ஆடி மாத விழாக்களுக்கு இத்தனை சிறப்புகளா ?

ஆடி மாதம் சக்தி மாதம் என்றும் அம்மன் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மனின் சக்தி இந்தப் பூவுலகெங்கும் வியாபித்து இருக்கும். அதனால் தான் ஆடி மாதத்திற்கு இத்தனை சிறப்புகள். இந்த மாதத்தில் விழாக்கள் களை கட்டும். பெண்கள் தங்கள் கணவன், குழந்தை, குடும்பம் சுபிட்சமாக இருக்க இந்த மாதத்தில் பல விரதங்களை அனுஷ்டிப்பார்கள். இந்த மாதத்தை விழாக்களின் மாதம் என்று கூறும் அளவிற்கு தொடர்ந்து விழாக்கள் இருக்கும். ஆடிப் பெருக்கு, ஆடிக் கிருத்திகை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடி தபசு என விழாக்கள் வரிசையாகவும் விமரிசையாகவும் நடை பெறும். அம்மனுக்கு பால் அபிஷேகம், கூழ் ஊற்றுதல் என மக்கள் அம்மனை வேண்டி வணங்க, அம்மனும் மனம் மகிழ்ந்து அவர்களின் வாழ்வு செழிக்க அருளாசிகளை வழங்குகிறாள்.
கற்கடக மாதம் :
ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்துதான் பல சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர். ஆடியை கற்கடக மாதம் என்றும் அழைக்கிறார்கள். ஆடி மாதத்தை சிறப்பாக பார்க்க பல்வேறு காரணங்கள் உள்ளன. உமையொரு பாகமாய் சிவன் விளங்கவும் சிவனை எப்போதும் நீங்காமல், அவரின் உடலில் சரிபாதியை பெற வேண்டும் என்றும், சிவனையும் விஷ்ணுவையும் ஒரே ரூபமாக காண வேண்டும் என்றும் அம்மன் தவம் செய்த மாதம். அம்பாள் தவம் செய்த மாதம் என்பதால் ஆடி மாத செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், ஞாயிறு கிழமைகளில் கூழ் ஊற்றப்படும் நிகழ்வும் நடத்தப்படுகின்றன.
ஆடிப்பிறப்பு :
ஆடி மாத பிறந்ததுமே தட்சிணாயன காலம் துவங்கி விடுகிறது. உயிர்களை காக்கும் சூரியன் தனது ரதத்தை தென் திசை நோக்கி பயணிக்க செய்யும் காலம். ஆடி முதல் மார்கழி வரையிலான 6 மாதங்கள் தட்சிணாயனம். அதாவது தேவர்வர்களின் இரவு நேரமாகும். இந்த மாதத்தில் சந்திரனின் வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிப்பார்.
ஆடி செவ்வாய் :
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் மிகவும் சிறப்பானது. அந்த நாளில் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்துவதன் மூலம் அம்மனின் அருளாசிகள் நமக்குக் கிட்டும் என்பது ஐதீகம். சுமங்கலிப் பெண்கள் அன்று அம்மனை வழிபட்டு விரதம் இருப்பதன் மூலம் மாங்கல்ய பலம் கூடும்.
ஆடி வெள்ளி :
ஆடி வெள்ளியில் சுமங்கலிப் பெண்கள் கணவரின் ஆயுள் நீடிக்கவும், தீர்க்க சுமங்கலி வரம் பெறவும் விரதம் இருக்கிறார்கள். ஆடி வெள்ளியில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.
ஆடி ஞாயிறு :
ஆடி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபடுவார்கள்.
ஆடி அமாவாசை :
ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதுர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும். சூரியனும் சந்திரனும் கடக ராசியில் ஒன்று சேரும் காலம் ஆடி அமாவாசை ஆகும். ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறப்பான நாளாகும். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் ஆறு மாதம் தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும்..
ஆடிப்பூரம் :
ஆடி மாதத்தில் ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி பூரம், ஆடிப் பெருக்கு என பல கொண்டாட்டங்கள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அதில் ஆடி பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். இந்த நாளில்தான் சக்தி தேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூரம் நட்சத்திரம் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.அம்மன் பிறந்தநாள்
ஆடிப்பெருக்கு :
ஆடிப்பெருக்கு என்றால் ஆடி மாதம் 18-ந் தேதியை குறிக்கும். ஆடி மாதம் 18ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும் ஒரு பண்டிகையே ஆடிப்பெருக்கு ஆகும். ஆடிப்பெருக்கை ஆடி 18, பதினெட்டாம் பெருக்கு, ஆடி நோம்பு என்றும் மக்கள் அழைப்பார்கள். காவிரி கரையோரங்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும்,தாமிரபரணி ஆற்றின் கரையிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.
ஆடிக்கிருத்திகை :
அம்மன் மற்றும் இறை வழிபாடுகள் செய்ய உகந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாள் மிகவும் சிறப்புக்குரியது. 'ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை' என்பது தமிழ் ஆன்றோர் வாக்கு ஆகும். ஆடிக் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும்; செவ்வாய் தோஷம் அகலும்; திருமணத் தடைகள் நீங்கும்.
ஆடி தபசு :
ஆடி அமாவாசையை போல் ஆடி பெளர்ணமியும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா கொண்டாடப்படும். அம்பிகையின் கோரிக்கையை ஏற்று, சிவனும் - விஷ்ணுவும் இணைந்து சங்கர நாராயணராக காட்சி அளித்ததும் இந்த நாளில் தான். ஊசி முனையில் தவம் இருந்த அம்பிகைக்கு தனது உடலில் சரி பாதியை கொடுத்து சிவ-சக்தி ஐக்கியமானதும் இந்த நாளில் தான்.
