AstroVed Menu
AstroVed
search
search

செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி

dateApril 5, 2023

தமிழ் மாதங்களின் முதல் மாதம் சித்திரை மாதம். சித்திரை மாதம் பிறந்தாலே பல பண்டிகைகள் வரிசையாக வரும். அவற்றுள் ஒன்று சித்ரா பௌர்ணமி ஆகும்.  பௌர்ணமி என்றால் முழு நிலவு நாள்.  முழுமை பெற்ற நாள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வரும் என்றாலும் சித்தரை மாதம் வரும் பௌர்ணமி சிறப்பு வாயந்தது.  அன்று தான் சித்ரா பௌர்ணமி என்று கொண்டாடுகிறோம்.

சித்திர குப்தன் வரலாறு:

சித்ரா பௌர்ணமி என்றால் நமக்கு நினைவில் வருவது சித்ர குப்தன். அவரைப் பற்றி நம்மில் பலரும் அறிந்து இருப்போம். சித்திர குப்தன் வரலாறு பல விதமாகக் கூறப்படுகின்றது.

∙ “சித்” என்றால் மனம் என்று பொருள். குப்த என்றால் மறைவு என்று பொருள். மனிதனுடைய உள்மனதில் யாரும் அறியா வண்ணம் மறைவாக இருக்கக்கூடிய எண்ணங்களின் அடிப்படையில் அவரவரின் வாழ்க்கை முறைகளை அமைத்துத்தருபவர் சித்திரகுப்தன்.

∙ பார்வதி தேவி ஒருதடவை விளையாட்டாக ஓவியம் ஒன்று வரைந்தாள். அது மிகவும் அழகாக இருந்தது. உடனே பார்வதிதேவியின் தோழியர்கள் இதற்கு உயிர் கொடுங்கள் என்று வேண்டினர். அன்னை உமையாளும் தான் வரைந்த சித்திரத்திற்கு உயிர் ஊட்டினாள். அது அழகான இளைஞனாக மாறியது. சித்திரத்தில் இருந்து வந்ததால் சித்ரகுப்தன் என்று பெயர் சூட்டினாள்.  

∙ காமதேனுவின் வயிற்றில் உதித்தார் என்றும் அதனால் பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம், நைவேத்யம் செய்யக்கூடாது. எருமைப்பால், எருமைத்தயிர்தான் அபிஷேகம், நைவேத்யம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவர்.

∙ ஒரு தடவை எம தர்மன் சிவ பெருமானிடம், தனியொரு நபராக கோடிக்கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை மேற்கொள்ளும் பணி கடினமாக இருப்பதாகவும் தனக்கு ஒரு உதவியாளர் தேவை என்றும் கேட்டார். உடனே சிவபெருமான் பிரம்மவிடன் எம தர்மனுக்கு உதவியாளரைத் தரும் பொறுப்பை அளித்தார். பிரம்மாவும் இதற்கு உரிய நபர் எம தர்மனின் தந்தை சூரியனே  என முடிவு செய்தார். பிரம்மா, சூரியனுக்குள் ஒரு அக்னியை தோற்றுவித்தார். மனதுக்குள் புகுந்த மாயத்தால் காதல் ஏற்பட்டது. அதன்பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிர்பட்ட வானவில்லின் ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக உருமாற்றி அப்பெண்ணை நீளாதேவி என்று பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார்.அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்திர புத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார்.

சித்ரகுப்தர் காஞ்சியில் சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் இருந்து பூஜை செய்தார். அதன் பயனாக அறிவாற்றலும் எல்லா சித்திகளும் அவருக்கு கிடைத்தன. ஆகவே தனது சக்தியினை சோதிக்க விரும்பி படைப்புத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார். பிரம்மா உட்பட அனைவரும் அதிர்ந்தனர்.

இதனை சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம் மக்களின் இரவு,பகல் என்று பொழுதினைக் கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். அதே போல் நீயும் மக்களின் கணக்கினை அதிலும் பாவ, புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக. படைப்புத் தொழில் உனக்கன்று. அது பிரம்மனின் தொழில் என அறிவுறுத்தினார். அன்றில் இருந்து சித்திர குப்தன் மக்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதி எமனிடம் அளிக்கும் பணியை புரிவதாக ஐதீகம்.

சித்திர குப்தன் வழிபாடு:

சித்ரா பௌர்ணமி அன்று சித்ரகுப்தன் வழிபாடு செய்வது சிறந்தது. சித்திர குப்தன் யம தர்மராஜனின் கணக்காளர் ஆவார்.  அவர் நமது பாவ புண்ணிய கணக்குகளை ஏட்டில் எழுதி நாம் இறக்கும் தருவாயில் யம தர்மனிடம் அறிவிப்பார் என்பது ஐதீகம். வானவில்லான அவரது தாயின் பல வண்ணங்களை உணர்த்தும் பொருட்டுதான் சித்திரகுப்தருக்கு பலவண்ண துணியைச் சாத்துவார்கள். சித்திரகுப்தன் கேது என்ற கிரகத்திற்கு உரிய கடவுள். அவருக்கு கொள்ளினால் செய்யப்பட்ட வடை அல்லது சுண்டல் படைக்க வேண்டும். மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சித்ர குப்தனுக்கு காஞ்சிபுரத்தில்  ஒரு ஆலயம் உள்ளது. வீட்டிலேயே சித்திர குப்தனை வழிபடலாம். சர்க்கரை பொங்கல், இளநீர், அப்பம் மோர், பானகம் போன்ற கோடைக் காலத்தில் உண்ணக் கூடிய உணவு வகைகளை நிவேதனம் செய்து நாம் உண்ணலாம்.  

வழிபாடு செய்வதால் என்ன பலன்? .

சித்ரா பௌர்ணமி அன்று சித்ர குப்தனை வழிபடுவதன் மூலம் நமது எண்ணங்கள் தூய்மை அடையும். நாம் பாவ செயல்களைச் செய்யாமல் புண்ணிய செயல்களைச் செய்யும் வகையில் நமது எண்ண ஓட்டங்கள் தூய்மை அடையும். பாவ புண்ணியம் செய்ய தூண்டுவது மனம். மனதை செம்மைபடுத்தி புண்ணிய வழியில் மனதை செலுத்தும் வழியை சித்திர குப்தன் நமக்கு அருள்வார். அதன் மூலம் செம்மையான வாழ்வு கிட்டும். செல்வ வளங்களும் பெருகும்.


banner

Leave a Reply