Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

அக்னி ஹோத்திரம் முழு தகவல்கள்

March 7, 2023 | Total Views : 620
Zoom In Zoom Out Print

அக்னி ஹோத்திரம்  என்றால் என்ன? 

அக்னி ஹோத்திரம் என்பது ஒரு வகை ஹோமம். இது தினசரி அக்னியை வணங்கும் ஹோமம் ஆகும். அக்னி ஒன்று தான் எதையும் தனதாக ஆக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றது. பொதுவாக ஹோமம் செய்வதற்கு பல மந்திரங்கள் உள்ளன. அது போல ஹோமத்தில் சமர்பிப்பிபதற்கும்  சமித்துக்கள் உள்ளன இந்த ஹோமத்திற்கு இந்த சமித்து சமர்பிக்கப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது. பொதுவாக ஹோமங்கள் புரோகிதர்கள் மூலம் செய்விக்கப்படும். ஆனால் அக்னி ஹோத்திரம் என்பது அவற்றில் இருந்து வித்தியாசப்பட்டது. இதனை ஔபாசனம் என்றும் கூறுவார்கள். வீட்டின் ஒரு பகுதியில், சிறு அக்னி குண்டம் அமைத்து, அக்னி வளர்த்து அதனை அணையாமல் காத்து, நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் (சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனம்) ஒரு கிருஹஸ்தன் காயத்ரி மந்திரம் ஓதி செய்யும் சிறு வேள்வியாகும். இவ்வேள்வியை யார் உதவியுமின்றி தனிமனிதன் செய்ய வேண்டியது.

பண்டைக்காலத்தில் அக்னி ஹோத்திரம் :

பண்டைக் காலத்தில் இந்த ஹோமம் ஒரு சில இனத்தைச் சார்ந்த பிரம்மச்சாரிகளால் செய்யப்படது. மேலும் க்ருஹஸ்தாச்ரமத்தில், அக்னி உபாஸனை திருமணமான நாளில் இருந்து ஆரம்பமாகிறது. விவாஹத்தின் போது வளர்க்கும் அக்னியைக் காப்பாற்றி, அதை மணமகன் இல்லத்திற்கு கொண்டு சென்று அன்று ஸாயங்காலம், ஸந்தியாவந்தனம் செய்துவிட்டு, பிரவேச ஹோமம் செய்து ஔபாஸனம் ஆரம்பம் செய்வார்கள். அதிலிருந்து அந்த அக்னியைக் காப்பாற்றி ஒரு வருஷம் ஔபாஸனம் செய்து, பிறகு சேஷ ஹோமம் செய்வார்கள்.

அப்படி கொண்டுவரப்பட்ட அக்னியை, தம்பதிகள் தினமும் காலையிலும் மாலையிலும் ஔபாஸனம் செய்து அக்ஷதையிட்டுக் காப்பாற்றுவார்கள். பிரதி பிரதமையன்றும், அந்த அக்னியில் பாகம் செய்த அன்னத்தைக் கொண்டு ஹோமம் செய்வார்கள். அதற்கு ஸ்தாலீபாகம் என்று கூறுவார்கள். புருஷன் உரிய காலங்களில் வீட்டில் இல்லாமல் வெளியே போயிருந்தால், மனைவி ஒவ்வொரு வேளையும் ஒருபிடி அரிசி அந்த ஔபாஸனாக்னியில் போட்டு அதைக் காப்பாற்றி வருவார்கள். சில நாட்களுக்கு அப்படியும் செய்வதற்கில்லாமல் ஏற்பட்டு விட்டால், அத்தனை நாட்களுக்கு அக்னியில் இடவேண்டிய அரிசியை தானம் செய்து விட்டு மறுபடி ஆரம்பிக்க வேண்டும். இதற்கு புனஸ்ஸந்தானம் என்று பெயர்.ஔபாஸன அக்னியை கையில் எடுத்துப் போக முடியாமல், வேறு ஊருக்குப் போக நேர்ந்தால், அந்த அக்னி சக்தியை ஒரு ஸமித்தில் மாற்றி எடுத்துப் போய், அங்கு அந்த ஸமித்திலுள்ள அக்னி சக்தியை லௌகிக அக்னியில் இறக்கி ஔபாஸனம் ஆரம்பிக்க வேண்டும். இப்படி ஸமித்தில் மாற்றுவதற்கு ஸமித்ஸமாரோபணம் என்று பெயர்.

அக்னி ஹோத்திரம் செய்யத் தேவையான பொருட்கள்:

பிரமிட் தோற்றம் கொண்ட தாமிரத்தால் (செப்பு) ஆன ஹோம குண்டம் மேல்பக்க சதுரம் 14 ½ x 14 ½  கீழ் பக்க சதுரம் 5 ½ x 5 ½   சரிந்து வரும் கோணம் 59.2. பாகை இருக்க வேண்டும். இந்த அளவில் தான் இருக்க வேண்டும்.  (தாமிரம் நெருப்பின் ஆற்றலை கடத்த வல்லது. கூம்பு வடிவம் அதனை சரி விகிதத்தில் கடத்தும் தன்மை கொண்டது) 

பசுவின் சாணம் கொண்டு தயாரிக்கப்பட்ட வறாட்டி (பசுஞ்சாணம் நச்சுக் கொல்லியாக செயல்படக் கூடியது, உரமாக உபயோகிக்கத் தக்கது )

பசு நெய்

முனை உடையாத பச்சரிசி

ஆல், அத்தி, அரசு, புரசு, வில்வம் மரத்தின் காய்ந்த குச்சிகள் -இவை சமித்துக்கள் என்று கூறப்படும். இவற்றை ஹோமத்தில் சமர்பிக்க வேண்டும்.  

அக்னி ஹோத்திரம் செய்வது எளிதானதா?

பொதுவாக ஹோமம் செய்வதற்கு பல விதமான பொருட்கள் மற்றும் ஆசார அனுஷ்டானங்கள் தேவைப்படும். மந்திரங்கள் அதிகம் இருக்கும். அவற்றை சரியாக உச்சரிக்க வேண்டும். அதற்கென  அதிக நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த அளவுக்கு நியமங்கள் ஏதும்  இன்றி சில மணித்துளிகளில் எளிதான மந்திரம் கூறி வீட்டிலேயே நாமாகவே செய்யக் கூடிய ஹோமம் தான் அக்னி ஹோத்திரம் ஆகும்.

அக்னி ஹோத்திரம் எப்போது செய்ய வேண்டும்?

அக்னி ஹோத்திரம் காலை மாலை என இரண்டு வேளையும் செய்ய வேண்டும். காலையில் சரியாக சூரிய உதயத்தின் போதும் மாலையில் சரியாக சூரிய அஸ்தமனத்தின் போதும் இந்த ஹோமத்தை செய்ய வேண்டும்.

அக்னி ஹோத்திரத்தை யார் செய்யலாம்?

அக்னி ஹோத்திரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி செய்யலாம். வீட்டு விலக்கானவர்கள் மற்றும் நோயாளிகள் செய்யக் கூடாது.

அக்னி ஹோத்திரம் செய்யும் முறை :

தினமும் காலை சூரிய உதயத்திற்கு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் முன்பாகவே ஹோத்திற்கு தயாராகும் வகையில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பசுஞ்சாண வறாட்டியையும் உலர் மரக்குச்சிகளையும் பிரமிட் உருவ தாமிர பாத்திரத்தில் உள்ளே காற்றோட்டத்துடன் சரியாக எரியும் வகையில்  வைக்க வேண்டும். கற்பூரம் கொண்டு ஜுவாலை உருவாக வேண்டும். புகை உண்டாக்கக் கூடாது. காலை மாலை இரண்டு வேளையும் அந்தந்த நேரத்திற்கு உரிய மந்திரங்களைக் கூறி இரண்டு சிட்டிகை அரிசியை பசு நெய்யில் தோய்த்து ஹோமத்தில் இட வேண்டும். இந்தவேள்வித் தீயை தவறாமல் காலை மாலை எனஇரண்டு நேரத்திலும் வளர்க்க வேண்டும்.

அக்னி ஹோத்திர மந்திரம் :

காலை வேலையில் சொல்ல வேண்டிய மந்திரம்

சூர்யாய ஸ்வாஹா சூர்யாய இதம் நமம   ப்ரஜாபதயே ஸ்வாஹா  ப்ரஜாபதயே இதம் நமம

மாலை வேளையில் சொல்ல வேண்டிய மந்திரம்

அக்னயே ஸ்வாஹா அக்னயே இதம் நமம  ப்ரஜாபதயே ஸ்வாஹா  ப்ரஜாபதயே இதம் நமம

அக்னி ஹோத்திரதத்தின் சிறப்பு:

ஹோமத்தில் இருந்து வரும் புகை  நம்மைச் சுற்றியுள்ள காற்றில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்க வல்லது. அஜீரணக் கோளாறு சுவாசக் கோளாறு போன்றவற்றை நீக்க வல்லது.  நாள் பட்ட காயங்கள் ஆறும். சரும நோய்களை நீக்க வல்லது. சமித்துக்கள் எரிந்து வரும் ரட்சை எனப்படும் சாம்பல் தூய தன்மை பொருந்தியது. இதனை  நமது வீட்டைச் சுற்றி தூவ பூச்சிகள் அணுகாது. திருஷ்டி தோஷங்கள் அணுகாது. மண்ணில் தூவினால் நல்ல உரமாகி செடி கொடிகள் நன்கு வளரும். இந்த சாம்பல் பிராண சக்தியை அதிகரிக்க வல்லது.

அக்னி ஹோத்திரதத்தின் சிறப்பு  1984 ஆம் ஆண்டு  போபாலில் விஷ வாயு கசிவுத் தன்மையின் போது வெளியானது. பல ஆயிரக் கணக்கானோர் இந்த விஷ வாயு தாக்கி இறந்த நேரத்தில் இந்த அக்னி ஹோத்திரம் ஒரு குடும்பத்தையும் அவர்களைச் சுற்றி இருந்த சிலரையும் காத்துள்ளது என்பது நிரூபணமானது.

அக்னிஹோத்ரி:

அக்னி ஹோத்திரம் வேள்வியை செய்பவருக்கு ”அக்னி ஹோத்திரி” எனும் சிறப்பு பெயரிட்டு அழைக்கின்றனர். அக்னி ஹோத்திரி இறப்பின், அவன் அக்னி ஹோத்திரத்திற்காக வளர்த்த அக்னி குண்டத்திலிருந்து நெருப்பு எடுத்து அவனின் சவ உடலை எரிப்பர். பின்னர் அவன் வளர்த்த அக்னி குண்டத்தின் நெருப்பு அணைக்கப்பட்டுவிடும். இப்படி ஆயுட்காலம் முழுவதும் காக்கப்பட்ட அக்னியிலேயே, மரணத்திற்குப்பின், ஒருவருடைய சரீரம் ஆகுதி செய்யப்படவேண்டும். பிரேதத்துடன் நெருப்புச் சட்டி எடுத்துப் போவது என்பது இந்த அக்னியைத்தான்.ஒருவருடைய பத்னி அவருக்கு முன்னால் இறந்தால் அந்த அக்னி அவளுக்கு உபயோகப் படுத்தப்பட வேண்டும். பத்னியை இழந்தவன் அக்னி காரியம் செய்யும் உரிமையை இழக்கிறான்.

banner

Leave a Reply

Submit Comment