ஆடி அமாவாசையில் எள்ளும், தண்ணீரும் இரைப்பது எப்படி பித்ருக்களை போய் சேரும்?

நமது முன்னோர்கள் பித்ரு லோகம் என்று சொல்லப்படும் தென்புலத்தில் வாசம் செய்வதாக ஐதீகம். அமாவாசை தோறும் தர்ப்பணம் மூலம் நாம் அளிக்கும் எள் மற்றும் நீரினை ஏற்று திருப்தி அடைவார்கள் என்பது உணர்வுப்பூர்வமான நம்பிக்கை ஆகும். அவர்கள் வசிக்கும் மேலுலகத்தில் இருந்து பித்ருக்கள் பூலோகத்திற்கு வருவதற்கான நேரத்தை பற்றி மூன்று விதமாக சாஸ்திரத்தில் கணக்கிடப்பட்டுள்ளது. இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை. அடுத்ததாக நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள்தான் புரட்டாசி மகாளய அமாவாசை எனப்படுகின்றது, மூன்றாவதாக பூலோகத்தில் இருந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாளே தை அமாவாசை ஆகும். அதனால் தான் எந்த அமாவாசையை தவறவிட்டாலும் இந்த மூன்று அமாவாசை தினங்களில் நாம் பித்ருக்களுக்கு தவறாமல் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.
தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். நம் முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் கொடுத்து வணங்க வேண்டிய நாள். இன்றைய தினம் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும். எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். எனவே தான் இந்த தர்ப்பணம் தில தர்ப்பணம் என்று கூறப்படுகிறது.
யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பலருக்கும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு. தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும், யாருமில்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.
அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, `நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்' என்று கூறுவார்கள். ஜோதிட ரீதியாக சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை ஆகும். சந்திரன் தேய்பிறையிலிருந்து விடுபட்டு வளர்பிறைக்குச் செல்லும் நாள். ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய் சந்திரன் தந்தை சூரியனுடன் இணைந்திருக்கிறார்.
இந்த நாளில் நாம் தர்ப்பணம் அளிக்க வேண்டியது அவசியம். புனித நதிகளில் நீராடி, நீர் கரைகளில் தர்ப்பணம் கொடுப்பது நம்முடைய பாவங்களை மட்டுமின்றி நம்முடைய முன்னோர்களின் பாவங்களையும் போக்கும் என்பார்கள்.அப்படி நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டில் கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இது பல அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுத்த புண்ணிய பலனை பெற்றுத் தரும்.
தர்ப்பணம் மூலம் நாம் அளிக்கும் எள்ளும் தண்ணீரும் நமது பித்ருக்களை சென்று அடையும். அவர்கள் எந்த ரூபத்தில் இருந்தாலும் பித்ரு தேவதைகள் அவர்களிடம் அதனைக் கொண்டு சேர்த்து விடுவார்கள். பித்ருக்களும் அதனைப் பெற்று சந்தோசம் அடைவார்கள். நமக்கும் நமது சந்ததியினருக்கும் அவர்கள் ஆசிகளை வழங்குவார்கள்.
