப்போதும் கிடையாது. எமனையே தன் வசப்படுத்தி வைத்திருப்பவள். எதிலும் அச்சமில்லை என்பதே அவள் கொள்கையாகும். உலகத்தின் காலப்பரிமாணத்தைக் குறிப்பவள் இந்த காளி தேவி. இவள் மாகாளி, பிடாரி, பத்ரகாளி, அங்காளி என கிராம தேவதையாக இருந்தும் அருள்பாலிக்கிறாள்.
காளியை போற்றியவர்கள்
காளி தேவியை உபாசனை செய்தர்களில் மிக முக்கியமானவர் இராமகிருஷ்ண பரமஹம்சர். மகாராஷ்டிர மன்னன் சிவாஜி போருக்கு செல்லும் முன் காளி தேவியை வணங்கிவிட்டுத்தான் செல்வான் என்றும், வெற்றியோடு திரும்புவான் என்றும் வரலாறு கூறுகிறது. காளியின் அருள் பெற்ற கவி காளிதாஸ் காளிதேவியின் மீது அற்புதமான பல பாடல்களை பாடியிருக்கிறார். இவர் காளியின் 12 விதமான உபாசனை முறைகளை ‘சித்கன சந்திரிகை’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். துர்க்கா, சப்தசதி நூல்கள் காளி தேவியின் ஆற்றலை விரிவாகக் கூறுகிறது. திருப்புகழில் காளி தேவியை புகழ்ந்து பாடியிருக்கிறார் அருணகிரியார்.
காளி வழிபாடு
காளி தேவியை வழிபடும் பாக்கியம் அனைவருக்குமே கிடைத்து விடாது. முன்னோர்கள் செய்த புண்ணிய பலன்கள் மற்றும் ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளின் நன்மை தரும் பலன்கள் எப்படி அமைந்துள்ளதோ அவர் தான் காளி தேவியை உபாசிக்கும் வாய்ப்பைப் பெறுவார். காளியை வழிபட உடல், மனம் ஆன்ம சுத்தி இருக்க வேண்டியது அவசியம். இல்லற வாழ்க்கையில் இருப்போர் காளியின் உக்கிரமான உருவத்தை வைத்து வழிபட தயங்குவர். இருந்த போதும் காளி தேவியை மனதால் நினைத்து வழிபடலாம்.
அன்னையை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். ஆயினும் வார நாட்களுள் செவ்வாய்க்கிழமை காளிதேவியை வழிபடுவதற்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. ராகு கால வேளையில் அருகிலுள்ள அம்மன் ஆலயத்திற்கு சென்று நெய் அல்லது விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி மனதார வழிபட்டால் எந்தவிதமான பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து அன்னை நம்மை காப்பாற்றுகிறாள். ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் என்பார்கள். அந்த மாதம் முழுவதும் விரதமிருந்து காளியை வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் வந்து சேரும். பயம் விலகி மனோ தைரியம் ஏற்படும்.
காளி மூல மந்திரம்
ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா
மகா சக்தி வாய்ந்த இந்த மூல மந்திரத்தை தேர்ச்சி பெற்ற குருவிடம் பயின்று, அதற்கேற்ற வேளையில் சரியான எண்ணிக்கையில் ஜெபித்தால் அவர்களுக்கு வருங்காலத்தில் நடக்கவிருக்கும் செயல்களை முன்கூட்டியே அறியும் திறனைக் காளி தேவி வரமாக அருளுவாள். செய்வினைப் பிரச்னைகள், கண்ணேறுகள், எதிரிகள் பயம், நீண்ட நாள் நோயில் வாடுபவர்கள், தொழிலில் பிரச்னை உள்ளவர்கள் இந்த மூல மந்திரத்தை ஆத்ம சுத்தியோடு ஜெபித்து காளி தேவியை வழிபட்டு வந்தால் அருளாசிகள் கிடைக்கும். எந்த தீய சக்தியும் அவர்களை அண்ட முடியாது, ஞானம் பெருகும், செல்வம் பெருகும், எதையும் சாதிக்கும் தைரியம் பிறக்கும்.
காளி வழிபாடு பலன்கள்
ஆற்றலே வடிவான காளியை நாம் சரணடைந்தால், அவள் நமது பாவங்களையெல்லாம் பொசுக்கி, நமது லட்சியத்தை அடையச் செய்கிறாள். நமது உடலில் நரம்பு மண்டலத்துக்கு அதிபதியாகத் திகழும் காளி தேவியை வழிபட்டால், எதிர்ப்புகள் இல்லாமல் போவதுடன், எண்ணிய காரியங்கள் நிறைவேறி சந்தோசமான வாழ்க்கை அமையும். தென் திசைக் காவலனான எமதர்மராஜன் காளியின் பெயரைக் கேட்டாலே ஓடி விடுவார். உடலில் பயத்தைப் போக்கி மனோ தைரியத்தை வழங்குகிறாள் காளி. காளியை வழிபடுகிறவர்களுக்கு இன்பம், துன்பம், அறம், அன்பு, வெறுப்பு, அழகு, கோரம், அதர்மம் என்ற அனைத்தையும் ஒன்றாகவே பாவிக்கத் தோன்றும்.

Leave a Reply